யாழ். நாவற்குழிப் பகுதியில் வசிக்கின்ற தமிழ் மக்கள் தமது காணிகளை அளந்து அதற்குரிய ஆவணங்களை உடனடியாக வழங்கவேண்டும் எனவும் தவறின் தாம் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டங்களில் ஈடுபடவுள்ளதாக அங்குள்ள மக்கள் தெரிவித்தனர்.
தமக்குரிய காணிகளை அளந்து ஆவணங்கள் வழங்கப்படும் என இராணுவத்தினர் தெரிவித்து வருகின்ற பொழுதும் அரசாங்க அதிகாரிகளும் சில அரசியல்வாதிகளும் திட்டமிட்ட வகையில் காணிகளை வழங்காது காலம் தாழ்த்துவதாகவும் தெரிவித்தனர்.
இவ்விடயம் தொடர்பாக அப்பகுதி மக்கள் மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் கடந்த நான்கு வருடங்களாக இப்பகுதியில் மீளக்குடியேறியுள்ளோம். எமக்கு இப்பகுதியில் குறித்த காணிகளில் வசிப்பதற்கான அனுமதியை கிராம சேவையாளர் வழங்கியுள்ளார்.
கடந்த நான்கு வருடங்களாக எமது காணிகளை அளந்து ஆவணங்களை வழங்காது அரசாங்க அதிகாரிகளும் தொடர்புடைய அரசியல்வாதிகளும் காலம் தாழ்த்தி வருகின்றனர்.
ஆனால், எமக்கு அருகில் தற்பொழுது குடியேறியுள்ள சிங்கள மக்களுக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பு வழங்குவதுடன் காணிகள் அளக்கப்பட்டு அதற்குரிய ஆவணங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் இப்பகுதியில் ஐந்து சிங்களக் குடும்பங்கள் மட்டும் வசித்து வந்த நிலையில் தற்பொழுது சுமார் நூறு வரையான குடும்பங்கள் குடியேறியுள்ளன. இவர்களில் சகலருக்கும் காணிகளுக்குரிய ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் எமக்கு மின்சாரம், குடிநீர், போக்குவரத்து வசதிகள் எதுவுமின்றி கஷ்டங்களை எதிர்கொண்டு வருகின்ற நிலையில் அருகிலுள்ள சிங்களக் குடியேற்றத்தில் வசிப்போருக்கு சகல வசதிகளும் இராணுவத்தின் ஏற்பாட்டில் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
காணிகளை அளந்து ஆவணங்களை எமக்கும் வழங்குமாறு அரசாங்க அதிகாரிகளிடம் நாம் கோரியுள்ளோம். ஆனால் யாருமே எமக்கு உதவவில்லை.
இன்று (நேற்று) காணிகளை அளந்து வழங்குவதாக இராணுவத்தினர் எம்மிடம் தெரிவித்தனர். ஆனால், எந்தவொரு அதிகாரியும் இவ்விடத்துக்கு வரவில்லை.
எனவே, எமக்கான காணிகளுக்குரிய ஆவணங்களை விரைவில் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். தவறின் நாம் சாகும் வரையிலான போராட்டங்களில் ஈடுபடவுள்ளோம் என்றனர்.