Search

தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பது அவசியமானது!

தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாப்பது அவசியமானது-கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,

மிகப் பெரிய ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் பேரம் பேசுவதற்கான எந்தப் பலமும் அற்றவர்களாக நிற்கின்றோம் என மக்கள் கருதக்கூடும். அவ்வாறான ஓர் கருத்தினை திணிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது. என்று தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் வீரகேசரிக்கு கொடுத்த நேர்கணால்:

கேள்வி- நிறைவேறியுள்ள ஜெனிவா தீர்மானத்தினை தமிழ் மக்கள் நிலை நின்று எவ்வாறு பாக்கின்றீர்கள்?

பதில்- அரசாங்கம் தானாகவே உருவாக்கிய நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோருகின்ற ஒரு விடயமாகவே ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானம் அமைந்துள்ளது. இதில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பாக பொறுப்புக் கூறும் வகையில் உள்ளக விசாரணை ஒன்றினை இலங்கை அரசே நடாத்த வேண்டும் எனக் கேட்கப்பட்டுள்ளது. மேலும்இ இந்த விடயங்கள் தொடர்பாக ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான செயலகம் ஆலோசனைகளையும், தொழினுட்ப உதவிகளையும் இலங்கை அரசாங்கத்துடன் கலந்தாலோசித்து அரசாங்கத்துடன் இணைந்து வழங்குமெனவும் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது. அதாவது எத்தகைய ஆலோசனைகளாயினும், தொழினுட்ப உதவிகளாயினும் இலங்கை அரசாங்கத்தின் சம்மதத்துடனேயே வழங்க முடியும்.  சர்வதேச அளவில் இலங்கை அரசாங்கத்திற்கு நெருக்கடிகள் அதிகரித்துச் சென்ற நிலையில் அந்த நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கும் நெருக்கடிகளைத் திசை திருப்புவதற்குமே இலங்கை அரசாங்கம் நல்லிணக்க ஆணைக்குழுவினை அமைத்தது. இந்த ஆணைக்குழுக்கு முன் தோன்றி தங்களுடைய கருத்துக்களை முன்வைக்குமாறு சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் பலவற்றிடம் சிறீலங்கா அரசு கோரிக்கை விடுத்திருந்தபோதும்இ அந்த அமைப்புக்கள் இவ் நல்லிணக்க ஆணைக்குழுவின் நோக்கம் மற்றும் விசாரிக்கக் கோரியிருக்கின்ற முறைமை போன்றன எல்லாம் தவறு என்றும்இ இவ் ஆணைக்குழுவுடன் தாம் சம்பந்தப்பட விரும்பவில்லை எனவும் கூறி நிராகரித்தார்கள். இப்படிப்பட்ட ஓர் ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இன்று நடைமுறைப்படுத்த கோரப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் பார்க்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஓர் தரப்பைஇ அந்தக் குற்றங்கள் தொடர்பாக விசாரணை செய்து தீர்ப்பு வழங்குமாறே ஜெனிவா தீர்மானத்தில் கோரப்பட்டுள்ளது. இவ்வாறான விடயங்களை நோக்குகையில் பாதிக்கப்பட்ட தரப்பு என்ற வகையிலே தமிழ்த் தேசத்திற்கு எந்த விதமான நன்மையும் இவ் ஜெனிவா தீர்மானத்தின் வாயிலாக கிடைக்கப்போவதில்லை. இதுவே உண்மையாக இருக்கையில் இப்படிப்பட்ட ஓர் தீர்மானத்தை, தமிழ் மக்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஓர் ஆரம்பப் புள்ளி எனக் கூறுவது எம்மைப் பொறுத்தவரையிலே மிகவும் ஆபத்தான ஒரு விடயமாகும். இந்தத் தீர்மானத்தினை வைத்துக்கொண்டு முன்நகரமுடியாது என்பதே எமது அபிப்பிராயம்.

கேள்வி- ஆணைக்குழுவின் அறிக்கையில் எதுவுமே கிடையாது என்று நீங்கள் கூறுகின்றீர்கள். ஆனால் இந்த அறிக்கையில் சில முன்னேற்றகரமான பரிந்துரைகளும் காணப்படுகின்றனவே. அதாவது இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும்இ அதிகாரத்தினைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என இவ்வாறாக சில விடயங்களை நீங்கள் என்ன கண்ணோட்டத்தில் பார்க்கின்றீர்கள்?

