இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.
சர்ச்சைக்குரிய சம்பூர் அனல் மின் நிலையம் உள்ளிட்ட இரண்டு முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.
இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித்திற்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸிற்கும் இடையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது,
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் கருணாதிலக்க அமுனுகம தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மும்மொழிக் கொள்கையை அமுல்படுத்துவது தொடர்பிலான திட்டமொன்றையும் இந்திய அரசாங்கம் முன்னெடுக்க உள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்பது குறித்து இன்னமும் இந்திய பிரதமர் உறுதிப்படுத்தவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
யாழ் செல்லும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஸித் ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி – சீவீ விக்னேஸ்வரன் ஆகியோரை சந்திப்பார்:-
யாழ்ப்பாணத்திற்கு செல்லும் இந்திய வெளிவிவகார அமைச்சர் குர்ஸித் முதலில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்திக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன் பின்னர் வடக்கின் புதிய முதலமைச்சரை சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது. எதிர்வரும் 8ம் திகதி செவ்வாய்கிழமை இலங்கை விமானப்படை மூலம் பலாலியினை சென்றடையும் அவர் அங்கிருந்து தெல்லிப்பளை சென்று அங்கு இந்தியரசின் வீடமைப்பு திட்டத்தை பார்வையிடவுள்ளார்.
பின்னர் இந்திய அரசினது பயனாளிகளிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வொன்றிலும் பங்கெடுக்கும் அவர் வடக்கு ஆளுநரை அவரது பங்களாவில் நேரினில் சென்று சந்திக்கவுள்ளார்.
அதன் பின்னதாக யாழ்.நகரிலுள்ள விடுதியொன்றிற்கு வடக்கு முதல்வரை அழைத்து பேசவுள்ள அவர் இதன் பின்னர் அழைத்துவரப்படவுள்ள இந்திய பத்திரிகையாளர்களுடன் சந்திப்பொன்றினையும் நடத்தவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவருடன் இலங்கைக்கான இந்திய தூதுவர் யாஸ்வர்தன் சிங்காவும் செல்லவுள்ளதாக கூறப்படுகின்றது. எனினும் கூட்டமைப்பு தலைமையுடனான சந்திப்பு கொழும்பிலேயே நடைபெறுமென தெரியவருகின்றது.