Search

ஈழத் தமிழர் படுகொலை பற்றி கோர்டன் வைஸ் – இளந்தி

இலங்கையில் செயற்பட்ட ஜநா அதிகாரிகள் குழுமத்தின் பேச்சாளர் கோர்டன் வைஸ் (UN country team spokesperson Gordon Weiss) எழுதிய கேஜ் என்ற போர்க்கால ஆய்வு நூல் ஈழப் போர் பற்றிய பல உண்மைகளை வெளிப்படுத்துகிறது.

இந்த ஆங்கில நூலைத் தமிழகத்தின் காலச்சுவடு பதிப்பகம் கூண்டு என்ற தலைப்பிட்டுத் தமிழில் வெளியிட்டுள்ளது. போர் ஆரம்பமான நாள் தொட்டு அது முடியும் வரை இந்திய அரசின் நேரடியான மற்றும் மறைமுகமான உதவி இலங்கை அரசிற்குக் கிடைத்தது. இந்திய உதவி இல்லாமல் அரச படைகள் வெற்றி அடையச் சாத்தியமில்லை.

அதிபர் மகிந்த ராஜபக்ச பாதுகாப்புச் செயலர் கொத்தபாய ராஜபக்ச ஆகியோர் இதை உறுதி செய்துள்ளனர். ஜநா போர்க் குற்ற அறிக்கையும் இதைத் தெளிவு படுத்துகிறது. கோர்டன் வைஸ் தனது நூலில் இவற்றைப் பதிவு செய்துள்ளார். ஈரான், பர்மா, லிபியா, சீனா ஆகிய நாடுகள் இலங்கை அரசிற்குப் பக்கபலமாக நின்றன.

அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல நாடுகள் புலிகளைத் தோற்கடிப்பதில் முனைப்பாகச் செயற்பட்டன. எத்தனை அப்பாவித் தமிழர்களை அழித்தேனும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற அவர்கள் எண்ணம் நிறைவேறிவிட்டது. இதன் காரணமாக வன்னியில் ஒரு இனப்படுகொலை நடந்தபோது உலக நாடுகளும் ஜநாவும் கண்டு கொள்ளாமல் இருந்தன.

 இலங்கையின் இறுதிக் கட்டப் போர் வெற்றியை இலங்கை ஈட்டுவதற்கு இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் காத்திரமான அனுசரணை வழங்கின.

கூண்டு வெளிவந்த பிறகு கோர்டன் வைஸ் பற்றி அறியும் ஆவல் எழுந்துள்ளது. கேஜ் (Cage) அவருடைய முதலாவது புத்தகம் எனினும் அவர் நன்கு அறியப்பட்ட எழுத்தாளர், ஆவணப்படத் தாயாரிப்பாளர் மற்றும் பேச்சாளராவார் அவருடைய அனைத்துலக அறிவும் ஆய்வும் இரு தசாப்தங்களுக்கு மேலாகப் பொது வாழ்வில் ஈடுபட்டதன் மூலம் பெறப்பட்டது.

அவர் பன்னிரண்டு வருட காலம் ஜநாவில் பணியாற்றினார். அவர் ஊடகத்துறையிலும் மனிதநேயப் பணி ஆற்றுகையிலும் அனுபவம் உள்ளவர். ஜநாப் பணியின் போது ஆப்கானிஸ்தான், அங்கோலா, பொஸ்னியா, குவத்தமாலா, ஹெயிற்றி, இந்தோனேசியா, இஸ்றேயில், கொசோவோ, நேபாளம், பாக்கிஸ்தான், தஜிக்கிஸ்தான், சூடான், இலங்கை போன்ற நாடுகளில் பணியாற்றினார்.

கோர்டன் வைஸ் அவுஸ்திரேலிய நாட்டவர் அவருடைய தந்தை செக் நாட்டையும் (Czech) தாய் நியூ சீலாந்தையும் சேர்ந்தவர்கள். கோர்டன் வைஸ் சிட்னி நகரில் பிறந்தவர். பார்சிலோனா, நியூயோர்க், பிறாக், சாராயேவோ, தொக்கியோ போன்ற பெரு நகரங்கில் வாழ்ந்த அனுபவம் அவருக்கு உண்டு.

அவருடைய உயர் கல்வி சட்டம், வரலாறு, அரசியல், இராணுவ மூலோபாயம், மனித வரலாற்றியல், தத்துவம், இலக்கியம் ஆகியவற்றை உள்ளடக்கியது. பாதுகாப்பை (Security) மையப்படுத்திய அனைத்துலக உறவுக் கல்வியில் அவர் முதுமானிப் பட்டம் பெற்றுள்ளார்.

கோர்டன் வைஸ் எழுதிய நூலின் முழுத் தலைப்பு பின்வருமாறு கூண்டு சிறிலங்காவுக்கான சண்டையும் தமிழ்ப் புலிகளின் இறுதி நாட்களும் (Cage the fight for Sri Lanka and the last days of the Tamil Tigers). இந்த நூல் பற்றி இலன்டன் எக்கனோமிஸ்ற் சஞ்சிகை பின்வரும் மதிப்புரை வழங்கியுள்ளது.

