சமஸ்டி அடிப்படையிலான தீர்வினைப் பெற்றுக்கொள்வதற்காக அரசியலமைப்பில் மாற்றம் கொண்டுவரவேண்டும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் முன்வைத்த ஆலோசனையை வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உடனடியாகவே நிராகரித்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
இந்திய வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் நேற்று யாழ்ப்பாணத்திற்கான பயணத்தினை மேற்கொண்டிருந்தார். இதன் போது கூட்டமைப்பினரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார். குறித்த சந்திப்பில் வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவைசேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும் பங்குகொண்டிருந்தனர்.
இதன் போது விக்னேஸ்வரன் நடந்து கொண்டவிதம் தொடர்பில் இந்திய வெளியிறவு அமைச்சர் சங்கடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது,
வடக்கு முதலமைச்சருக்கு வாழ்த்துத் தெரிவித்த இந்திய வெளியுறவு அமைச்சர் நல்லெண்ண அடிப்படையில் இந்தியாவுக்கு வருகைதருமாறு சல்மான் குர்ஷித் அழைப்பு விடுத்திருக்கின்றார். அதற்கு பதலளித்த சி.வி.விக்னேஸ்வரன், இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதன் பின்னரே இது தொடர்பில் முடிவு செய்யமுடியும் என்று தெரிவித்திருக்கின்றார்.
அதேவேளை இறுதித்தீர்வு தொடர்பிலும் குர்ஷித் உரையாடியுள்ளார், தமிழ் மக்களுக்கான தீர்வினை சமஷ்டி அடிப்படையிலேயே பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அதற்காக அரசியலமைப்பில் மாற்றத்தினை ஏற்படுத்தவேண்டும் என்றும் சல்மான் கருத்துத் தெரிவித்திருக்கின்றார்.
இதன் போது பதிலளித்த சி.வி.விக்னேஸ்வரன்,
முப்பது ஆண்டுகளாக தற்போது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பின் கீழேயே தான் பணியாற்றியுள்ளதாகவும் தற்போது தான் போட்டியிட்டு தெரிவாகியுள்ள தேர்தலும் குறித்த அரசியலமைப்பின் கீழேயே உள்ளதாகவும் தெரிவித்த விக்னேஸ்வரன்,
பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஒற்றை ஆட்சியின் கீழேயே தீர்வு கிடைக்கவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் உடனடியாகவே இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் தெரிவித்ததாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.