Search

ஏந்தும் சிங்ககொடியும் மறுக்கின்ற சுயநிர்ணயமும் – ச.ச.முத்து

தேசிய நல்லிணக்கத்துக்கு சிங்கள தேசத்துக்கு இதைவிட வேறு ஏதும் சின்னமோ புகைப்படமோ தேவையில்லை. என்ன மாதிரியாக ஒரு வாஞ்சையுடன் அந்த கொடியை ஏந்தியபடி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மேதின நிகழ்வு மேடையில் ஆட்டிக்காட்டுகிறார். இந்த சிங்கக் கொடியை நந்திக் கடலின் ஓரத்தில் நீண்ட கம்பத்தில் எந்தவொரு இடைஞ்சல்களுமின்றி பறக்கவிடுவதற்காக சிங்களப்படைகளால் கொல்லப்பட்ட லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் இறுதிநேர கதறல்கள் இந்த மேதின ஆட்டத்தில் சம்பந்தனின் காதில் விழாமலேயே போயிருக்கும்.

இந்த சிங்கக்கொடியின் கீழேதான் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியப்பிரமாணம் சௌ;துள்ளோம். எனவே அந்த கொடியை ஏந்திப்பிடிப்பதில் என்ன தவறு இருக்கிறது என அவரின் சட்டத்தரணித்தனமான வாதம் கேட்கலாம். பயமுறுத்தலின் காரணமாகவோ அல்லது நெருக்கடியின் காரணமாகவோ இந்த கொடியை சாதாரண தமிழ் மக்கள் ஏந்தவேண்டி இருந்தால் அதில் பிழை ஏதும் இருக்கப்போவதில்லை. தவறும் இல்லை.

ஆனால் சம்பந்தரை பொறுத்தவரையில் அவர் மிகவும் விருப்புடனேயே அதனைவிட மிகவும் குதூகலத்துடனேயே சிங்ககொடியை ஏந்தி உயர்த்தி பிடித்திருப்பது தெரிகிறது. சம்பந்தரும் அவரின் கூட்டமும் அண்மைக்காலமாக விடுத்துவரும் அறிக்கைகள், பேட்டிகளுடன் ஒப்பிடும்போது இப்போது சம்பந்தர் சிங்கள தேசத்தின் கொடியை உயர்த்திபிடித்திருப்பது ஒன்றும் அதிசயமானதோ அதிர்ச்சி தரக்கூடியதோ இல்லை.

ஒரு தேசத்துக்குள் தீர்வு என்றும் பிளவுபடாத சிறீலங்கா ஒற்றை ஆட்சிக்குள் தமிழர்களுக்கு தீர்வு என்றும் இதுவரை சொல்லி வந்ததை இப்போது ‘சிம்போலிக் ஆக சிங்ககொடியை ஆட்டியடி காட்டியிருக்கிறார் சம்பந்தர்.

இப்போது இந்த சிங்ககொடியின் ஆளுகைக்கு கீழேதான் நாளாந்த அன்றாட கருமங்கள் அனைத்தையும் கழிவறைக்கு செல்லவது உட்பட செய்துகொண்டிருக்கிறோம். இந்த நிலையில் அந்த கொடியை பகிரங்கமாக தூக்கி உயர்த்தி காட்டுவதில் என்ன தவறு என்று அவர் கேட்கலாம்.

நிறைவே தவறுகளும் இதில் இருக்கிறது.

முதலில் இந்த சிங்ககொடி என்பது சிங்களதேசத்தின் கொடி என்பதைவிட தமிழர்கள் இரண்டாம் தரகுடிமக்கள் என்பதையும் சிங்கள பேரினவாத மனப்பான்மையை சித்திரமாக கொண்டதும்தான் என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். தமிழர்களின் மன்னனான எல்லாளனை வீழ்த்தியபோது துட்டகெமுனு ஏந்திநின்ற கொடி என்று சிங்கள பேரினவாத தொன்மைக்கதைகள் கூறும்கொடியில் இருந்ததுதான் இன்று சம்பந்தன் ஏந்திய சிங்ககொடியில் இருக்கும் வாள் ஏந்திய சிங்கம்.

தமிழர்களின் உரிமைப்போர் முளைவிட்ட காலத்தில் இருந்தே இந்த சிங்ககொடியை நிராகரித்து எழுந்ததே தமிழ்தேசிய உணர்வு. இந்த கொடியை ஏற்றுக்கொண்டு அதனை ஏந்துவது என்பது இந்த கொடியின் பெயரால் சிங்கள தேசம் புரியும் இனப்பாகுபாட்டை, இன அடக்குமுறையை, இனரீ தியான உரிமை மறுப்பை, ஏற்றுக்கொள்வதற்கு சமனாகும் என்பதாகவே கருதப்பட்டது. கருதப்படுகின்றது.

தமிழர்களின் உரிமைப்போர் இன்னொரு கட்டத்துள் நுழைந்தபோது சிங்ககொடியை வெறுமனே நிராகரிப்பதுடன் நின்றுவிடாமல் அது தமிழர்களின் மண்ணில் பறக்கும் பொழுதில் எரிக்கப்பட்டு சிங்கள தேசத்துக்கு இது எங்கள் கொடி அல்ல என்ற சேதி சொல்லப்பட்டது.

