![](http://www.vvtuk.com/wp-content/uploads/2013/10/belgium_arpaddam_003-133x200.jpg)
தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த மாவீரர்களினதும், மக்களினதும் அர்ப்பணிப்பை கருத்திற்கொண்டு, தங்களின் உரிமைகளுக்காக நாங்களே போராட வேண்டும் என்பதையும் மனதிலிருத்தி அமைதி வழியில் நீதி கேட்க அணியணியாய் அணிதிரண்டனர் ஐரோப்பிய வாழ் தமிழ் மக்கள்.
பொது சுடர் ஏற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில்,1330 கி.மீற்றர்கள் மிதிவண்டிப் பயணம் மேற்கொண்ட கிருபா மற்றும் சிவந்தன் ஆகியோரை மக்கள் உணர்வுபூர்வமாக வரவேற்றிருந்தனர்.
இந்நிகழ்வில் போல் மொபி அவர்களின் உதவியாளரும், பெல்ஜியம் இடதுசாரிக் கட்சி உறுப்பினர் கேர்க் அவர்களும் உரையாற்றியிருந்தனர். சிறப்புப் பேச்சு மற்றும் தமிழ் உணர்வாளர்களின் பேச்சுக்களும் இடம் பெற்றன.
சிறீலங்கா மேற்கொள்ளுகின்ற தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக சுயாதீன விசாரணையை முன்னெடுக்கவும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிக்கொள்ளவும் தமிழர்களின் தாயகம், தேசியம் தன்னாட்சியை ஏற்றுக்கொள்ளவும் வேண்டி கலந்துகொண்டிருந்த மக்கள் கொட்டொலி எழுப்பியிருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவினை ஐரோப்பிய பாராளுமன்ற மனித உரிமைகளுக்கான ஆணையகத்தின் அதிகாரிகளிடத்திலும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகாரங்களுக்கான அலுவலகத்திலும் கவனயீர்ப்பு நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் கையளித்திருந்தனர்.
உணர்வுபூர்வமாக இடம்பெற்ற சந்திப்புக்களில் புலம்பெயர் தமிழ்மக்களின் தொடர்ச்சியான போராட்டம் தங்களின் நடவடிக்கைகளுக்கும் அவசியமானதொன்று என்பதை வலியுறுத்தியிருந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர்.