வர்த்தகநலனுக்காக எதுவுமே செய்யலாம் என்பதுதான் புதிய வர்த்தகக்கோட்பாடு. உலகமயமாக்கல் தந்த புதுவிதி. நாடுகளுக்குள் தமது ஆளுமையை விரிப்பது, நிறுவனங்களை நீட்டுவது என்பதுடன் மட்டுமே இது நிற்பதில்லை. இந்தியாவுக்கும் – சீனாவுக்குமான வர்த்தகபோட்டியில் ஆங்கிலமும் ஒரு களமாகத் திறக்கப்பட்டுள்ளது. அது பற்றிய ஒரு பார்வை…
ஆங்கில மொழியின் இன்றைய பாவனை பற்றி சுவாரஸ்யமாக ஒன்றை குறிப்பிடுவார்கள். பல பல நூற்றாண்டுகளாக மதமாற்றம் செய்ய உலகமேங்கும் முயற்சி செய்தவர்கள் அத்துடன் ஆங்கில மொழியையும் பரப்பவே மிகவும் முயன்றார்கள். நூறு ஆண்டுகளாக அவர்களால் முடியாதததை ஒரு இருபது ஆண்டில் பில்கேட்ஸ் சாதித்துவிட்டார் என்பார்கள். உண்மைதான்.
இன்று ஆங்கிலமொழி ஆங்கிலேயர்களுக்கு மட்டுமே சொந்தமான ஒரு மொழியல்ல என்று கூறுமளவுக்கு அந்த மொழி இராஜதந்திர பரிமாற்றம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் என்று எல்லாவற்றிற்கும் மேலாக ‘இன்டெர்நெற்’ எனப்படும் சர்வதேச இணையவலைக்கும் இதுவே மிகமுக்கிய மொழியாக இருக்கிறது.
விரும்பியோ விரும்பாமலோ ஆங்கிலம் உலகின் மிகமிக முக்கிய தொடர்புமொழியாக ஆகிவிட்டது. இத்தகைய மொழி மீதான புலமை அல்லது ஆளுமையை அதிகப்படுத்துவதன் ஊடாகவே தமது வர்த்தக சாம்ராஜ்யத்தையும் விரிவுபடுத்தலாம் என்பதால் உலகின் மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட இரண்டு நாடுகள் ஆங்கிலத்தை நோக்கி புதியவியூகங்களை வகுத்து செயல்படுகின்றன. அதிலும் இந்த இரு நாடுகளுக்குள்ளும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பாக இதே ஆங்கில மொழி வர்த்தக மொழியாகவே (கிழக்கிந்திய கொம்பனி மூலமாக) நுழைந்தது. இன்று அதே வர்த்தக உலகை வெல்வதற்காக இதே சீனாவும் இந்தியாவும் ஆங்கிலத்தை வாளாக எடுத்து சுழற்றி நிற்கிறார்கள்.
இந்தியாவும் சீனாவும் பெரு யுத்தம் ஒன்றில் ஈடுபடுகின்றனவோ இல்லையோ தமது வர்த்தகவலையை இன்னும் அதிக பரப்புக்கு நீட்டுவதிலும் அமெரிக்காவுக்கு அடுத்த பெரும் சக்தியாக உருவெடுப்பதிலும் உள்ளுக்குள் பெரும் போட்டியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது உலகறிந்த உண்மை.
தகுதியும் வலிமையும் உள்ளவை, அறிவும் ஆற்றலும் உள்ளவையே நிலைக்கும் என்ற சார்ள்ஸ் டார்வினின் கோட்பாட்டை மிகநன்றாகப் புரிந்துகொண்ட சீனாவும் இந்தியாவும் அறிவை, ஆற்றலை பெருக்குவதற்கு இப்போது ஆங்கில மொழிக்குள் புகுந்திருக்கிறார்கள். அதிலும் இந்தியா ஓரளவுக்கு ஆங்கில மொழியுடன் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக விரோதமற்ற மனப்பாங்குடனேயே நடந்துவந்துள்ளது. இந்தியாவின் சுதந்திரத்துக்காக போராடியதாக சொல்லிக்கொள்ளும் இந்திய தேசிய கொங்கிரஸ் இந்தியா சுதந்திரம் அடையும்வரை தான் நடாத்திய கூட்டத்தொடர் அனைத்தையும் ஆங்கிலத்திலேயே நடாத்தியதும், இந்தியா விடுதலை அடைந்தபோது 1947ல் இந்தியாவில் 66 இலட்சம் பேர் ஆங்கில மொழியை பேசக்கூடியவர்களாக இருந்தார்கள் என்பதும் இந்த ஆங்கிலத்துடன் ஒத்துப்போனதால்தான்.
