கடந்த 60 வருடங்களுக்கு மேலாக வல்வெட்டித்துறையில் உள்ள தெணியம்பைத் தெருவில் இயங்கி வந்த மொத்தமாகவும்,சில்லறையாகவும் சாராய விற்பனை செய்து வந்த மதுபான சாலை,யாழ்ப்பாணம் மேல் நீதி மன்றத் தீர்ப்புக்கு அமைவாக நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.பல வருடங்களாக பொது மக்களினதும் மாணவர்களினதும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் குடி மனைகள், பாடசாலை, தனியார் கல்வி நிலையம்,பால்சாலை,வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுப் போக்குவரத்து ஆகியவற்றிற்கு இடையுறுகளையும் சமூகச் சீர்கேடுகளையும் ஏற்படுத்தி வந்த மேற்படி மதுபான சாலை,கடந்த ஜுலை முதலாம் திகதியுடன் மூடப்பட்டு விட்டதால் சாதாரண பொது மக்களும் மாணவர்களும் மகிழ்ச்சி தெரிவித்து வல்வெட்டித்துறை நகராட்சி மன்ற நிர்வாகத்தினருக்கு நன்றியைத் தெரிவித்தள்ளனர்.
இதே போன்று வீடுகளிலும் பொது இடங்களிலும் சட்டவிரோதமாக மது மற்றும் கசிப்பு போன்ற தீங்கு விளைவிக்கும் குடிவகைகளையும்,பொது மக்களின் சுகாதாரத்திற்குக் கேடு விளைவிக்கும் வகையில் சட்ட விரோதமாக வீடுகளில் இறைச்சி வகைகளை விற்று வருபவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் காவல் துறையினரிடமும்,நகர சபை நிர்வாகத்தினரிடமும், சுகாதாரப் பகுதியினரிடமும் மக்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.