சர்வதேசத்தினை ஒன்றிணைத்து, பயங்கரவாதம் என்ற போர்வையில் விடுதலைப் புலிகளை அழித்ததன் ஊடாக, தமிழினத்தையும் அவர்களிடம் இருந்த ஒரே பலத்தையும் அழித்துவிட்ட சிங்கள தேசம், இப்போது புதிய வடிவில் தமிழர்கள் மீதான தனது இன ஒடுக்குமுறையைத் தொடர்ந்து வருகின்றது. ஒரு இனத்தை அழிப்பதாயின் அந்த இனத்தின் மொழியையும், கலாச்சாரத்தையும் அழித்தாலே போதும்.
நாளடைவில் அந்த இனம் தானாகவே அழிந்துபோய்விடும் என்பது இனங்களுக்கான பொதுவிதி. அதேபோன்றுதான் ‘நிலத்தை இழந்தான் தன் இனத்தை இழந்தான்’ என்பதும். தமிழர்களின் மொழியையும், கலாச்சாரத்தையும் சீரழித்துவரும் சிங்கள தேசம், இன்னொருபுறம் நில அபகரிப்பிலும் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளது.
பலஸ்தீனர்களின் நிலத்தை ஆக்கிரமிப்பதற்கும் அதனை நிரந்தர இஸ்ரேல் தேசம் ஆக்குவதற்கும் அந்த மக்களின் நிலங்களை விலைகொடுத்தும், வலுக்கட்டாயமாகவும் வாங்கியது இஸ்ரேல். இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொடங்கிய இஸ்ரேலின் இந்த நிலக் கொள்முதல் நடவடிக்கை, 20 வருடங்களுக்குள் பலஸ்தீனத்தின் 50 வீததத்திற்கும் அதிகமான நிலத்தைத் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்ள முடிந்தது.
அதன் பின்னரான இஸ்ரேலின் தொடர்ச்சியான நிலஆக்கிரமிப்புக்கள் மூலம் கடந்த 60 வருடங்களுக்குள் 80 வீதத்திற்கும் அதிகமான நிலத்தை பலஸ்தீனத்திடம் இருந்து பறித்து இஸ்ரேல் தனக்குச் சொந்தமாக்கிவிட்டது. என்றுமே இணையமுடியாத நிலத்தொடர்பற்ற இரு துருவங்களாக, மேற்குக்கரை என்றும் காசா என்றும் எங்கெங்கோ இரு துண்டங்களாக, தொடரும் நிலப்பறிப்புக்கும் மத்தியில் இன்னமும் இறுதி மூச்சை இழுத்துப்பிடித்தபடி பலஸ்தீனம் உயிர் வாழ்ந்துகொண்டிருக்கின்றது.
இப்படியொரு நிலையையே தமிழர் தாயகத்திலும் ஏற்படுத்த சிங்கள தேசம் மிகத்தீவிரமாக இறங்கியுள்ளதைக் காணமுடிகின்றது. வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தைத் துண்டாட ஏற்கனவே மணலாற்றை ஆக்கிரமித்து சிங்களக் குடியேற்றத்தை ஏற்படுத்தி வடக்கு, கிழக்கை இரு துண்டங்களாக்கியதுமட்டுமல்ல, நீதிமன்றம் ஊடாகவும் வடக்கு, கிழக்கு என்றுமே இணைய முடியாத பிரதேசங்களாக சிங்கள ஆட்சியாளர்கள் மாற்றிவிட்டனர். இப்போது வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ள நிலங்களையும் அரசுடமை ஆக்குவதிலும், பௌத்த புனித பிரதேசங்களாக்குவதிலும் மிகத் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
தமிழர் தாயகம் எங்கும் இந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்பது மிகவும் வெளிப்படையாகவும் தீவிரமாகவும் நடைபெறத் தொடங்கிவிட்டது. இராணுவ வலயம் என்ற பெயரில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை விழுங்குவதற்கு திட்டமிட்டுள்ள சிங்கள தேசம், பிரதேச சபைகள், மற்றும் திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகளை அரச காணிகள் என்ற போர்வையில் கையகப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையை தீவிரமாக்கியுள்ளது.
