இளவரசர் வில்லியம்- கேத் மிடில்டனின் தம்பதிகளின் புதல்வரான குட்டி இளவரசருக்கு இன்று பெயர் சூட்டு விழா நடைபெற உள்ளது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலி கேட் மிடில்டன்னை கடந்த 2011ம் ஆண்டு லண்டனில் வைத்து திருமணம் செய்து கொண்டார்.
அவர்களின் திருமணத்தை உலக மக்கள் டிவியில் பார்த்து மகிழ்ந்தனர்.
இதையடுத்து கர்ப்பமான கேட் கடந்த ஜூலை மாதம் 22ம் திகதி அழகிய ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
ஜார்ஜ் எனப் பெயரிடப்பட்ட அந்த குட்டி இளவரசரின் பெயர் சூட்டு விழா இன்று அதிகாரப்பூர்வமான விழாவாகக் கொண்டாடப் பட இருக்கிறது.
செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் உள்ள ராயல் சேப்பலில் கான்டர்பெர்ரி பேராயரான ரெவ்.ஜஸ்டின் வெல்பியால் நடத்தப்பட உள்ளது.
இதனையொட்டி அழகிய நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தின் வடிவமைப்பு, அளவுகள், பொருட்கள் போன்றவை குழந்தையின் பெற்றோர் மற்றும் பாட்டி இரண்டாம் எலிசபெத் ஆகியோரால் முடிவு செய்யப்பட்டது.
பொதுமக்கள் எளிதாக வாங்கக்கூடிய 21 டொலர் மதிப்பில் உள்ள 13 பவுண்ட் காசிலிருந்து தொடங்கி ஒரு கிலோ தங்க மதிப்புள்ள(80,000 டொலர்) 50,000 பவுண்ட் மதிப்பு வரை காசுகள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளன.
இதுதவிர ஒரு சிறப்பு வெள்ளி நாணயமும் அவரது பிறப்பைக் குறிப்பிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் இக்குழந்தை அரச பரம்பரையின் 7ம் வாரிசு என்பதால் கிங் ஜார்ஜ் செவன் என்றும் அழைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தனது பேரனின் பெயர் சூட்டுவிழாவின் போது பூ தந்து வாழ்த்து தெரிவிப்பதற்கு பதிலாக குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு ரோமானிய நாட்டின் டிரான்சில்வேனியா குன்று பகுதியில் உள்ள பெரிய பூந்தோட்டம் ஒன்றையே பரிசாக வழங்க டயானாவின் கணவரும், இளவரசர் வில்லியம்மின் தந்தையுமான இளவரசர் சார்லஸ் முடிவு செய்துள்ளார்.
இந்த அரிய பரிசு குறித்து கருத்து தெரிவித்த இளவரசர் சார்லசின் நீண்டகால நண்பரும் டிரான்சில்வேனியா பகுதியில் உள்ள அவரது சொத்துகளை நிர்வகித்து வருபவருமான கவுண்ட் டிபோர் கல்னோக்கி,
பெயர் சூட்டு விழாவின் போது பூக்களை பரிசாக தந்தால் அவை வாடிப்போய் விடும். ஆனால், பூந்தோட்டங்கள் தினந்தோறும் புதுப்புது பூக்களை தந்து மணம் பரப்பும்.
அது மட்டுமின்றி இந்த பூந்தோட்டத்தின் மலர்கள் குட்டி இளவரசருக்கு அவரது பாட்டனார் அளித்த அன்பளிப்பு என்பதை நினைவில் கொண்டு அவற்றை இப்பகுதி மக்களும் பத்திரமாக பாதுகாப்பார்கள்.
இதனால் இந்த பகுதியும் ரம்மியமாக காட்சியளிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.