உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி என்று பாராட்டப்படும் பிரபாகரன்!

உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி என்று பாராட்டப்படும் பிரபாகரன்!- பழ.நெடுமாறன் சிலிர்ப்பான அனுபவம்

உலகின் மிகச் சிறந்த இராணுவத் தளபதி என்று பாராட்டப்படும் பிரபாகரன் கையால் துப்பாக்கி பிடித்துச் சுட்டதை என் வாழ்நாளின் பெருமையாகக் கருதுகிறேன்!” இந்த நெகிழ்வான தருணத்தை   விகடன் மேடை நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க  ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் பகிர்கிறார் …
விகடன் மேடை கலந்துகொண்டு கேட்கப்பட்ட வினாக்களுக்கு பழ. நெடுமாறன் வழங்கிய அனுபவமான பதில்கள்:

கேள்வி:   பிரபாகரனுடனான உங்கள் உறவு எப்படி இருந்தது?

பதில்:  உங்களுக்கு ஒரு சம்பவம் சொல்கிறேன். 1990-ம் ஆண்டுகளில் ஈழப் போராட்டம் தீவிரமாக நடந்துவந்த நேரம். இந்திய இராணுவம் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் துப்பாக்கிகளுடன் திரிந்துகொண்டு இருந்தனர்.

அந்தச் சூழலில் புலிகளின் தலைவர் பிரபாகரனிடம் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. அந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் நான் ஈழம் சென்றேன்.

நான், கவிஞர் காசி ஆனந்தன் ஆகியோர் புலிகளின் முன்னணித் தளபதிகள் உட்பட பலரும் பிரபாகரனுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம்.

அப்போது பிரபாகரன் திடீரென, ‘வாருங்கள், ஓர் இடத்துக்குப் போவோம்’ என்று என்னையும் காசி ஆனந்தனையும் அழைத்துக்கொண்டு காட்டுப்பகுதிக்குள் சென்றார்.

அது ஓர் அடர்ந்த காடு. சிறிது தூரம் சென்ற பிறகு காட்டின் நடுவே சிறு பொட்டல்வெளி இருந்தது. அங்கு புலிகள் ஆயுதப் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர்.

இதுதான் துப்பாக்கி சுட்டுப் பயிற்சி எடுக்கும் இடம்’ என்று கம்பீரமான குரலில் கூறினார் பிரபாகரன். அங்கு மரத்தினால் ஆன ஒரு பொம்மை இருந்தது. அதன் நடுவே சுடுவதற்கு உரிய இலக்கு வட்டங்கள் இருந்தன.

பிரபாகரன் தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் குறி பார்த்துச் சுட்டார். துல்லியமாக இலக்கின் நடுவட்டத்தில் குண்டு பாய்ந்தது. சிறிய தடுமாற்றம்கூட இல்லை. அடுத்தடுத்த முறையும் எந்தத் தடுமாற்றமும் இல்லாமல் துல்லியமாகச் சுட்டார்.

நான் அதை ஆச்சர்யமாகப் பார்த்துக்கொண்டு நின்றபோதே, ‘நீங்களும் சுட்டுப் பழகுங்கள்’ என்று என்னிடம் துப்பாக்கியைத் தந்தார். ‘நானா… நான் சுட்டுப் பழகி என்ன செய்யப்போகிறேன். வேண்டாம்!’ எனத் தயக்கத்துடன் மறுத்தேன்.

பிரபாகரனோ, ‘சும்மா சுடுங்கள் அண்ணா!’ என்று சொல்லி, என் கையைப் பிடித்து துப்பாக்கியை வைத்து இலக்கை நோக்கிச் சுடவைத்தார். குண்டு, இலக்கின் நடுவட்டத்துக்கு வெளியே இரண்டாவது வட்டத்தில் பாய்ந்தது. சுற்றி நின்ற புலிகள், ‘முதல் தடவையிலேயே இவ்வளவு நெருக்கத்தில் சுட்டுவிட்டீர்கள்’ என்று கை தட்டினார்கள்.

