பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இலங்கை செல்லும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரூனை தமிழ் தேசியக்கூட்டமைப்பினர் சந்தித்து பேசவுள்ளனர். இந்த சந்திப்பிற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையிலான எம்.பி. க்கள் குழுவினர் இந்தச் சந்திப்பில் பங்கேற்கவுள்ளனர்.பொதுநலவாய மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதில்லை என்று தமிழ் தேசியக்கூட்டமைப்பு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. அத்துடன் இந்த மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை குறித்தும் நாட்டில் இடம் பெற்ற, இடம் பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையிடுவதற்கும் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதன் ஒரு கட்டமாகவே பிரித்தானியப் பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கருத்துத் தெரிவிக்கையில்:-
பொதுநலவாய மாநாட்டிற்கு வரும் வெளிநாட்டுத் தலைவர்களை சந்திப்பதற்கு நாம் திட்டமிட்டுள்ளோம். இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. பிரித்தானியப் பிரதமரை நாம் சந்திக்கவுள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை பிரித்தானிய தூதரகம் மேற்கொண்டுள்ளது.
இதேபோல் வேறு பல தலைவர்களையும் சந்திப்பதற்கு முயல்கின்றோம். யார். யாரை சந்திப்போம் என்பது தொடர்பில் தற்போது கூறமுடியாது உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் இடம் பெறுகின்றன.
இந்த சந்திப்புக்களின் போது மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும், தற்போ தைய நிலை குறித்தும் ஆவண ங்களை கையளிப்போம் என்று தெரிவித்தார்.