வங்காளதேசத்தில் உள்ள 800 ஆண்டுகாலபழமை வாய்ந்த தாகேஸ்வரி கோவிலின் பெயரே அந்நாட்டின் தலைநகரான டாக்காவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி இனவாத ஒருங்கிணைப்பிற்கு இந்தக் கோவில் மிகப் பெரிய எடுத்துக்காட்டாக விளங்குகின்றது.
இந்தக் கோவிலில் இருந்த பத்துக் கரங்களை உடைய தசபுஜா சிலை 1947 ஆம் ஆண்டு கொல்கத்தாவிற்கு கடத்தப்பட்டது. அதன்பின் நிர்மாணிக்கப்பட்ட துர்க்கை சிலை 1971 ஆம் ஆண்டு பாகிஸ்தானியர்களின் படையெடுப்பில் அழிக்கப்பட்டது.
அதன் பின்னரும் 1975,1990 ஆம் ஆண்டுகளிலும் இஸ்லாமியத் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு உள்ளான இந்தக் கோவில் அதையும் தாண்டி மக்கள் மனதில் நிலை பெற்றுள்ளது. இங்கு நடைபெறும் துர்கா பூஜை பலமுறைகளிலும் தனித்துவம் பெற்று காணப்படுகின்றது.
இந்த பூஜை நிகழ்ச்சிகளுக்கு அந்நாட்டில் உள்ள 14 லட்சம் ஹிந்து மக்கள் மட்டுமின்றி, பெரும்பான்மையான முஸ்லிம் மக்களும் வருவார்கள் .நாட்டின் முக்கியக் கட்சிகளான அவாமி லீக் மற்றும் வங்காள தேசியக் கட்சியின் மூத்த தலைவர்களும் இங்கு வந்து பூஜையாளர்களை வாழ்த்தி செல்வார்கள்.
அஷ்டமி தினத்தன்று இங்கு வழங்கப்படும் பிரசாதத்தைப் பெறும் பக்தர்கள் வரிசையில் முஸ்லிம் மக்களும் உண்டு. அதுமட்டுமின்றி பூஜைக்குப் பின்னர் இங்கு நடைபெறும் சமூக, கலாச்சார விழாக்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை ஆகும்.
இந்துக்கள், முஸ்லிம்கள் மட்டுமின்றி புத்த, கிறிஸ்துவ மதத்தினரும் இத்தகைய விழாக்களில் கலந்து கொள்கின்றனர். அதுதவிர, இலவச உணவுத் திட்டம் போன்ற பல சமூக நல செயல்பாடுகளும் இந்த விழாக்களின் மூலம் நடைபெறுகின்றன.
சமூக சேவைகள் செய்வதற்கும், மற்ற சமூகத்தினருடன் தங்களின் உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கும் இந்த விழாக்கள் முக்கிய பங்கு வகிப்பதாக பசுதேப் தார் கூறுகின்றார். இவர் இதுபோன்ற 212 சமூக பூஜைகளை மேற்பார்வையிடும் மகா நகர் சர்போஜோனின் பூஜைக் கமிட்டியின் தலைவர் ஆவார்.
இத்தகைய மதச்சார்பற்ற கலாச்சாரத்தை அழிக்க நினைக்கும் முயற்சிகள் தொடர்ந்து கொண்டிருந்தாலும் அதையும் தாண்டி நிலைத்து நிற்கும் இந்தக் கோவிலில் தங்களின் பங்களிப்பு தொடரும் என்று முகமது நசீம் என்ற வியாபாரி அழுத்தந்திருத்தமாக உரைக்கின்றார்.