எனது கணவரைக் கொலை செய்துள்ளனர் !

வெலிக்கடை சிறைச்சாலையினுள் கைதியாகவிருந்த பிரித்தானியப் பிரஜை உயிரிழந்தமைக்கான காரணத்தை சட்ட மருத்துவ அதிகாரியின் அறிக்கை கிடைத்த பின்னரே கூற முடியும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்திராரத்ன பல்லேகம தெரிவித்துள்ளார். விஷ்வலிங்கம் கோபிதாஸ் எனப்படும் இந்தக் கைதியின் சடலம் நேற்று காலை சிறைச்சாலையின் கழிவறையில் இருந்து மீட்கப்பட்டது. எனினும், இந்த மரணம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த 43 வயதான விஷ்வலிங்கம் கோபிதாஸ் பிரித்தானியாவில் பிரஜாவுரிமை பெற்றவர்.

புலிகளுக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில் 2007 ஆம் ஆண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2012 ஆம் ஆண்டு அவருக்கு 5 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. சட்ட மருத்துவ பரிசோதனைக்காக சடலம் இன்று கொழும்பில் உள்ள சட்ட மருத்துவ அலுவலகத்தின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது. குறித்த இடத்திற்கு வருகை தந்த கொழும்பு நீதவான் நீதிமன்றத்தின் இரண்டாம் இலக்க நீதவான் நிரோஷா பெர்ணாண்டோ விசாரணைகளை மேற்கொண்டார். அதன் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது. விஷ்வலிங்கம் கோபிதாஸின் உறவினர்கள் பிரித்தானியாவில் வசிப்பதுடன், அவர்கள் இன்று நாட்டை வந்தடைந்தனர்.

விஷ்வலிங்கம் கோபிதாஸ் 14 மற்றும் 10 வயதான இரண்டு பெண் பிள்ளைகளின் தந்தையாவார். இந்த மரணம் தொடர்பில் தமக்கு சந்தேகம் நிலவுவதாக உறவினர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். அத்தோடு பிரதப் பரிசோதனை நடத்தாமல் பிரேதத்தை எடுத்துச் செல்வதே நல்லது என்று பொலிசார் முன்னர் குறிப்பிட்டுள்ளார்கள். இதன் காரணமாக அவர் சிறைச்சாலையில் வைத்து கொல்லப்பட்டு இருக்கலாம் என்று அவர்களது உறவினர்கள் குற்றஞ்சுமத்தியுள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published.