பதில்- இதனை ஓர் போலியான நம்பிக்கையூட்டும் கருத்துக்களாகவே நாம் பார்க்கின்றோம். எமது அடிப்படைப் பிரச்சினை இனப்பிரச்சினையாகும். அதாவது தமிழ்த் தேசத்தின் இருப்பை இல்லாது செய்யவேண்டுமென்ற நோக்கில் சிங்கள தேசம் செயற்படுகின்ற காரணத்தினாலேயே, எமது மக்கள்  இந்த அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. நடைபெறும் மனித உரிமை மீறல்கள்,  இராணுவ மயமாக்கல், சிங்கள பௌத்த மயமாக்கல்,  பொருளாதாரத்தினை சிங்கள மயமாக்கல்இ நில ஆக்கிரமிப்பு, காலச்சார அழிப்பு, நீதிக்குப் புறம்பான கொலைகள்,  போன்ற அனைத்தும், தமிழர்கள் ஒரு தேசமாக இருப்பதை இல்லாமல் செய்கின்ற வேலைத்திட்டங்களின் அங்கங்களே. நீங்கள் கேட்டதுபோன்று இராணுவம் வெளியேற்றப்படல் வேண்டும் என்று எந்தத் தீர்மானத்திலும் கூறப்படவில்லை. மாறாக இராணுவம் குறைக்கப்படல் வேண்டுமென்றே (Demilitaraization) கூறப்பட்டுள்ளது. இதனை வைத்துக்கொண்டு இராணுவ முகாம்கள் அகற்றப்படுமென்றோ, இராணுவம் முற்றாக வெளியேறும் என்றோ நாம் கருத முடியாது. அதாவது சமாதான காலப்பகுதியில் தற்காலிகமாக முகாம்களுக்குள் முடக்கப்பட்டிருந்தது போன்று, இன்றுள்ள சர்வதேச நெருக்கடி நிலையில் இருந்து மீளும் வரை இராணுவம் தற்காலிகமாக முகாம்களுக்குள் முடக்கப்படுவதாக மட்டுமே அமையும். அதேபோன்று நல்லிணக்க ஆணைக்குழு அரசியல் தீர்வு வழங்கப்படல் வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் ஏற்கனவே உள்ள 13 ஆம் திருத்தச் சட்டம்தான் தீர்;வெனக் கூறியுள்ளது. ஆகவே வட மாகாண சபைக்குரிய தேர்தலை நடாத்தி மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதன் மூலம் இனப் பிரச்சினைக்குத் தீர்;வு வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் வெளிஉலகிற்குக் காட்டிக் கொள்ளும். ஆகவே இங்கு எமக்குச் சார்பான பரிந்துரைகள் எனக் கூறுகின்ற விடயங்கள் உண்மையிலேயே முன்னேற்றத்தினைக் கொடுக்கப்போகின்ற விடயங்களல்ல.  நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் முன்னேற்றம் அளிக்கக் கூடியதெனக் கூறப்படுகின்ற விடயங்கள் தமிழ்த் தரப்புக்களை ஏமாற்றுகின்ற விடயங்களாகவே இருக்கின்றன. ஆகவே இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோருவதன் ஊடாக எமது அடிப்படைப் பிரச்சினை தீர்க்கப்படப் போவதில்லை.

கேள்வி- இன்றைய காலகட்டத்தில் ஜெனிவா மனித உரிமை மாநாட்டின் வாயிலாகப் இலங்கை மீது மேற்குலகு வெளிப்படுத்திய அழுத்தம் போருக்கு பின்பான காலப்பகுதியிலும் தீர்வை முன்வைக்காத இலங்கைக்கு எதாவது சமிஞைகளைக் கொடுத்திருப்பதாக கருதக் கூடியதாகவுள்ளதா? ஜெனிவாவில் அரசாங்கம் எதிர்கொண்ட அழுத்தம் எதாவது மனநிலை மாற்றத்தினை அரசாங்கத்திடம் ஏற்படுத்தியிருக்காது என நினைக்கின்றீர்களா?