முதல் தடவை துப்பாக்கியால் சுட்ட அந்தச் சில நிமிடங்கள் மிகுந்த பரவசமாக இருந்தது. அதைவிட, உலகின் மிகச் சிறந்த ராணுவத் தளபதி என்று பாராட்டப்படும் பிரபாகரன் கையால் துப்பாக்கி பிடித்துச் சுட்டதை என் வாழ்நாளின் பெருமையாகக் கருதுகிறேன்!

கேள்வி:  பிரபாகரனுடன் நீங்கள் பேசியதில் மறக்க முடியாத சம்பவங்களைக் குறிப்பிடுங்களேன்..

பதில்:  ராஜீவ் காந்தி அவர்கள் ஜெயவர்த்தனவுடன் உடன்பாடு செய்துகொண்டபோது, இந்திய விமானத்தை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி பிரபாகரனை அழைத்து வரச் செய்தார்.

அதே ராஜீவ் காந்திதான், டெல்லி அசோகா ஹோட்டலில் பிரபாகரனைச் சிறைவைப்பது போலப் பிடித்துவைத்துக்கொண்டு ‘இந்த உடன்பாட்டை ஏற்றே தீர வேண்டும். இல்லை என்றால் இங்கிருந்து வெளியேற முடியாது’ என்று தீட்சித் போன்ற அதிகாரிகளைக் கொண்டு மிரட்டச் செய்தார்.

எந்த மிரட்டலுக்கும் அவர் பணியாதபோது 2 மணிக்கு நேரடியாக பிரபாகரனை அழைத்துப் பேசினார். அப்போது எத்தனையோ வாக்குறுதிகளை ராஜீவ் காந்தி கொடுத்தார்.

இந்த உடன்பாட்டை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டாம். ஆனால், எதிர்ப்புத் தெரிவிக்காமல் இருந்தாலே போதும். இந்த உடன்பாடு செயல்படும் விதத்தைப் பொறுத்து நீங்கள் ஆதரிக்கலாம், ஆதரிக்காமலும் போகலாம். ஆயுதங்கள் முழுவதையும் ஒப்படைக்கத் தேவையில்லை.

புலிகளின் உயிர்களுக்கு இந்திய இராணுவம் உத்தரவாதம் தரும்’ என்பதுபோன்ற பல வாக்குறுதிகளைக் கொடுத்தார். உடன் இருந்த பாலசிங்கம் ‘இந்த வாக்குறுதிகளை எல்லாம் எழுத்துப்பூர்வமாக எழுதி இரு தரப்பும் கையெழுத்துப் போட வேண்டும் இல்லையா?’ என்று கேட்டபோது, மழுப்பலான பதில் சொல்லிவிட்டு ராஜீவ் காந்தி எழுந்து சென்றுவிட்டார்.

ஆனால், பிரபாகரனுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் அவர் நிறைவேற்றவே இல்லை. மாறாக, விடுதலைப் புலிகளைக் கூண்டோடு ஒழிப்பதற்கு உரிய முயற்சிகளைத்தான் ராஜீவ் காந்தி செய்தார்.

அதன் பிறகு திலீபன் உண்ணாவிரத சமயத்தில் பிரபாகரனால் அழைக்கப்பட்டு நான் ஈழம் சென்றபோது, ‘ஒரு பெரிய நாட்டின் பிரதமர் இப்படிப் பொய் வாக்குறுதிகள் கொடுத்து எங்களை ஏமாற்றுவார் என்று நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. ஆனாலும், நான் இந்தியாவின் மீது பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். எங்கள் ஆயுதங்கள் இந்தியாவுக்கு எதிராக ஒருபோதும் திரும்பாது’ என்று என்னிடம் சொன்னார்.

பிரபாகரனை எத்தனையோ முறை சந்தித்து இருந்தாலும், அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாதது. பிறகு, ‘புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டால் அவர்களுக்கு இந்திய இராணுவம் பாதுகாப்பு அளிக்கும்’ என்ற வாக்குறுதியும் மீறப்பட்டு, புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராகச் சண்டையிடும் சூழ்நிலையை உருவாக்கினார்கள்.

