இலங்கையில் கடந்த 2009ஆம் ஆண்டில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தன்னால் ஆற்றப்பட வேண்டியிருந்த தார்மீகக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஐ.நா. தோல்வி கண்டிருப்பது குறித்து ஐ.நா.வின் உயரதிகாரி ஒருவர் வாய் திறந்துள்ளார். நியூயோர்க்கில் அமைந்துள்ள ஐ.நா தலைமை அலுவலகத்தில் நடைபெற்றுள்ள வெளியுறவுகள் குறித்த பேரவைக் கூட்டத்தில் ஐ.நா. பிரதி செயலாளர் நாயகம் ஜான் எலியசன் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,
கடந்த 2009ஆம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தத்தின் போது ஐ.நா. செயற்பட்ட விதம் குறித்து ஆராயவென மேற்கொள்ளப்பட்ட உள்ளக மீளாய்வு ஒன்றில் ஐ.நா. உறுப்பு நாடுகளின் பல்வேறுபட்ட அங்கங்கள் தத்தமக்கென தாமாகவே வரித்துக் கொண்டிருந்த கற்க வேண்டிய பாடங்களைக் கற்பதில் முறையான தோல்வியைத் தழுவியிருந்தமை குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் விபரிக்கையில், இலங்கையில் நடைபெற்றிருந்த யுத்தத்தின் கொடூரமான இறுதிக் கட்டமானது ஐ.நா.வின் பரந்தளவிலான பிரசன்னமொன்றுக்கான பாரிய அழுத்தத்தை கொடுத்திருந்த வேளையில் ஐ.நா. முறையையோ அதற்கு இசைவாக சரியான முறையில் செயற்பட்டிருக்கவேயில்லை. இதிலிருந்து நாமனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய பிரதான பாடமொன்று என்னவெனில் அரசியல், மனித உரிமைகள் சார்ந்த நிபுணத்துவத்தையும் வளங்களையும் அவை தேவைப்படும் இடத்தில் ஐ.நா. முறைமை பயன்படுத்தி வருவதனை உறுதிப்படுத்துவதேயாகும்.
இதற்கு இணையாக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக விளங்குவது யாதெனில், எங்கெங்கெல்லாம் மனித உரிமை மீறல் சம்பவங்கள் இடம்பெறுகின்றனவோ அத்தகைய அபாய அறிவிப்புக்கள் குறித்து நாம் விரைந்து செயற்படுவதுடன் அங்கு நாம் காண்பவை பற்றி தைரியமாக ஒளிவு மறைவின்றி உலகுக்குக் கூறியே ஆக வேண்டும். ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சார்பிலேயே நான் இந்த உள்ளக ஆழ்ந்த ஆராய்வினை தலைமையேற்று மேற்கொண்டுள்ளேன் என தெரிவித்தார்.
இலங்கையில் நடந்து முடிந்த யுத்த காலத்தின் போது அதனைக் கண்காணிக்கவும் அங்கு கண்டறியப்பட்டவற்றை ஐ.நா. பாதுகாப்புச் சபைக்கு தெரியப்படுத்துவதற்குமான போதிய வளங்களெதனையும் இலங்கையில் உள்ள ஐ.நா. காரியாலயம் கொண்டிருக்கவேயில்லையெனவும் எலியசன் குறை கூறினார்.
இலங்கையில் இடம்பெற்றிருந்த இறுதிக்கட்ட யுத்தகாலத்தின் போது ஐ.நா. தனது தார்மீகக் கடமைகளை நிறைவேற்றுவதில் தோல்வி கண்டிருந்ததனை அண்மையில் ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனும் ஒப்புக்கொண்டிருந்தமை தெரிந்ததே.