பதில்- ஐ.நா. வில் நிறைவேற்றப்பட்ட இத் தீர்மானம் ஊடாக உண்மையில் எந்தவிதமான அழுத்தமும் இலங்கைக்கு பிரயோகிக்கப்படவில்லை. மாறாக வெறுமனே ஓர் செய்தி மட்டுமே இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது தமது நலன்களைப் புறக்கணித்து இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் செயற்படுமாக இருந்தால், இலங்கை மீது உண்மையான அழுத்தங்களை ஏற்படுத்தும் வகையில் சர்வதேச மட்டத்தில் செயற்படுவதற்கு தாம் தயங்கப் போதில்லை என்பதே அச் செய்தியாகும். அதே சமயம் இலங்கை அரசாங்கம் இது தமது இருப்புக்கு அழுத்தம் எனவும் இது ஓர் சர்வதேச சதி எனவும் கூறுவது வேறு நோக்கங்களைக் கொண்டது. அதாவது அன்றாட வாழ்க்கையில் மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதரச் சுமைகளினால் மக்களிடத்தில் அதிகரித்துவரும் எதிர்ப்புணர்வினை திசை திருப்புவதற்கானதாகும்.

கேள்வி:- அவ்வாறாயின் தமிழ் மக்களுடைய நலன்கள் அடைந்துகொள்ளப்படத் தக்கவகையில், ஜெனீவா மாநாட்டை தமிழ்த் தரப்பு எவ்வாறு பயன்படுத்தியிருக்க முடியும்?

பதில்- ஐ.நாவில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டவுள்ளதாக செய்திகள் வெளியானதுமே, தமிழ் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்  முழுவேலைத்திட்டத்தினையும் முன்னெடுத்திருக்க வேண்டும். அதாவது எமது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நபர்கள் ஐ.நா.வுக்குச் சென்று எங்கள் மக்களின் எதிர்பார்ப்பு என்னவென்பதனை ஆணித்தரமாகக் கூறியிருந்தால் தீர்மானத்தினைக் கொண்டு வரும் அமெரிக்கா போன்ற தரப்புக்கள்இ மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருக்கக்கூடிய கோரிக்கையினை முற்றுமுழுதாகவே நிராகரித்து, வேறொரு தீர்மானத்தினை கொண்டுவருவதனை நியாயப்படுத்துவது கடினமானமாக இருந்திருக்கும். ஏனெனில் குறித்த தீர்மானம் தமிழர்களின் பெயரிலேயே கொண்டுவரப்பட்டது.மிகவும் துரதிஸ்ட வசமாக சர்வதேச மட்டத்தில் தீர்மானம் கொண்டுவரப்பட்ட சந்தர்ப்பத்தில் தமிழத் தரப்பினரே அந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தாது  விரும்பி நழுவ விட்டோம். அது மட்டுமல்ல வேறு வேறு தரப்புக்களின் நிகழ்ச்சி நிரல்களை எங்களுடைய மக்களிடம் விற்பனை செய்கின்ற செயற்பாடே தமிழ் பிரதிநிதிகளால் மேற்கொள்ளப்படுகின்றது. முக்கியமானதொரு வரலாற்றுச் சந்தாப்பத்தினை தவறவிட்டிருந்தாலும்,  எதிர்காலத்தில் இலங்கைத் தீவினை மையப்படுத்தியவாறு இடம்பெறும், பூகோள நலன்சார் போட்டிகளுடாக எமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பங்களையாவது நாம் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கேள்வி- ஜெனிவாவிற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் செல்லவேண்டும் என்பதில்லை. இந் நிலையில் குற்றச்சாட்டினை முன்வைக்கும் நீங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஊடாக ஜெனிவா கூட்டத் தொடருக்குச் சென்றிருக்க முடியும் அல்லவா? மேலும் ஜெனிவா கூட்டத்தொடரை இலக்கு வைத்து வேறு வகையான நகர்வுகளை கூட சர்வதேச சட்டம் மற்றும் நகர்வுகள் தெரிந்தவர் என்ற வகையில் நீங்கள் நடத்தியிருக்கலாம் அல்லவா…இந்த இடத்தில் நீங்கள் எதனை மேற்கொண்டீர்கள்?

