சென்றுவருக போராளியே….- ச.ச.முத்து.

mandelaஎதிர்பார்த்திருந்த ஒரு செய்திதான்.
இன்றோ நாளையோ என எப்போதும்
எதிர்பார்த்தே இருந்திருந்த சேதிதான்.
ஆனாலும் கேட்டவுடன் நெஞ்சுக்குள்ளே
ஈரத்துணி ஒன்றை போர்த்தி வைத்ததுபோல
ஏதுமற்ற வெறுமை தெரிகிறதே
அதுதான் நீ எங்களுக்குள் ஊன்றி வைத்த
உன் நினைவுகளின் ஆழம்
மன்டேலா…

ஒப்பனைகள் ஏதுமற்ற அற்புதமே..
உலகத்தின் அத்தனை உயரிய
விருதுகளும் சிறப்புகளும் உன்தன்
தோளையும் நெஞ்சையும் நிறைத்திருந்தாலும்
எனக்கென்னவோ நீ எப்போதும் ஒரு
ஓய்வறியாத போராளியாகவே தெரிகிறாய்.
இன்னும் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும்
ஒரு தேசத்தவன் என்பதால் அப்படி இருக்கலாம்.
ஐக்கியநாடுகள்சபைகூட உந்தன் பிறந்தநாளை(யூலை18)
“நிறவெறிக்கு எதிரான நாளாக
பிரகடனம் செய்து ‘மன்டேலாநாள்’ என்று
பொறித்தும் வைத்ததுகூட என்னைப் பொறுத்தவரையிலும்
உன் பெருமைகளில் உயர்ந்ததென்று கருதேன்.

நேற்றும் இன்றும் நாளையும் அடக்குமுறையாளனின்
ஏதோ ஒரு சிறைக்குள்ளே நாட்களை கழிக்கும்
ஒவ்வொரு விடுதலைப்போராளிக்கும்
உந்தன் சிறைநாட்களும்
ரொபின்தீவு சிறைக்கொட்டடியில் நீ உறங்கிய
அந்த எட்டுஅடி ஏழுஅடி கூண்டும்
பகல்முழுதும் கொழுத்தும் வெயிலில்
நீ கல்லுடைத்தும் இரவுகளில் ஏதோ
ஒன்றை படிப்பதற்காக தேடியதும்
ஒரு உறுதியை வழங்குமே மன்டேலா
அதுதான் உனக்கான உயரிய விருதாக
நான் என்றுமே கருதுவேன்.

உலகத்து ஆளும் தரப்புகள் அனைத்தும்
தங்கள்தங்தள் தேசத்து உயரிய விருதுகளை
சுதந்திரத்துக்கான ஜனாதிபதிவிருது என்று அமெரிக்காவும்
கௌரவ கனடியகுடிமகன் என்று கனடாவும்
பாரத்ரெத்னா என்று பாரதமும்
நிசான்-இ.பாகிஸ்தான் என்று பாகிஸ்தானும்
நோபல்பரிசு என்றும் அத்தனை பெற்று இருந்தாலும்
நீ எப்போதும் போராளிகளின் போராளி
அது ஒன்றுதான் அடங்கமறுத்து திமிர்ந்தெழும்
மனித ஆளுமைகளின் விருது.
பெற்றுக் கொள் மன்டேலா.

எங்கள் எல்லோருக்கும் ஒரு பயமிருந்தது.
எங்கே இந்த விடுதலைக்கான ராஜாளிப்பறவையை
தேசத்துதலைவன் என்ற சிம்மாசனம்
விலங்குபூட்டிவிடுமோ என்று…

நல்லவேளை பதவிதளைகளில் இருந்து
நீ உன்னை விடுவித்தாய்-நன்றி மன்டேலா.
ஆனாலும் ஒரு சில நெருடல்கள் மன்டேலா
நீ விடுதலைஆன அந்த நாளை ஏதோ
எங்கள் எல்லோருக்குமான ஒரு அங்கீகாரம்போலவே
எத்தனை மகிழ்ந்திருப்போம்-களித்திருப்போம்.
ஆனால் உன் தென்ஆபிரிக்கா சர்வதேசத்து சபைகளில்
இனப்படுகொலை சிங்களத்துக்கு ஆதரவாக
நின்றிருந்த அந்த கணங்களில் நாம்
உண்மையிலேயே மனதுக்குள் துடித்துபோனோம்.
நீயுமா தென்ஆபிரிகா என்றே உடைந்தோம்.
மன்டேலாவின் கனவுதேசமா இப்படி என்று
கொஞ்சம் இடிந்தும்போனோம்.

இவை எதுவுமே உன்னைப் பற்றிய
எங்களின் எண்ணங்களில் எள்ளளவும்
கீறலை விழுத்தியதில்லை மன்டேலா
ஏனென்றால் நீயும் நாங்களும் இந்த பூமிப்பந்தில்
சுதந்திரம் என்ற அற்புதம் நிகழ்த்தவே
பயணப்பட்டோம்-பயணிக்கின்றோம்.
எங்கள் போராளிக் குடும்பத்தின்
மூத்த புதல்வன் நீ-
உன்னை மரணம் ஒருபோதும்
வென்றுவிட முடியாது.

ஏனென்றால் ரிவோனியா நீதிமன்றத்தின்
கூண்டுகளுக்குள் நின்றபடியே 20ஏப்ரல் 1964 அன்று
நீ சொன்னாயே ‘இந்த இலட்சியத்துக்காக நான்
சாகவும் தயாராக இருக்கின்றேன்’ என்று
சென்றுவருக போராளியே!
விடுதலைக்கான உந்தன் நீண்ட
பயணம் மரணத்தில் ஒருபோதும் முடியாது மன்டேலா.
எல்லாவற்றிற்கும் நன்றி மன்டேலா..

Leave a Reply

Your email address will not be published.