அப்போது இந்திய இராணுவத் தளபதியாக அங்கே போயிருந்த லெப்டினென்ட் ஜெனரல் திபேந்திர சிங் தான் எழுதிய நூலில், ‘இந்தியா செய்த மாபெரும் இராஜதந்திர தவறினால்தான் புலிகளுடன் போர் வெடித்தது’ என எழுதி இருக்கிறார். இதைப்பற்றி எல்லாம் நானும் நூலாக எழுதியுள்ளேன்.

கேள்வி:  தமிழ்த் தேசியம் என்றால் என்ன?

பதில்:  மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது.

உதாரணமாக, அல்ஜீரியாவில் இருந்து இந்தோனேஷியா வரை உள்ள முஸ்லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிஸ்தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முஸ்லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல.

ஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக்கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம். தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான்.

மங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரஷ்யா, ஜப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், ஜப்பானியர்கள் ஜப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம். இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை.

தமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்டவட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை, இலக்கியம், பொதுப் பழக்க வழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது.

ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம். தமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்!

கேள்வி: இந்திரா காந்தியைக் கொல்ல மதுரையில் முயற்சி நடந்தபோது நீங்கள்தான் காப்பாற்றினீர்கள். அப்போது நடந்தது என்ன?

பதில்: ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு எதிர்க் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவிப்பதற்காக கறுப்புக் கொடி காட்டுவது ஒரு ஜனநாயக மரபு. ஆனால், இந்திரா காந்தி எதிர்க்கட்சியில் எந்தப் பதவியிலும் இல்லாதபோது மதுரைக்கு வந்தார். அப்போது தி.மு.க. கறுப்புக் கொடி காட்டுவது என்ற பெயரில் திட்டமிட்டுக் கொலைவெறித் தாக்குதல் நடத்தியது. அந்தத் தாக்குதலில் இருந்து இந்திரா காந்தியை நானும் மற்றவர்களும் காப்பாற்றினோம். அதன் முக்கியத்துவத்தைப் பல வருடங்களுக்குப் பிறகுதான் உணர முடிந்தது.

சீக்கிய மெய்க்காப்பாளரால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு, இறுதி அஞ்சலி செலுத்த நான் டெல்லிக்குப் போயிருந்தேன். தமிழ்நாடு மாளிகையின் வெளியே நின்றுகொண்டு இருந்தபோது, டெல்லியில் வசிக்கும் தமிழர் ஒருவர் வந்தார். என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டு அழுதார்.

இந்திரா காந்தியின் மறைவுக்கு அழுகிறார் என்று நினைத்து, ஆறுதல் சொன்னேன். அவரோ, ‘கடந்த இரண்டு நாட்களாக சீக்கியர்கள் குடும்பம் குடும்பமாகப் படுகொலை செய்யப்படுகிறார்கள். குழந்தைகளைக்கூட விட்டுவைக்கவில்லை. ஒருவேளை, முன்னர் மதுரையில் இந்திரா காந்திக்கு ஏதேனும் நடந்திருந்தால், தமிழர்களின் நிலைமை என்னவாகியிருக்கும்?’ என்று பயந்துபோய் சொன்னார்.

சீக்கியர்களாவது அவர்களின் மத மரபுப்படி வாள் வைத்திருப்பார்கள். தங்களைத் தற்காத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு உண்டு. ஆனால், அப்பாவித் தமிழர்களுக்கு சாவதைத் தவிர வேறு வாய்ப்பு இல்லை. இந்திராவுக்கு ஏதேனும் நடந்திருந்தால், வட இந்தியாவில் வாழும் தமிழர்களுக்கு மிகப் பெரிய தீங்கு நடந்து இருக்கும். தமிழர்களின் மீது தீராத பழிச் சொல் படிந்திருக்கும். அந்தச் சம்பவத்துக்குப் பிறகுதான் மதுரையில் இந்திரா காந்தியின் உயிரைக் காப்பாற்றியதன் முழுப் பரிமாணத்தையும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது!

தொடரும்….

நன்றி : ஆனந்த விகடன்

Leave a Reply

Your email address will not be published.