“வெற்றி எப்படிப் பெறப்பட்டது பற்றிச் சிறந்த விவரணம். இலங்கை மக்கள் இப்போதைய அமைதிக்காகக் கொடுத்த விலை பற்றியும் கூறுகிறது” புத்தகம் பற்றி பிறிதோர் விமர்சனம் “ஆசியாவின் மிகப் பழமைவாய்ந்த சன நாயகங்களில் ஒன்று எப்படி அழிக்கப்பட்டது என்பதைக் கட்டம் கட்டமாகக் கூறும் நூல்” என்கிறது.

இலங்கை சனநாயகம் என்பது நான்கு சகோதரர்கள் அடங்கிய ராஜபக்ச குடும்ப ஆட்சியாகத் தாழ்ந்து விட்டது. நாட்டின் பொருளாதாரம், நீதித்துறை, மீடியா ஆகிய மூன்றும் இந்த நால்வரின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. தீவிரவாதப் பிரச்சனைகள் உள்ள நாடுகளுக்கு தங்களுடைய இரத்தம் தோய்ந்த தீர்வை அவர்கள் பரிந்துரை செய்கிறார்கள்.

கோர்டன் வைஸ் நூலில் மேற்கூறிய செய்திகள் மிகவும் ஆணித்தரமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைத் தலைப்புச் செய்திகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள் விளக்கப்பட்டுள்ளன. இலங்கை ஊடகங்கள் அரசின் உத்தரவுக்கு அமைவாக நடத்தும் செய்தித் திரிபுகள் புனைவுகள் பற்றியும் கேஜ் நூலில் சொல்லப்படுகிறது.

போர் காலத்திலும் அதற்குப் பிறகும் காணாமற் போவோர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் அடித்து மிரட்டப்பட்டும் தாமாகவே நாட்டை விட்டு ஓட நிர்ப்பந்திக்கப்பட்டும் உள்ளனர். ஊடக சுதந்திரம் என்பது காணாமற் போய்விட்டது.

செப்டம்பர் 2008 முதல் வாரத்தில் ஜநா பணியாளர்கள் உட்பட அனைத்து மனிதநேய அமைப்புகளும் அரசின் மிரட்டலுக்குப் பணிந்து வன்னியை விட்டு வெளியேறிவிட்டன. ஜசிஆர்சி மாத்திரம் பெப்ரவரி 2009 வரை எல்ரிரிஈ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தங்கியிருந்தது. பின்பு ஜசிஆர்சி வவுனியாவுக்கு இடம்மாறி விட்டது.

ஜநா சாசனம் உறுதிபடுத்திய உரிமைகளை இலங்கை அரசின் வீசா நடைமுறைகள் அப்பட்டமாக மீறிவிட்டன. அவற்றைப் பாதுகாக்க ஜநா முயற்சி செய்யவில்லை. யூனிசெப் அமைப்பின் பேச்சாளர் ஜேம்ஸ் எல்டர் (James Elder) வெளியேற்றப்பட்டார். அவர் இலங்கை ஊடகங்கள் பற்றிக் கூறிய கண்டனத்திற்காக இந்தக் தண்டனை வழங்கப்பட்டது.

மனிதநேயப் பணியாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு என்று இலங்கை பற்றி ஒச்சா (Ocha) எனப்படும் ஜநா மனிதநேயப் பணிகள் ஒருங்கிணைப்பு அலுவலகத் தலைவர் சேர் ஜோன் ஹோம்ஸ் (Sir John Holmes) கண்டித்தார். இதற்கு அமைச்சர் ஜெயராஜ் பெர்நான்டோ பிள்ளை அவரை ஒரு பயங்கரவாதி என்று திட்டினார்.

ஜநா குழுமப் பேச்சாளர் கோர்டன் வைஸ் தமிழ் பொது மக்கள் உயிரிழப்புக்கள் பற்றித் தகவல் வெளியிட்டபடி இருந்தார். 2009மே 17 இரவு தொடக்கம் 2009 மே 18 அதிகாலை வரையான குறுகிய காலத்தில் 1000 தொடக்கம் 4000 வரையானோர் கொல்லப்பட்டனர் என்று அவர் சொன்னார். அதன் பிறகு இராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டோர் 30,000 தொடக்கம் 40,000 வரையானோர் மே மாத 18ம் திகதி வரையில் என்று அவர் தகவல் வெளியிட்டார்.

மனித உரிமைகள் மற்றும் பேரிடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த சமரசிங்கவும், வெளிவிவகார அமைச்சர் றோகித போகல்லகமவும் கோர்டன் வைஸ் ஒரு பொய்யன் என்று கண்டித்தனர். அவருடைய வீசாவை ரத்து செய்து நாடு கடத்திய அரசு வைசின் இலங்கைப் பணியை முடிவுக்குக் கொண்டு வந்தது.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *