வீவா உலகக்கோப்பை (Viva World Cup) என்பது இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடாத்த திட்டமிடப்பட்டு நடாத்தப்படும், பன்னாட்டுக் காற்பந்தாட்டக் கழகங்களின் கூட்டமைப்பின் (ஃபீஃபா) அங்கீகாரம் பெறாத நாடுகளுக்கான, புதிய கூட்டமைப்பு வாரியத்தினால் (Nouvelle Fédération-Board – NFB) ஒழுங்கு
படுத்தப்பட்ட பன்னாட்டு காற்பந்தாட்டப் போட்டியாகும்.
2005ம் ஆண்டு ஏப்ரல் மாதம் புதிய கூட்டமைப்பு வாரியம் தனது முதலாவது வீவா உலகக்கோப்பை போட்டித்
தொடரை வடக்கு சைப்பிரசில் நடத்துவதாக அறிவித்தது. சைப்பிரஸ் – துருக்கிய காற்பந்தாட்டக் கூட்டமைப்பின் (KTFF) 50 ஆண்டுகள் நிறைவையட்டி வடக்கு சைப்பிரஸ் தேர்ந்தெடுக்கப்பட்டது.
உலகம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் போட்டியிடும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 2005 இல் வடக்கு சைப்பிரசில் ஆட்சியேறிய புதிய அரசு, மற்ற நாடுகளுடன் சுமூகமான உறவைப் பேண முடிவெடுத்தது. வீவா போட்டித் தொடரில் எந்த நாடுகள் பங்குபற்றலாம், எவை பங்குபற்ற முடியாதென அது நிபந்தனைகளை விதித்ததாக புதிய கூட்டமைப்பு வாரியம் குற்றஞ் சாட்டியது.
பதிலாக, நிதிக் கோரிக்கையில் வாரியம் நியாயமற்ற நிபந்தனைகளை விதித்ததாக வடக்கு சைப்பிரஸ் கூட்டமைப்பு குற்றம் சாட்டியது. இதனையடுத்து முதலாவது வீவா உலகக்கோப்பைத் தொடரை ஒக்சித்தானியாவில் நடத்துவதற்கு வாரியம் தீர்மானித்தது.
பதிலாக, சைப்பிரஸ் – துருக்கிய காற்பந்தாட்டக் கூட்டமைப்பு தனியாக வீவா உலகக்கோப்பைத் தொடர் நடைபெறவிருக்கும் அதே நாட்களில் ‘எல்ஃப் கோப்பை’ என்ற போட்டியை நடத்தவிருப்பதாக அறிவித்தது.
இத்தொடரில் வாரியத்தின் சில உறுப்பு நாடுகளும் பங்குபற்றுவதாக அறிவித்தன. இதனால், முதலாவது உலக்கோப்பை ஒக்சித்தானியாவில் 2006 நவம்பர் 19 முதல் 25 வரை நடைபெற்றது.
நான்கு அணிகளே இத்தொடரில் போட்டியிட்டன. சாப்மி அணி இறுதிப் போட்டியில் மொனாக்கோ அணியை 21-1 என்ற கணக்கில் வென்று வீவா உலககோப்பையைக் கைப்பற்றியது.
வீவா உலகக்கோப்பை வெற்றிக் கிண்ணம் பிரான்சிய சிற்பியான ஜெரால்ட் பிகால்ட் என்பவரால் வடிவ
மைக்கப்பட்டது. முன்னாள் தென்னாபிரிக்க அரசுத் தலைவர் நெல்சன் மண்டேலாவை கௌரவப்படுத்தும் முகவாக நெல்சன் மண்டேலா வெற்றிக் கிண்ணம் பெயர் மாற்றப்படவுள்ளது.