தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தே தீர்மானம் எடுக்கப்படும் என இந்திய பிரதமர் மன்மோகன் சிங், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக கட்சிக்கு வாக்குறுதி அளித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளது. இந்த அமர்வில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து உறுதியான தீர்மானம் இன்னமும் எடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமர்வுகளில் பங்கேற்பது தொடர்பிலான சகல காரணிகளும் கவனத்திற் கொள்ளப்பட்டே இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் கருணாநிதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மன்மோகன் சிங் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தோழர் தியாகு நடத்திய வரும் உண்ணாவிரதப் போராட்டம் குறித்து தமிழக அமைச்சர் ரி.ஆர்.பாலு பிரதமருக்கு விளக்கியுள்ளார். கடந்த 1ம் திகதி தொடக்கம் சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டமொன்றை தோழர் தியாகு நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.