சிரியாவில் அரசுக்கு எதிரான புரட்சி படையினருக்கு ஆப்கானிஸ்தானில் இரசாயன ஆயுத பயிற்சி அளிக்கப்படுவதாக ரஷ்யா குற்றம் சுமத்தியுள்ளது.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிராக கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக போராட்டம் நடந்து வருகிறது.
இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி வருகின்றனர். இதனையடுத்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளும் அசாத்தைப் பதவி விலகும்படி வலியுறுத்தின.
ஆனால் அசாத் மறுத்து விட்டதால் புரட்சி படையினருக்கு இந்த நாடுகள் ஆயுத வினியோகம் செய்து வருகின்றன.
இதனால் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது, இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி நடந்த இரசாயன தாக்குதலில் நூற்றுக்கணக்கான மக்கள் பலியாகினர்.
இதனையடுத்து அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் போர் தொடுக்க தயாராகின.
இதற்கிடையே ரஷ்யாவின் தலையீட்டை தொடர்ந்து, ரசாயன ஆயுதங்களை ஒப்படைக்க சிரியா முன்வந்துள்ளது.
இந்நிலையில் சிரியா புரட்சி படையினருக்கு ஆப்கானிஸ்தானில், ரசாயன ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ரஷ்ய வெளிவிவகாரத்துறை அமைச்சர் செர்ஜி லேவ்ரவ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செர்ஜி குறிப்பிடுகையில், ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் இல்லாத பகுதிகளில் அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்நஸ்ரா என்ற அமைப்புக்கு ரசாயன ஆயுத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.
ஆனால் எந்த இடத்தில், யார் பயிற்சி அளிக்கிறார்கள் என்பது குறித்து குறிப்பிடவில்லை.