வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் விவாகரத்துப் பெற்று விட்டன. எனவே, மீண்டும் வடக் கும் கிழக்கும் இணைவதற்கான சாத்தியங்கள் இல்லை. காணி அதிகா ரங் கள் குறித்த பிரச்சினைக்கும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவி த்தார். வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்புடன் சகவாழ்வுடன் செயற்படுவதற்கான அவசியத்தை ஆளும் கட்சி உணர்ந்துள்ளது.மக்களின் இது தொடர்பான தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை கூட்டமைப்பும் எம்முடன் இணைந்து செயற்படும் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
வட மாகாண சபையில் முன்னாள் நீதியரசர் விக்கினேஸ்வரன் முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். வடக்கு மக்களின் சட்ட ரீதியான தீர்ப்புக்கு நாங்கள் தலை வணங்குகின்றோம். மக்களின் தீர்ப்பை நாங்கள் ஏற்கின்றோம்.
அந்தவகையில் வடக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சகவாழ்வுடன் செயற்படுவதற்கான அவசியத்தை ஆளும் கட்சி உணர்ந்துள்ளது. மக்களின் இது தொடர்பான தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம். அதேவேளை கூட்டமைப்பும் எம்முடன் இணைந்து செயற்படும் என்று நம்புகின்றோம். மக்களின் தீர்ப்பை ஏற்று செயற்படுவோம்.
ஆரோக்கியமாக இருக்கும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கில் ஆரோக்கியமான முறையில் செயற்பட்டு அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் பயணிக்கும் என்பதே எமது நோக்கமாகும். வடக்கில் அரசாங்கம் முன்னெடுத்துவரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் எவ்விதமான குறைவும் ஏற்படாது. அபிவிருத்தி செயற்பாடுகளில் ஒத்துழைப்புடன் செயற்படுவோம்.
இதேவேளை வட மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் ஏழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கூட்டமைப்பின் பதவியேற்பின் பின்னர் எமது கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொள்வார்கள். கூட்டமைப்பினர் அடுத்த வாரம் பதவிப் பிரமாணம் செய்துகொள்வார்கள். வடக்கில் அனைத்து இன மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசாங்கமே பிரதிநிதிகளை பெற்றுக்கொண்டுள்ளது.
அதிகாரங்கள் பிரச்சினையல்ல
இதேவேளை 13 ஆம் திருத்தச் சட்டத்தில் உள்ள காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளவேண்டியதில்லை. காணி அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்துக்கு சொந்தமானது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.
பொலிஸ் அதிகாரம் குறித்து பேசும்போது நாட்டில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு மட்டுமே இருக்க முடியும் என்று அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டம் கூறுகின்றது. எனவே அது குறித்தும் பாரிய பிரச்சினைகள் இல்லை.
இரண்டு ஆளுநர்கள்
இதனிடையே வடக்கு கிழக்கு பிரிப்புத் தொடர்பில் நீண்டகாலத்துக்கு முன்னர் வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. அதாவது கடந்த காலத்தில் வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டிருந்தமை சட்டவிரோதமானது என்று தீர்ப்பு கூறுகின்றது. அந்த வகையில் வடக்கும் கிழக்கும் பிரிக்கப்பட்டதுடன் தற்போது நீண்டகாலமாக இரண்டு ஆளுநர்கள் இரண்டு மாகாணங்களிலும் செயற்படுகின்றனர். கிழக்கு மாகாண சபைக்கு இரண்டு முறை தேர்தல்களையும் நடத்திவிட்டோம்.
வடக்கு மாகாணமும் கிழக்கு மாகாணமும் விவாகரத்துப் பெற்றுவிட்டன. எனவே மீண்டும் வடக்கும் கிழக்கும் இணைவதற்கான சாத்தியங்கள் இல்லை. அத்துடன் 13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாடும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது.
மைத்திரிபால சிறிசேன
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன செய்தியாளர் மாநாட்டில் கருத்து வெளியிடுகையில்,
வடக்குத் தேர்தலை நடத்தக்கிடைத்தமை தொடர்பில் எமது அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது. வடக்கில் ஜனநாயகத்தை நாங்கள் உறுதிபடுத்தியுள்ளோம். இதுவரை எந்த அரசாங்கமும் செய்யாததை எமது அரசாங்கம் செய்துள்ளது. வடக்கு மக்களின் ஜனநாயக உரிமை மனித உரிமை மற்றும் அடிப்படை உரிமை என்பனவற்றை எமது அரசாங்கமே உறுதிபடுத்திக்கொடுத்துள்ளது. வடக்கில் புதிய மாகாண சபையை உருவாக்கியுள்ளோம்.
வடக்கில் வெற்றிபெறவேண்டும் என்ற தேவை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு இருக்கவில்லை. மாறாக அந்த மக்களின் ஜனநாயக உரிமையை உறுதிபடுத்துவதே எமது தேவையாகவுள்ளது. வடக்குத் தேர்தல் நடந்து முடிந்ததும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மக்களின் வாக்களிப்பு தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டதுடன் நன்றியும் தெரிவித்தார்.
அத்துடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களமும் வடக்கு மக்களின் வாக்களிப்பு வீதம் அதிகமாக இருந்தமை தொடர்பில் பாராட்டியிருந்தது. இது எமது எதிர்பார்ப்பாக இருந்தது. அதனை நாங்கள் செய்துள்ளோம். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சமூகங்கள் வடக்குத் தேர்தலை பாராட்டியுள்ளன. எனவே அந்த வகையில் எமது நோக்கம் நிறைவேறியுள்ளது. வடக்கில் ஜனநா யகத்தை உறுதிப்படுத்தியுள்ளோம் என்றார்.