வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் அலரி மாளிகையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்..
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையிலேயே பதவிப் பிரமாண நிகழ்வுகள் நடைபெறும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவத்துள்ளது.
முன்னதாக யாழ்ப்பாணத்தில் பதவிப் பிரமாண நிகழ்வுகளை நடாத்த உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.
எதிர்வரும் 7ம் திகதி புதன் கிழமை காலை 9 மணிக்கு ஜனாதிபதி முன்னிலையில் அலரி மாளிகையில் விக்னேஸ்வரன் பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
இதேவேளை, இதுவரையில் அமைச்சர்கள் பற்றிய தீர்மானம் எடுக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
பெரும்பாலும் எதிர்வரும் 11ம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில், விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அவரின் முன்னிலையில் கூட்டமைப்பின் உறுப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன், அலரி மாளிகையில் சம்பந்தன் நடத்திய பேச்சுவார்த்தையின் பின்னரே இந்தத் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பதவிப் பிரமாண நிகழ்வுகள் குறித்து ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.