பதில்- இதில் இரண்டு விடயங்களை கூறிக்கொள்ள வேண்டும். அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனிவா செல்வதில்லையென அறிவித்த நிலையில் நாங்கள் புலம்பெயர்ந்த மக்களுடன் தொடர்புகொண்டு ஜெனிவா செல்வதற்குரிய முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம். இவ்வாறாக நாம் ஜெனிவா சென்று அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினூடாக நாம் பேசுவதென்றால், பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு முன்பதாக நிகழ்ச்சி நிரலில் சேர்ப்பதற்காக விண்ணப்பித்திருக்க வேண்டும். ஆனால் பிறிதொரு தரப்பு விண்ணப்பிக்க முடியாத வகையில் 25 ஆம் திகதியே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தாம் ஜெனிவா செல்வதில்லை என்பதனை அறிவித்திருந்தது. இதன் பின்னர் எம்மால் நடவடிக்கைகளைத் தொடர முடியாது காலம் கடந்துவிட்டது. இதனால் நாமும் அந்த சந்தர்ப்பத்தினை இழக்க நேரிட்டது. மேலும்இ சந்தர்ப்பம் எங்களுக்குக் கிடைத்திருந்தாலும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்பு ஜெனிவா செல்வதில்லையென முடிவெடுத்து அதனை அறிவித்திருந்த நிலையில், மக்களால் தெரிவு செய்யப்படாத தரப்பாகிய நாம் அங்கு சென்று எவ்வளவு தூரத்திற்குத் தாக்கத்தினை ஏற்படுத்த முடியும் என்பது கேள்விக்குறியாகும்.கேள்வி- இடம்பெற்று வரும் சமாதானப் பேச்சுக்கள் தொடர்பில் என்ன கருத்தினைக் கொண்டுள்ளீர்கள்?பதில்- இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நோக்கில் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. மாறாக தமிழினத்தினால் எப்பொழுதோ நிராகரிக்கப்பட்டுவிட்ட 13 ம் திருத்தத்தின் கீழான மாகாண சபைகள் என்ற விடயத்திற்குள் எங்களுடைய பிரச்சினையினை முடக்குகின்ற வகையிலேயே பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. 13 ஆவது திருத்தம் தான் தீர்வென அரசாங்கம் இதனை வெளிப்படையாகவே கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது எமது இனத்தினையும் தேசத்தினையும் இல்லாமல் செய்வதற்கான வழிவகையாக மட்டுமே இருக்கின்றது.

கேள்வி- நடைபெறும் இனப்பிரச்சினைக்கான பேச்சுக்கள் காத்திரமற்றதென சாடுகின்றீர்கள்.இந்நிலையில் நீங்கள் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வெளிநாட்டுப் பொறிமுறைகள் எதையாவது நம்புகின்றீர்களா? அல்லது என்ன வகையான திட்டத்தினைக் கொண்டுள்ளீர்கள்?

