சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை கண்டுபிடித்து, அவற்றை அழிப்பதற்கான தீர்மானம் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
அரபு நாடான, சிரியாவில் நடந்த உள்நாட்டு கலவரத்தின்போது, கிளர்ச்சியாளர்களை ஒடுக்க ராணுவத்தினர் ரசாயன குண்டுகளை வீசியதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
ஆகஸ்ட், 21ம் திகதி அங்குள்ள டமஸ்கஸ்சில் ரசாயன குண்டுகள் வீசப்பட்டதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, சிரியா மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா நடவடிக்கை எடுத்தது. இதற்கு, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.
“தாக்குதலை தவிர்க்க சிரியா, தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை, சர்வதேச நாடுகளிடம் ஒப்படைக்க வேண்டும்’ என, அமெரிக்கா வலியுறுத்தியது.
இது தொடர்பாக, அமெரிக்கா ரஷ்யா நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதன்படி, சிரியா, தன்னிடம் உள்ள ரசாயன ஆயுதங்களை, சர்வதேச நாடுகளிடம் ஒப்படைக்க தயார் என அறிவித்தது.
இதையடுத்து, சிரியாவில் உள்ள ரசாயன ஆயுதங்களை கண்டுபிடித்து, அவற்றை அழிப்பதற்கான தீர்மானம், நேற்று ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில், ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுகுறித்து ஐ.நா., பொதுச் செயலர், பான் கீமூன் கூறுகையில்,
“வரலாற்று சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம், அமைதியை விரும்பும், சர்வதேச சமுதாயத்துக்கு, நம்பிக்கையூட்டும் வகையிலான நல்ல செய்தி கிடைத்துள்ளது,” என்றார்.