எல்லாவற்றிலும் மேலாக சம்பந்தரின் தொகுதி இருக்கும் மண்ணில் ஏறத்தாள முப்பத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே திருமலைமண்ணில் சார்ள்ஸ் அன்ரனி என்ற வரலாற்று வீரன் இந்த சிங்கள தேசத்து சிங்ககொடியை அது காற்றில் எழும்போது எரிவதற்கு ஏற்றதாக பொஸ்பரசு வைத்து எரித்தானே அது எதற்காக என்பதையும் மறந்துவிட்டாரா?

அந்த பதினெட்டு வயது மாணவனுக்கு அப்போது இதே சிங்ககொடி பற்றி இருந்த பார்வையும் தெளிவும் பழுத்த (?) அரசியல்வாதி என்று தன்னைதானே கூறிக்கொள்ளும் சம்பந்தனுக்கு இல்லாமல் போனது எப்படி? இன்றுவரைகூட தமிழர் மண்ணில் சிங்ககொடி பறப்பது என்பது அது படைபலத்துடன் சம்பந்தப்பட்ட ஒன்றாகவே இருக்கின்றது. துப்பாக்கி ஏந்திய படையினரின் பாதுகாப்புடனேயே சிங்ககொடி பறக்கமுடியும் என்ற நிலையே இருக்கின்றது.

இந்த சிங்ககொடியை ஏந்துவதன்மூலம் தமிழர்களின் உரிமைகளை சிங்கள பேரினவாதத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று சம்பந்தன் நினைக்கிறாரா?

வரலாறு வரலாறாக சிங்களம் எதனை செய்கிறது என்றும் எதுவரை நாம் கீழே சென்று பாதம் கழுவினாலும் சிங்கள பேரினவாதம் மாறப்போவதில்லை என்பதும் கண்கூடாக கண்டுவரப்படும் யதார்த்தம். அண்மையில்கூட ஒருமாதத்துக்கு முன்னர் ஜெனீவாவில் சிங்கள தேசத்துக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதற்கு எதிராக சிங்கள தேசத்தில் சிங்ககொடியை ஏந்தியபடி ஊர்வல ஆதரவு தந்த முஸ்லீம்களுக்கு ஒரு முப்பது நாட்களுக்கிடையிலேயே தம்புள்ளயில் சிங்களம் என்ன கைமாறு செய்தது என்பதை பார்த்தோமே. சம்பந்தர் பார்க்கவில்லையா?

சம்பந்தரை தேசிய தலைவராக புதிதாக உருவாக்க நினைப்பவர்களும் அவரது தலைக்கு பின்னால் ஒருவிதமான ஞான ஒளிவட்டம் ஒளிருவதாக உருவகப்படுத்துவபவர்களும் இப்போது என்ன சொல்ல போகிறார்கள்?

சுயநிர்ண உரிமையை வலியுறுத்த வேண்டாம் என்றும் சிங்கள தேசத்தை போர்க்குற்றத்துள் தள்ளுவது தேசிய நல்லிணக்கத்துக்கு குந்தகம் என்றும் சிங்கள தலைமைக்கு இடைஞ்சல் கொடுத்தால் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்துவார்கள் என்றும் மாறிமாறி கருத்துகளை கூறி குழம்பி, குழப்பி நிற்கும் கூட்டமைப்பின் ஒரு பகுதியினர் அமிழ்ந்துபொயிருக்கும் அடிபணிவு அரசியலின் புதிய வடிவம்தான் சம்பந்தர் ஏந்தி இருக்கும் சிங்ககொடி.

இப்போதுதான் எல்லாமே ராஜதந்திரம் என்ற சொல்லாடலுக்குள் அடக்கப்படுகின்றதே. ராஜபக்சவுடன் இரவு விருந்தில் எலும்பு கடித்து சுவைப்பதும் ராஜதந்திரம்தான்.

ஜெனீவாவுக்கு வராமல் இருந்ததும் ராஜதந்திரம்தான்.

கிழக்கில் சிங்களகுடியேற்றங்களை கண்டும் காணாமல் இருப்பதும் ராஜதந்திரம்தான்.

வடக்கு கிழக்கு தமிழர்களின் பாரம்பரிய நிலம் என்று சொல்லமாட்டேன் என்று சொல்லுவதும் ராஜதந்திரம்தான்.

இப்போது சிங்களகொடியை ஏந்திப்பிடிப்பதும் ஒருவகை ராஜதந்திரம்தான்…

இந்த ராஜதந்திரம் எதுவும் புரியாமல் தமது இளமையை துறந்து தமது உறவுகளை பிரிந்து காடுகளிலும் மேடுகளிலும் கடும் துயரிலும் இறுதிவரை தமது மக்களின் உரிமைகளுக்காக போராடி மரணித்த அனைவரும் மன்னித்துகொள்ளுங்கள்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *