மாவீரர் நாள், பீதியின் தடுப்பு நடவடிக்கையில் சிங்கள இராணுவம்!

மாவீரர் நாள், பீதியின் தடுப்பு நடவடிக்கையில் சிங்கள இராணுவம்!

எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அன்றையதினம் பேரணிகளையோ அல்லது பொதுக்கூட்டங்களையோ நடத்த முடியாது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான அஜித் ரோஹன என்பவர் தெரிவித்துள்ளார்.


தாயக மண்ணின் விடுதலைக்காக வித்தாகிப்போன மாவீரர்களை நினைவு கூரும் மாவீரர் நாள் எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதற்காகத் தமிழகத்திலும் புலத்திலும் பெரும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குள் வடக்கு மாகாணசபை வந்த பின்னர் முதன் முதலாக வருகின்ற இந்த மாவீரர் நாளை உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கவேண்டும் என்பதில் வடக்குத்தமிழ் மக்களும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், கடந்த வருடம் மாவீரர் தினத்தன்று யாழ். பல்கலைக்கழக வளாகம் மற்றும் மாணவர் விடுதிகளில் மாணவர்கள் விளக்கேற்றி, மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் தொடர்பில் இடம்பெற்ற அசம்பாவிதத்தையடுத்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுப்பில் வைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், மாவீரர் நாளில் மாவீர்களை நினைவுகூர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்ட துண்டுப் பிரசுரங்கள், படையினரின் கடும் பாதுகாப்பையும் மீறி யாழ். பல்கலைக்கழகச் சுற்றாடலில் நேற்றுமுன்தினம் விநியோகிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் மாவீரர் தினம் முடிவுற்ற பின்னரே தற்போது மூடி வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகத்தை திறந்து விட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எதிர்வரும் 27 ஆம் திகதி மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயங்களில் மற்றும் பொது இடங்களில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப் பொலிஸாரினால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.