சனல் – 4 தொலைக்காட்சியின்; இசைப்பிரியா தொடர்பான காணொளியை காரணம்காட்டி கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்கக்கூடாது என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். தெற்காசிய நாடுகளுடன் ஒன்றித்துச் செயற்பட்டாலே இந்தியாவின் பலம் அதிகரிக்கும் என்பதை டில்லி புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இசைப்பிரியா தொடர்பான காணொளி உண்மையென நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைத்தே தீரும். இவ்விடயத்தில் அரசு ஒரு போதும் பின்நிற்காது என்றும் அவர் தெரிவித்தார்.
இசைப்பிரியா உயிருடன் பிடிக்கப்பட்டு சித்திரவதைப்படுத்தி படுகொலை செய்யப்படும் காணொளி உண்மையானதே என்றும் மிகக் கொடூரமான இச்செயல் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் இந்திய மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்திருந்தார். இதுதொடர்பில் அமைச்சர் வாசுதேவாவிடம் வினவியபோது நாட்டில் பொதுநலவாய மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இசைப் பிரியா உயிரோடு பிடிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தினரால் இழுத்துக் கொண்டு செல்லப்படுகின்ற காணொளியானது தமிழர்களின் மனங்களை குழப்பும் விதமாகவே காணப்படுகிறது. இது சனல் – 4 தொலைக்காட்சியின் திட்டமிட்ட ஒரு செயலாகும். ஏற்கனவே இந்தியத் தமிழர்கள் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடைபெறுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்ற நிலையில், இக்காணொளியானது அவர்களை மேலும் தூண்டச் செய்யும் ஒரு செயலாகவே கருதப்படுகிறது.
ஆனால், இக்காணொளி மூலம் பொதுநலவாய மாநாட்டுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது என கூறமுடியும். அதிலும் இக்காணொளி ஒன்றை மட்டுமே காரணம் காட்டி பொதுநலவாய மாநாட்டை இந்தியா புறக்கணிக்காது என்றும் எம்மால் உறுதியாகக் கூற முடியும். ஏனெனில் இந்தியா தென்னகத் தமிழர்களை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையே. அவர்களின் கருத்துகளுக்கு மட்டும் செவிசாய்க்கக் கூடாது. உண்மையை முழுமையாக உணர்ந்து கொள்ளவேண்டும். எனத் தெரிவித்தார்.