பதில்- மிகப் பெரிய ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டுள்ள நிலையில் நாம் பேரம் பேசுவதற்கான எந்தப் பலமும் அற்றவர்களாக நிற்கின்றோம் என மக்கள் கருதக்கூடும். அவ்வாறான ஓர் கருத்தினை திணிப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றது. ஆனால் அது யதார்த்தம் அல்ல. அது சாதாரணமாக இலங்கைத் தீவிற்குள் இடம்பெறும் விடயங்களைமட்டும் மையப்படுத்தி நோக்குபவர்கள் அவ்வாறு கருதக்கூடும். ஆனால் இன்றைக்கு தமிழ் மக்களுக்குள்ள பிரச்சினையை வெறுமனே இலங்கைத் தீவினை மட்டும் மையப்படுத்திப் பார்க்க முடியாது.சர்வதேச அரசியலின் பின்னணியிலேயே தான் பார்க்கவேண்டும். இன்று இலங்கைத் தீவினை மையப்படுத்தி அமெரிக்கா தலைமையிலான மேற்குலகின் நலன்சார் போட்டி மற்றயது இந்தியாஇசீனா போன்ற நாடுகளின் போட்டி என மும்முனைப்போட்டி நடைபெறுகின்றது. இம் மூன்று அரசுகளின் போட்டியும் தமது நலன்சார் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தினை எவ்வாறு கையாள்வது என்றே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. ஐ.நா. மனித உரிமைப் பேரவையினுடைய செயற்பாடும் காலப்போக்கில் ஏற்படக்கூடிய நடவடிக்கைகளும் முழுக்க முழுக்க இலங்கை அரசினை எவ்வாறு தமது பிடிக்குள் கொண்டு வருவது என்ற அடிப்படையிலேயே நடைபெறுகின்றன என்பதனை நாங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.உலகம் எமது நலன்களை முன்னிலைப்படுத்தி பிரச்சினைகளை அணுகவில்லை  என்பதனையும் எதிர்காலத்திலும் தாமாக விரும்பி அணுக மாட்டார்கள் என்பதனையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இப்படியான ஓர் சூழ்நிலையில் சிங்களத் தேசியவாதமானது மேற்குலகிற்கும் இந்தியாவுக்கும் தமிழர்களுக்கும் எதிரான ஒரு விடயமாக உள்ளது. இவ்வாறாக சிங்கள தேசிய வாதத்திற்கு வெறுமனே தமிழர்கள் மட்டும் எதிரிகள் இல்லை. அமெரிக்காவுக்கும் அதற்கப்பால் இந்தியாவுக்கும் எதிரானது என்ற நிலையில்இ நாங்கள் ஒரு புள்ளியில் சந்திக்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறான நிலையில்இ சிறிலங்கா அரசின் மீது அழுத்தத்தினைப் பிரயோகிக்க மேற்குக்கும் இந்தியாவுக்கும் இருக்கக் கூடிய ஒரே கருவி தமிழ் அரசியல் ஆகும். இலங்கை அரசுக்கு நெருக்கடிகளைக் கொடுப்பதற்கு ஒரு தரப்பு பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து தப்பிப்பதற்கு இலங்கை அரசுக்கு மாற்று வழிகள் உள்ளன. ஆனால் தமிழ் அரசியல் மட்டுமே ஒரு தரப்பு கையில் எடுத்தால் அதன் பாதிப்புக்களில் இருந்து தப்புவதற்கு இலங்கை வேறு தரப்புக்களிடம் செல்ல முடியாத நிலைமைகள் காணப்படும். இதனையே நாம் சரியாகப் புரிந்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்கின்றோம்.

கேள்வி- இரு தேசம் ஒரு நாடு என்ற கோட்பாட்டினை உங்கள் கட்சியின் கொள்கையாக முன்வைத்துள்ளீர்கள். இதற்கான அங்கீரம் எவ்வகையானது.?

பதில்- எங்களுடைய கட்சியின் கொள்கை சட்ட நுணுக்கங்களை அடிப்படையாகக் கொண்டது. அதாவது இலங்கைத் தீவில் வாழ்கின்ற தமிழ் இனம் சர்வதேச சட்டத்தின் படி ஒரு தேசமாக அங்கீகரிக்கப்பட்டு, சுயநிர்ணய உரிமைக்கு உரித்தான ஒரு தரப்பாக நாங்கள் எங்களை அடையாளப்படுத்துகின்றோம். இதை பிரதிபலிக்கக் கூடிய வகையில் நடவடிக்கை அமைய வேண்டும். எமக்கான அரசியல் தீர்வு இரு தேசங்கள் கொணட ஒருநாடாகத்தான் அமையலாம் என்பது ஏதோ தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் புது வியாக்கியானம் அல்ல. தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்வதில் நேர்மையுடனும் அற்பணிப்புடனும் செய்றபட்டவர்கள் திம்பு  தொடக்கம்  இந்தக் கோட்பாட்டின் அடிப்படையிலேயே தீர்வுகளை ஏற்றுக் கொள்ளக் முடியுமென வலியுறுத்தி வந்திருந்தனர். அதனை தமிழ் மக்களும் ஏற்றுக் கொண்டிருந்தனர். அன்று திம்புக் பிரகடனத்தில் கையொப்பமிட்டவர்களே இன்று, இந்தக் கோட்பாடுகளை வெற்றுக் கோசங்கள் என்று கேவலப்படுத்த முயல்கின்றனர். இவை வெறும் வெற்றுக் கோசங்களெனின் அன்று ஏன் அந்தப் பிரகடனத்தை ஏற்று கையொப்பமிட்டார்கள். இக்கோட்பாடுகளை இவர்கள் வெற்றுக் கோசங்கள் என்று கூறுவதற்குக் காரணம், இன்று தாம் கொள்கையை கைவிட்டுச் செல்வதனை மூடிமறைப்பதற்காகவேயாகும். இரு தேசங்களின் இருப்பும் அங்கீகரிக்கப்பட்டு சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேச்சுவார்த்தையினை நடாத்தி ஒரு நாட்டினை உருவாக்கிக் கொள்வதே இனப்பிரச்சினைக்கான சிறந்த தீர்வாக அமையுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

