சிதம்பராவின் இன்றைய நிலையை பாருங்கள்.
————————————————————-
சிதம்பராக்கல்லூரி- சொல்லும்போதே இனிக்கின்றது இல்லையா.இதனுடான உங்களின் நினைவுகள் மலர்கின்றன இல்லையா.இந்த கல்வி ஆலயம் எமக்கு கற்றுத்தந்தவை எத்தனை எத்தனை.வல்வெட்டித்துறை என்றால் சிதம்பராக்கல்லூரி என்பதே உடனுக்கு நினைவில் வரும்.
இந்த நூறுஆண்டுகள் கடந்த இந்த கல்லூரியின் பெருநிழலில் தங்கி கல்வி பயின்று இலங்கையின் மிக உச்சமான பொறுப்புகளில் இருந்தவர்கள் எத்தனை எத்தனை.இலங்கையின் பிரதமநீதியரசரில் இருந்து பொறியிலாளர்கள்,மருத்துவர்கள்,பொருளியல் நிபுணர்கள் என்று
ஆயிரமாயிரமாய் இங்கிருந்தே புறப்பட்டவர்கள் எத்தனை எத்தனை.இன்றும் உலகம் முழுதும்
விஞ்ஞானபட்டதாரிகளாய்,பொறியிலாளர்களாக,மருத்துவர்களாக,கணக்காளர்களாக எவ்வளவோ
மனிதர்களை உருவாக்கி அனுப்பியது இந்த சிதம்பராகல்லூரிதான்.
அதுமட்டுமா சமூகத்தின் அரசியல்,விடுதலை,கலை என்ற அனைத்து உச்சங்களையும் தொட்ட
மாமனிதர்களும் இங்கிருந்தே பயின்று புறப்பட்டார்கள்.
எங்கிருந்தோ எல்லாம் வந்துவந்து இந்த கல்லூரியில் படித்த காலம் ஒன்று இருந்தது.அந்தளவுக்கு இதில் அப்போது அனைத்து வசதிகளும் இருந்தது.அனைத்து மாணவர்களுக்கும் ஆசனங்கள்.வசதியான சுத்தமான வகுப்பறைகள்.கொழும்பில் இருக்கும் ஒரு
கல்லூரியில் என்னென்ன விஞ்ஞானகூடவசதிகள் இருந்தனவோ அத்தனையும் உள்ளடங்கிய
விஞ்ஞானகூடங்கள்.தொழிற்கல்விக்கேற்ற பல்தொழில் பயிற்றுவிக்ககூடிய சாதனங்கள் என்று.
ஆனால் இன்று இந்த சிதம்பராகல்லூரி என்ன நிலையில் இருக்கின்றது….?எந்த நேரமும் யார் தலையிலும் விழக்கூடும் என்று இருக்கும் உடைந்த ஜன்னல்கள்.காகங்களினதும் பறவைகளினதும் எச்சங்களால் நிரம்பி இருக்கும் வகுப்பறைகள்.எந்த ஒரு வசதிகளும் அற்றதாகவும் வெறுமனே பழைய பொருட்களை போட்டுவைக்கும் இடமாகவும் இருக்கும் விஞ்ஞானஆய்வறைகள்.மழை பெய்தால் ஒழுகி வகுப்பறை எங்கும் தண்ணீராகும் நிலை.
மாணவர்கள் இருந்து படிப்பதற்கு உகந்த மேசைகளோ கதிரைகளோ இல்லாத நிலைமை.
எங்களுக்கு அறிவுபுகட்டிய அந்த அன்னை இப்போது சிதிலமாகி பாழடைந்த ஒரு மண்டபம்போல ஆகிவிட்டாள்.
என்ன செய்ய போகின்றோம் நாம்.?
ஒரு ஊரினதோ சமூகத்தினதோ தரம் அல்லது முன்னேற்றம் என்பது அந்த ஊர் அல்லது சமூகம் எத்தனை ஆழமான பரந்த அறிவை பெற்றிருக்கிறது என்பதை வைத்தே மற்றவர்களும்
உலகமும் கணிக்கும்.அறிவை புகட்டுவதற்கேற்றதாக நூற்றூண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம்
மிக்க ஒரு கருவூலம் எம்மிடம் இருக்கின்றது.சிதம்பராகல்லூரி என்ற அந்த அற்புதமான கருவூலத்தை இப்படியே சிதைந்து சின்னாபின்னமாகி அழிய விடப்போகின்றோமா?
ஒரு கணம் சிந்தியுங்கள்.எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் என்பதற்கிணங்க எமக்கும் எமக்கு முந்தைய பலபல எமது சந்ததியினருக்கும் வாழவழி செய்து அறிவு தந்த இந்த கல்லூரியை சீர்தூக்க நீங்கள் நினைத்தால் முடியும்.ஊர் சங்கங்கள்,கழகங்கள்,பெரியோர்.வியா
பாரத்தில் முத்திரை பதித்தோர்,அறிஞர்கள் என அனைவரும் இணைந்து ஒரு வேலைத்திட்டம் ஒன்றை உடனடியாக வகுத்தே ஆகவேண்டிய அவசரத்தேவை இப்போது ஏற்பட்டிருக்கிறது.
இதனை பற்றிய அனைவரது கருத்துகளும் உள்வாங்கப்பட்டு உடனடியான செயற்திட்;டம் மிகமிக அவசரமாக செய்யப்படவேண்டும்.
சிதம்பராவின் மாணவன் ஒருவன்.