அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் பேசியதற்காக ஈரான் ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானி மீது ஷூ மற்றும் முட்டைகளை வீசி எதிர்ப்பை தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானில் கடந்த 1979ம் ஆண்டு ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பின் அமெரிக்காவுடனான உறவு முறிந்தது.
இதற்கிடையே ஈரான் இரகசியமாக அணு ஆயுதங்களை தயாரிப்பதாக குற்றம் சாட்டிய அமெரிக்கா, பொருளாதார தடைகளை விதித்துள்ளது.
இதனால் ஈரானில் எடுக்கப்படும் கச்சா எண்ணெயை, மற்ற நாடுகளுக்கு விற்க முடியாமல் திண்டாடி வருகிறது.
இந்நிலையில் புதிய ஜனாதிபதியாக பொறுப்பேற்றுள்ள ஹசன் ரவ்ஹானி, ஐ.நா பொதுசபை கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றார்.
அப்போது அணு ஆயுதங்களை தடை செய்வது குறித்து ஐ.நா பிரதிநிதிகளுடன் பேசத் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுடன் தொலைபேசியில் 15 நிமிடங்கள் பேசியுள்ளார்.
அமைதி நடவடிக்கையில், ஆர்வம் காட்டும் ரவ்ஹானிக்கு, அவரது ஆதரவாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க பயணத்தை முடித்து இரண்டு நாட்களுக்கு முன் ரவ்ஹானி தாயகம் திரும்பினார்.
டெஹ்ரான் விமான நிலையத்திலிருந்து ஆதரவாளர்கள் புடை சூழ வெளியே வந்த ரவ்ஹானி மீது ஒருவர் ஷூவை வீசினார், இன்னும் சிலர் முட்டைகளை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் அமெரிக்காவை சாத்தான் என கூச்சலிட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.