வவுனியா மாவட்டத்தின் பூவரசன்குளம், கந்தன்குளம், புலவர் ஊர், கோவில் மோட்டை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தமக்கு நிரந்தர வீட்டுத்திட்டம் வழங்கக் கோரி வவுனியாவில் ஆர்பாட்டம் ஒன்றினை நடத்தியதுடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
யுத்தத்தின் பின் மீள்குடியேறி மூன்று வருடங்களுக்கு மேலாகியும் தமது கிராமங்களுக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்படவில்லை எனவும் ஆறு மாதங்களுக்கு என தற்காலிகமாக அமைக்கப்பட்ட வீடுகளிலும் தறப்பாலின் கீழுமே தாம் வசித்து வருவதாகவும், மழை காலம் தொடங்கியுள்ளமையால் வீடுகளுக்குள் இருக்க முடியாத நிலை இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்ததுடன் அது தொடர்பாக மனு ஒன்றினையும் அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கு கையளித்தனர்.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய அரசே நாம் ஏமாற்றப்படுவது உனக்கு தெரியாதா?, அதிகாரிகளே உங்கள் பொறுப்பற்ற செயலால் ஒரு சிறுமியை இழந்தோம், அமைச்சர் றிசாட் பதியூதினே உமது நீதியற்ற செயற்பாட்டை உடனே நிறுத்து, எமக்கான வீட்டுத் திட்டத்தை தடுத்து நிறுத்துவது யார்?, எமது கிராமத்திற்கு வந்த வீட்டுத்திட்டத்தை வேறு கிராமத்திற்கு மாற்றியது யார்? போன்ற வாசங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்தனர்.
வவுனியா மன்னார் வீதியில் உள்ள தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இருந்து சென்ற ஆர்ப்பாட்டமானது மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திரவிடம் மகஜர் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்த முடிவுற்றது.
இதன் போது கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர், இவ் விடயம் தொடர்பில் அரசாங்கத்திடம் தெரியப்படுத்துவதாகவும் இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சருக்கு தெரியப்படுத்துமாறும் கூறியதுடன் எமது பிரதேசத்திற்கு அடுத்து வரும் வீட்டுத்திட்டத்தின் போது குறித்த பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
இதன் போது வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், இ.இந்திரராஜா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் மாவட்ட அமைப்பாளருமான க.பரமேஸ்வரன் ஆகியோரும் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களுடனும் அரசாங்க அதிபருடனும் இது தொடர்பில் கலந்துரையாடினர்.