கேள்வி- வெளியுலகு எமது நலன்களின் அடிப்படையில் இனப்பிரச்சினைத் தீர்வினை முன்வைக்க மாட்டார்கள் எனவும் புவிசார் நலன் அரசியல் போட்டிகளுக்குள்ளாக நாம் காய்களை நகர்த்தி இனப்பிரச்சினையில் தமிழ் மக்களுக்கேற்ற தீர்வினைப் பெற முடியும் எனவும் நம்பிக்கை கொண்டுள்ளீர்கள். இந்தப் பொறிமுறைக்குள்ளாக எவ்வாறு நாம் சுயநிர்ணய உரிமை மற்றும் தேசம்போன்றவற்றை முன்வைப்பது?

பதில்- சுயநிர்ணய உரிமைஇதேசம் என்ற விடயங்களை சர்வதேச சமூகம் விரும்பி ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. அதேசமயம் இந்த விடயங்களை இலகுவாக சர்வதேசம் நிராகரிக்கவும் முடியாது. நிராகரிக்க முடிந்த விடயம் எதுவென்று பார்த்தால் உதாரணமாக தனிநாட்டுக் கோரிக்கை போன்ற விடயங்களேயே யாகும்.சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தனிநாடு தவிர்ந்த வேறு எதனையும் தீர்வாக ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை என்று கூறுவபவர்களாகவோ அல்லது ஜனநாயகத்தினை நிராகரிப்பவர்களாக நாம் இருந்தால் அதனை இலகுவாக நிராகரிக்கக்கூடிய சாத்தியப்பாடுகள் இன்றுள்ள உலக ஒழுங்கில் காணப்படுகின்றது. ஆனால் நாம் மேற்குறிப்பிட்ட இரண்டுக்கும் பதிலாக மாற்று நிலைப்பாட்டினையே எடுத்துள்ளேம். உதாரணமாக எங்களுடைய இருப்பினை உறுதிப்படுத்தக்கூடிய வகையில் சுயநிர்ணய உரிமையினை சர்வதேசம் இலகுவாக நிராகரிக்க முடியாத அளவுக்கு எமது கோரிக்கைகள் இருந்தால் எமது நிலைப்பாட்டினை சர்வதேசம் விரும்பாமல் இருந்தாலும் அதனை நிராகரிக்க முடியாது.மேலும் நலன்சார் போட்டிகள் உலகில் நிலவுகின்ற காரணத்தினால் சிறீலங்கா அரசுக்கு அழுத்தம் போடவேண்டும் என்ற தேவை ஏதோ ஒரு சர்வதேசத் தரப்புக்கு நிச்சயமாக ஏற்படும். ஏனென்றால் எல்லாத் தரப்பினையும் இலங்கை அரசு திருப்திப்படுத்திக் கொண்டு செல்ல முடியாது. இந்த இடத்தில் நாம் உரிய வகையில் முன்வைக்கும் நிலைப்பாட்டினை ஏற்றுக்கொள்ளாமல் தலையீட்டினைக் கொண்டுள்ள நாடுகள் ஒரு நிலைப்பாட்டுக்கு வரமுடியாது. இந்த இடத்தில் தான் வாய்ப்புக்களை நாம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுகின்றேன்.  எமது நிலைப்பாடு மட்டுமே எமது தேசத்தின் இருப்பை பாதுகாக்கும். மற்றய எந்தத் தீர்வும் தமிழ்த் தேசத்தின் இருப்பை பாதுகாக்க உதவப்போவதில்லை என்பதே எமது உறுதியான நிலைப்பாடாகும்.
நன்றி:- ஞாயிறுவீரகேசரி
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *