ஜெனீவாவில் நடைபெற்ற மனிதஉரிமை கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒருமாதத்துக்கும் மேல் ஆகின்றது.
அந்த பிரேரணையை தோற்கடிப்பதற்கு சிறீலங்கா தேசம் நடாத்திய அனைத்து நாடகங்களையும் முயற்சிகளையும் மணிகவ்வ வைத்து அந்த பிரேரணை நிறைவேறியுள்ளது.
அந்த பிரேரணை வலுவானதா வலுவற்றதா என்பதை விடவும் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு இருப்பதானது சர்வதேச அரங்கில் சிங்களதேசத்துக்கு கிடைத்த பெரிய சறுக்கலாகவும் தோல்வியாகவுமே பார்க்கப்படுகின்றது.
சிங்கள தேசம் ஈழத்தமிழ் தேசிய இனத்தின்மீது தனது படைப்பலத்தை பாவித்து சர்வதேச விதி முறைகளுக்கு முரணான விதத்தில் போர்முறைகளை நடாத்தியுள்ளது என்ற கருத்தும் அதற்கான ஆதாரங்களும் சர்வதேசஅரங்கில் முன்எப்போதும் இல்லாத வகையில் அழுத்தமாக எழுந்துள்ளன.
அத்துடன் ஈழத்தமிழ் இனத்தின் உரிமைகளையும் அதிகார பரவலாக்கத்தையும் சிறீலங்கா வழங்கியே தீரவேண்டும் என்பதையும் சர்வதேசம் அழுத்தி சொல்ல ஆரம்பித்துள்ளதையே ஜெனீவா பிரேரணை காட்டுகின்றது.
இதற்கு மறுபுறத்தில் இவற்றை மறுத்து இதனை நிராகரித்து அங்கு தமிழர்கள் அமைதியாகவும் ஆனந்தமாகவும் உரிமைகளுடனும் வாழ்வதாக காட்டிக்கொண்டு சிங்கள தேசம் நிற்கின்றது.
பிரேரணை நிறைவேற்றப்பட்டு அது காகிதத்தில் எழுதப்பட்டவுடன் அனைத்தும் நடந்துவிடும் என்று கற்பனை கட்டிக்கொண்டு தமிழர்கள் எவரும் தூங்கிக்கிடக்க முடியாது. இதனைப் போன்ற பலபல பிரேரணைகள் தீர்மானங்கள் ஐநா வில் நிறைவேற்றப்பட்டு பல பத்து வருடங்களாக இன்னும் செயற்படுத்தபட முடியாமலேயே தூசி படிந்து கிடப்பதை ஐநா வரலாற்றில் பார்க்கலாம்.
யாரையும் விட மிக அதிகமாகவே தமிழர்களாக எமக்குதான் சிங்கதேசத்தின் குரூரமும் நரித்தனமும் தெரியும். மிகமிக குறைந்த அளவிலான உரிமைகளை தமிழருக்கு வழங்க கோரும் இந்த பிரேரணையைகூட சிங்கள பேரினவாதம் வழங்கிவிடப்போவதில்லை என்ற பெரும் உண்மையை உலகமும் உணர வைப்பதன் மூலமே எமது சுயநிர்ணஉரிமையை கோர முடியும்.
அதற்கான அனைத்து தரவுகளையும் நாம்தான் சேகரித்து வழங்கவேண்டும். ஜெனீவாவில் ஐநா பிரேரணை நிறைவேற்றப்பட்ட இந்த ஒரு மாத காலத்துள் பிரேரணையில் கூறப்பட்ட எத்தனை விடயங்களை சிறீலங்கா மீறுகின்றது என்ற விபரங்களை ஈழமுரசு பத்திரிகை தனது பதினோராம் பக்கத்தில் (11ம்பக்கம்) தொடர்ந்து அட்டவணைப்படுத்தி வருகின்றது.
இவற்றை ஆங்கில மொழியிலும் தமிழர்கள் வாழும் ஒவ்வொரு நாடுகளின் மொழியிலும் மொழிபெயர்த்து உடனுக்குடன் ஐநா சபைக்கும் அனைத்து நாடுகளுக்கும் அடுத்த வருடம் மனித உரிமைக்கூட்டதொடரில் அங்கம் வகிக்கபோகும் நாடுகளுக்கு இப்போதிருந்தே அனுப்பிக்கொண்டிருக்கவேண்டும்.
ஐநாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை சிறீலங்கா உதாசீனம் செய்து தமிழர்களை மேலும் மேலும் கொடுமை செய்வதை கொலைசெய்வதை நிலம்பறிப்பதை திகதி வாரியாக அட்டவணைப்படுத்தி அனுப்பிக்கொண்டிருக்க வேண்டும்.
ஒவ்வொருவரும் அவர் அமைப்பு சார்ந்தும் தனித்தனியாகவும் இதனை செய்து வந்தால் நிச்சயமாக ஒரு பெரும் மாற்றம் ஒன்று வருகின்ற காலத்தில் நிகழும். எமது ஒவ்வொரு சிறு அசைவும் பெரும் அதிர்வுகளாக மாறும் என்பதை உறுதியாக்குவோம்.