ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சமூகத்துக்கும் பாரம்பரியம் மிக்க வரலாற்று செய்திகளும் அதன் ஊடான வீரவழிபாடுகளும் சாகசங்களும் நிறைந்த சான்றுகளும் இருக்கின்றன.இவை அனைத்தும் இணைந்தே ஒரு இனத்தின் வரலாறாக விரிகிறது.
அந்த வகையில் வல்வெட்டித்துறையின் வரலாற்று ஆவணங்களையும் வரலாற்றின் பக்கங்களில்வல்வெட்டித்துறை பதிந்து சென்ற அழிக்கமுடியாத தடங்களையும் வல்வெட்டித்துறையின் மூத்த புலமை மிக்க தலைமுறை நூறுஆண்டுகளுக்கும் முன்னர் ஆக்கிய ஆக்கங்களையும் சேகரித்து அவற்றை வல்வைஆவணக்காப்பகம் என்ற பெயரில் காத்து வருகின்றார்கள் திரு.திருமதி நகுலசிகாமணி தம்பதியர்.
பல பத்துவருடங்களாக தொடரும் நகுலசிகாமணி அவர்களின் தேடலும் ஆர்வமும் இந்த ஆவணக்காப்பகத்தின் சேகரிப்புகளில் தெரிகிறது.
தாங்கள் சேகரித்த ஆவணங்களையும் நூல்களையும் மீள்பதிப்பு செய்த புத்தகங்களையும்
கப்பல்துறை சம்பந்தமான பொருட்களையும் அண்மையில் வல்வையில் வைத்து வைபவ ரீதியாக வல்வெட்டித்துறையில் நிரந்தர காட்சியகம் ஒன்றில் ஒப்படைத்து அதனை அனைவரும் காண ஏற்பாடு செய்துள்ளார்கள்.
07.05.2012(திங்கள்) அன்று வல்வெட்டித்துறை அ.மி.த.க பாடசாலை மண்டபத்தில் சம்பிரதாய பூர்வமாக நிகழ்ந்த வல்வெட்டித்துறை ஆவணங்களை கையளிக்கும் நிகழ்வை யாழ் பல்கலை கழக வரலாற்றுத்துறை தலைவர் திரு.பரமு.புஸ்பரட்ணம் அவர்கள் திறந்து ஆரம்பித்து வைத்தார்.(அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை உங்களுக்கு வழங்குவதில் இணையம் பெருமை கொள்கிறது)
மேலும் இந்த வல்வை ஆவணங்கள் அனைத்தும் வல்வெட்டித்துறை ஊரிக்காட்டில் இருக்கும் கீதாஞ்சலி எனும் இல்லத்தில் நிரந்தரமாக காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.