ஆனால் சீனா அப்படி இருக்கவில்லை. ஆங்கிலேயர்களுடனான அபின் யுத்தத்திலிருந்து ஆங்கிலம் என்பதே ஒரு காட்டுமிராண்டி மொழியாகவே அங்கு கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் உலகமயமாக்கலும், சர்வதேச தொழில்நுட்ப வலை அமைப்பும் ஆங்கிலம் தெரிந்தால் வர்த்தகப் போட்டியில் இன்னும் முன்னுக்கு வரலாம் என்பதை காட்டியுள்ளது. அதற்காக சீனா ஒன்றும் வேறு எங்கும் பாடம் படிக்க போகதேவையில்லை. அயலிலுள்ள இந்தியா 2009ம் ஆண்டில் தனது கம்யூட்டர், ஆங்கில மொழியறிவு என்பனவற்றால் ஏறத்தாழ 120 பில்லியன் டொலர்கள் ஈட்டிக்கொண்டதை குறிப்பிடலாம்.
கொஞ்சம் உதாரணத்துக்கு பார்த்தால் கலிபோர்னியாவில் மட்டும் 27,000 பிள்ளைகளுக்கு இணையவழியிலாக கணிதம், ‘கம்யூட்டர்’ தொழில்நுட்பம் என்பன இந்தியாவிலிருந்து (ளிஸீறீவீஸீமீ) கற்றுத்தரப்படுகிறது. அமெரிக்காவும் மேற்குலகும் தமது கைகளுக்குள் வைத்திருந்த வர்த்தக சாம்ராஜ்யத்தை தமது பிடிக்குள் கொண்டுவருதில் சீனாவும் இந்தியாவும் நடாத்தும் அதே போட்டியை அதே மேற்கின் முக்கிய மொழியான ஆங்கிலத்தை கையாள்வதிலும் செய்கிறார்கள்.
சீனாவின் முக்கிய பெரிய மொழி புடாங்குவா அல்லது பெஜ்ஜிங் மென்டரின் என்பதே. இருமொழிக் கொள்கையே சீனாவின் அதிபகாரபூர்வமான மொழிக்கொள்கையாகும். அதிகம் மக்களால் பேசப்படும் சைனீஸ் மென்டரின் மொழியுடன் அவரவர்களின் தாய்மொழி இரண்டாம் மொழியாக இருக்கும். ஆனால் சீனா பொருளாதார வல்லரசாக, நவீனத்துவம் அடையவேண்டுமானால் இரண்டாம் மொழியாக ஆங்கிலம் அல்லது யப்பான் மொழி கற்றுதரப்படவேண்டும் என்பதே இந்தியாவை பார்த்து சீனா கண்ட பெரிய பாடமாகும்.
ஆனாலும் சீனா அதிகமாக ஆங்கில மோகித்து கொள்வதில் அதற்குள்ளேயே பெரிய கருத்து மோதல்கள் 90களின் இறுதிவரை இருந்தது. ஆனால் 2000ம் ஆண்டுக்கு பிறகு, இருபத்தியோராம் நூற்றாண்டு ஆரம்பித்த பின்னர் சீனா இதில் ஒரு உறுதியான முடிவெடுத்து அடிகளை வைக்கத்தொடங்கியது.
