அமெரிக்க-தென் கொரிய ஒப்பந்தத்தால் பேராபத்து: வடகொரியா எச்சரிக்கை

அமெரிக்க-தென் கொரிய ஒப்பந்தத்தால் பேராபத்து: வடகொரியா எச்சரிக்கை

வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக அமெரிக்காவும், தென்கொரியாவும் செய்து கொண்டுள்ள ஒப்பந்தம், பேரழிவுக்கு வழிவகுக்கும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் வட கொரியா தனது மூன்றாவது அணு குண்டு சோதனையை நடத்தியது. இதன் மூலம், ஏவுகணைகளில் பொருத்தக்கூடிய வகையில், சிறிய அளவிலான அணு குண்டுகளைத் தயாரிக்கும் திறனை அது பெற்றது.

மேலும், தொலை தூரங்களுக்கு சென்று தாக்கும் ஏவுகணைகளையும் தயாரித்து வருவதாகவும், தேவைப்பட்டால் அமெரிக்கா மீதும், தென் கொரியா மீதும் அணு ஆயுதத் தாக்குதல் தொடுப்போம் என்றும் அந்நாடு கூறியிருந்தது.

இதற்கு பதிலடியாக, அணு குண்டுகளை எடுத்துச் செல்லக்கூடிய, பி-2 ரக ரகசிய போர் விமானங்களைக் கொண்டு அமெரிக்காவும், தென் கொரியாவும் போர் ஒத்திகையில் ஈடுபட்டன.

இந்நிலையில், வட கொரியாவின் அணு ஆயுதத் தாக்குதலை சமாளிப்பதற்கான தற்காப்பு கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இரு நாடுகளும் கடந்த வாரம் ஒப்பந்தம் செய்து கொண்டன.

இதன் தொடர்ச்சியாக, ஜப்பானுடன் சேர்ந்து, இவ்விரு நாடுகளும் செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை கொரிய தீபகற்பத்துக்கு அருகில் மாபெரும் கூட்டு கப்பற்படை போர் ஒத்திகையில் ஈடுபட முடிவு செய்துள்ளன.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ள “கொரிய அமைதி ஒருங்கிணைப்புக் குழு’ (சி.பி.கே), “இது போன்ற நடவடிக்கைகள் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதப் போர் விளிம்புக்கு கொண்டு சென்றுவிடும்” என்று தெரிவித்துள்ளது.

வட கொரிய அரசு செய்தி நிறுவனம் மூலம் அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “அமெரிக்கா மற்றும் தென் கொரியாவின் சமீத்திய ராணுவ நடவடிக்கைகள், கொரிய தீபகற்பத்தில் பெரிய நெருக்கடியை உண்டாக்கியுள்ளன.

இந்த நடவடிக்கைகளின்போது ஏற்படும் ஒரு சிறிய தவறு கூட, மிகப்பெரிய அணு ஆயுதப் போரைத் தூண்டிவிடும்.

எதிரி நாடுகள் இதே போல் தொடர்ந்து எங்களுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபட்டு வந்தால், “வரும் முன் காக்கும்’ செயலாக அவர்களை பூண்டோடு அழிக்கவும் நாங்கள் தயங்க மாட்டோம்” என்று சி.பி.கே குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.