வல்வெட்டித்துறை மையப்பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றி, மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்களா?

வல்வெட்டித்துறை மையப்பகுதியில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றி, மக்கள் மீளக் குடியமர்த்தப்படுவார்களா?

வல்வெட்டித்துறையின் நகர மத்தியில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறாக இருந்து வரும் வல்வெட்டித்துறை இராணுவ முகாம் 1996 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து சுமார்,400 இராணுவத்தினரைக் கொண்ட ஒரு படைப் பிரிவாக இயங்கிவந்தது.வல்வெட்டித்துறை சந்தியில் கடைத் தெருக்கள், பாடசாலைகள் என்பவற்றை உள்ளடக்கிய சுமார் 3 1/2ஏக்கர் நிலப் பரப்பும் அதனுடன் இணைந்திருந்த 50 குடியிருப்பு வீடுகளும்,இராணுவத்தினரின் முகாம்களாக்கப்பட்ட நிலையில் இந்த வீடுகளில் காலம் காலமாக பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்கள் நிர்க்கதியாக்கப்பட்ட நிலையில் புலம் பெயரத் தொடங்கினர்.

உள்நாட்டிரும்,புலம் பெயர்ந்த நாடுகளிலும் இன்றும் அவர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.தாய் மனையில் வாழவேண்டும்,அதே தாய் மடியிலேயே மரணிக்கவேண்டும் என்ற அவாவுடன் காத்திருக்கும் அந்த மக்களை மீளக்குடியமர்த்துவதற்காக வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்ததுடன் அந்த பாரிய இராணுவ முகாமை அகற்றி எமது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று இரண்டு தடவைகள் ஜனாதிபதியுடன் தொடர்பு கொண்டும்,இராணுவத் தளபதிக்கும் அரச அதிபருக்கும் கடிதங்கள் அனுப்பியும் வேண்டுகோள்கள் விடுக்கப் பட்டு வந்தபோதும் அதனை அகற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கப் படவில்லை. ஆனால் வடக்கு மாகாண சபைக்கான தேர்தல்கள் நெருங்கும் வேளையில் மக்களைக் கவர்வதறகாக இராணுவ முகாம்களை அகற்றப் போவதாகவும்,இடம்பெயர்க்கப்பட்ட மக்களை மீளக்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்போவதாகவும் கூறி பிரதேச செயலகத்தினூடாக அந்த மக்களை அழைத்துக் காத்திருக்கச் செய்திருந்தனர். அவர்களது சொல்லை நம்பி வல்வெட்டித்துறைக்கு வருகை தந்து தமது உறவினர் வீடுகளலை; தங்கி, பலநாட்கள் வரை காத்திருந்த மக்கள் மீண்டும் நம்பிக்கையை இழக்கத் தொடங்கினர். வடக்கு மாகாண சபை தேர்தல் முடிந்ததும் அவர்களது வீடுகளைக் கையளிப்பதாகக் கூறி வந்த இராணுவ அதிகாரிகள் தற்பொழுது அதைப் பற்றிய பேச்சையே எடுக்காது மௌனம் சாதிக்கின்றனர். அதே வேளை மீண்டும் இராணுவ முகாமைப் பலப்படுத்தும் வகையில் முட்கம்பிகளைப் போட்டு, அதனைப் பலப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருவது போல் தெரிகின்றது.அங்கே உள்ள பல வீடுகள் உடைக்கப்பட்டு வருகின்றன.நாள்தோறும் உழவு இயந்திரங்களில் இடிபாடுகளை ஏற்றிக் கொண்டு செல்வதைப் பார்க்கும் பொழுது,தமது வீடுகள் அல்ல வெற்றுக் காணிகளையாவது எப்பொழுது கையளிப்பார்கள் என்ற ஏக்கத்துடன் இராணுவமுகாம் வாசலை வைத்த கண் வாங்காது விழி வைத்துப் பார்த்திருக்கின்றனர்.

அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் மனிதாபிமானத்துடன் செயற்படும் வகையில் அந்த மக்களின் வீடுகளையும்,வளவுகளையும் மீண்டும் கையளித்து அவர்களது சந்தோசமான வாழ்வுக்கு இராணுவத்தினர் வழிவகுத்தக் கொடுப்பார்களா? வுல்வெட்டித்துறை நகரத்தை மீண்டும் அழகு படுத்தி சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயலூரவர்களையும் கவரும் வகையில் அபிவிருத்தி செய்ய அனுமதிப்பார்களா?

Leave a Reply

Your email address will not be published.