2008 பெஜ்ஜிங் ஒலிம்பிக்போட்டிகளில் சீனாமொழிக்கு நிகராக ஆங்கிலம் பாவிக்கப்பட்டதும், உலக வர்த்தக அமைப்பில் சீனா உறுப்பினரானதும் சீனா ஆங்கிலத்தை ஒரு கை பார்த்துவிடுவது என்று முடிவெடுத்து விட்டது என்பதையே காட்டியது. ஆரம்பகல்வியின் ஏழாம் வகுப்பிலேயே ஆங்கிலம் கட்டாயமாக இருந்தது.ஆனால் சீனா 2000க்கு பிறகு அதனை மூன்றாம்வகுப்பு முதல் ஆங்கிலம் கட்டாயமொழி என்று மாற்றியபோதே அது ஆங்கிலத்தை கையகப்படுத்துவதில் காட்டும் அபார அவசரம் புரிந்தது. அதிலும் சீனார் தமது வித்தியாசத்தை வலு லாவகமாகவே காட்டினார்கள்.
இந்தியர்கள் தமது இருநூற்றுவருட ஆங்கில ஆட்சிக்குள்ளாக இங்கிலாந்து ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டது போல சீனா இம்முறை அமெரிக ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டது. சரியான போட்டிதான். இன்று சீனாவில் ‘வால் ஸ்றீற் இன்ரிரியூட்’ என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ஆங்கிலம் கற்றுத்தரும் கல்விநிலையங்கள் முளைத்துள்ளன. சீனாவின் தெருக்களின் அறிவிப்புபலகைகளில் ஆங்கிலம் கட்டாயமானதாக இடம் பிடித்துள்ளது.
சீனாவும் இந்தியாவும் ஆங்கில அறிவுநிரம்பிய ஒரு கட்டமைப்பு தமது நாட்டில் இயங்குகின்றது என்பதை நிரூபிப்பதில் நடாத்தும் போட்டியில் முக்கிய காய்கள் யாரென்றால் இந்த இரண்டு நாடுகளில் இருந்தும் வெளி நாடுகளுக்கு கல்விகற்க அனுப்பபடும் மாணவர்களே ஆகும். அவர்கள் கற்று திரும்பவும் தமது தாய்நாட்டுக்குவந்து மேலும்மேலும் தேர்ச்சியாளர்களை உருவாக்குவார்கள் என்பதே இவர்களின் கனவு. அதில் அதிக மண் விழுந்தது சீனாவுக்கே. (இந்தியாவுக்கும்தான்..) கடந்த ஒரு, இரண்டு பத்தாண்டுகளில் சீனாவில் இருந்து கல்விகற்க மேற்குலம் வந்த 1.8 மில்லியன் மாணவர்களில் அரைவாசிக்கும் குறைவானவர்களே மீண்டும் திரும்பி சென்றுள்ளார்கள்.
அதிலும் சீனா புதிய அறிவிப்புகளை செய்துள்ளது. மேற்குலகில் கற்றுதிரும்பும் மாணவர்களுக்கு அதிக சம்பளமும் சலுகைகளும் அறிவிப்பு செய்யப்பட்டு இழுக்கப்படுகின்றனர். ஆக, சீனாவும் இந்தியாவும் இந்த ஆங்கிலப் போட்டியில் இப்போது மும்முரமாகவே இருக்கின்றனர். இதில் இன்னொரு பக்கவிளைவை இருநாடுகளும் எதிர்காலத்தில் சந்தித்தே தீருவர்.
இந்த ஆங்கிலமொழிக் கல்வி, மேற்படிப்பு என்பனவற்றால் தரமான ஆங்கிலம் வரும் என்பது உண்மைதான். அத்துடன் நிச்சயமாக மேற்கின், ஆங்கிலக் கலாச்சாரமும் உள்நுழையும். அப்போது அதில் இருந்து தமது நாட்டை மீட்க இந்த இருநாடுகளும் மீண்டும் புதிய வழிகளை காணுவார்கள். காசு பணம் பார்ப்தென்று முடிவெடுத்து விட்டால் இரத்தம், உயிர்கள், தனிஅடையா
ளம் எல்லாம் பார்க்க முடியாது என்பது புதிய வர்த்தகப் போட்டி உலகின் களயதார்த்தம். புதிய புதிய முறைகளை கண்டு அவற்றின் ஊடாக அதிக அதிக இலாபம் ஈட்டுவதே அதன் நோக்கம்.
நன்றி: ஈழமுரசு