ஏற்கனவே, தமிழ் மக்களின் காணிகள் பலவற்றில் மிக நிண்டகாலமாக நிலைகொண்டுள்ள சிங்கள இராணுவம் தற்போது அதனை அண்டிய பகுதிகளையும் தமது பிரதேசமாக்கி, நிலைகொண்டுள்ள இராணுவத்தின் குடும்பங்களும் உறவினர்களையும் கொண்டுவந்து குடியேற்றி உள்ளது. இன்னொரு புறம் விகாரைகளை அமைத்து பௌத்த புனித பிரதேசம் என்ற பெயரில் ஏராளமான நிலங்கள் சிங்கள மயமாக்கப்பட்டுள்ளதுடன், தமிழர்கள் அங்கு நடமாடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்தில் தீவிர நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையில் முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத் தளபதியும், வடமாகாண ஆளுநருமான ஜி.ஏ.சந்திரசிறி தலைமை தாங்கியுள்ளதாகவும், தமிழர்களின் நிலங்களை ஆக்கிரமிக்கும் பொறுப்பை அவரே ஏற்றுள்ளதாகவும் தெரியவருகின்றது. இதன் முதற்கட்டமாக யாழ். மாவட்டத்தில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டு நிலங்களை சுவீகரிக்கும் முயற்சியில் இவர் தீவிரமாகியுள்ளார். இதற்கான வேலைகள் முழுமூச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினர் தற்போது நிலைகொண்டுள்ள மினிமுகாம்கள் மற்றும் பெரிய முகாம்கள் ஆகியவை அமைந்துள்ள காணிகளின் உரிமை தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பிரதேச செயலாளர்களைப் பணித்துள்ளார்.
இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள இடங்களின் காணிகளை அளவீடு செய்வது முதல், அந்தக் காணிகளின் உறுதிகள் மற்றும் அவை அரச காணியா, தனியார் காணியா என்ற விவரங்களையும் பிரதேச செயலாளர்களைத் திரட்டுமாறும் அவர் பணித்துள்ளார். அந்த வேலைகளை உடனடியாக மேற்கொண்டு அதன் விவரங்களைச் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார். அந்த நிலங்களை நிரந்தரமாக இராணுவ உடமையாக்கி சிங்கள தேசத்தின் உரிமையாக்குவதே இதன் நோக்கம் என மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர்.
இவர்களின் அச்சத்தை உறுதிப்படுத்துவதுபோல், யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க படை முகாம்களை அமைப்பதற்கென அரச காணிகளை இராணுவம் கையகப்படுத்தவுள்ளமையை ஒத்துக்கொண்டுள்ளார். வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் 20 ஆயிரம் ஏக்கருக்கு மேலான நிலங்கள் படைக்குடியிருப்பு மற்றும் படைகளின் தேவைகளுக்கு கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.
போருக்கு பிற்பாடு, கடந்த மூன்று ஆண்டுகளாக படைமயமாக்கலை முதற்கட்டமாக மேற்கொண்டு வந்த சிறீலங்கா அரசாங்கம், அதனைத் தொடர்ந்து சிங்கள மயமாக்கலை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய நிலங்கள் இராணுவ மயமாக்கப்படுவது நிறுத்தப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் அதனையும் மீறி, மிக நீண்டகாலத் திட்டத்துடன் தமிழர்களின் நிலங்களை நிரந்தரமாக சிங்களமயமாக்கும் கைங்கரியத்தை சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்கள்.
இந்த நில ஆக்கிரமிப்புக்கு எதிராக எந்தவொரு சிறு போராட்டத்தைக்கூட முன்னெடுக்க முடியாத நிலையிலேயே தமிழர் தாயகத்தில் மக்கள் இன்று இருக்கின்றார்கள். இந்நிலையில், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்படுவதையும், பௌத்த விகாரைகள் திட்டமிட்டு அமைக்கப்படுவதையும் கண்டித்தும், சிறைச்சாலைகளில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரியும் இம்மாத இறுதியில் முறிகண்டிப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளது.
இப்போராட்டம் நடப்பதையே விருப்பாத சிங்கள தேசம் இது அடுத்த கட்டங்களுக்கு நகர்வதை அனுமதிக்கப்போவதில்லை. எனவே, இந்தப் போராட்டத்தை ஆரம்பமாகக்கொண்டு, நில ஆக்கிரமிப்புக்கு எதிராக உலகெங்கும் வாழும் புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் போராட முனையவேண்டும். சிங்கள இனப்படுகொலையாளிகளை விரட்டும் போர்க் குணம் கொண்ட புலம்பெயர்ந்த தமிழ் மக்களால் மட்டுமே சிங்களத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக சர்வதேசத்தின் கவனத்தைத் திருப்பி, அதனைத் தடுத்துநிறுத்த முடியும்.
நன்றி : ஈழமுரசு