புதைந்த மனிதர்களும் மௌனமாக இருக்கும் நாமும்.!

புதைந்த மனிதர்களும் மௌனமாக இருக்கும் நாமும்.!

புதைந்த மனிதர்களும் மௌனமாக இருக்கும் நாமும்.!

எங்கள் உறவுகள் மண்ணுக்குள் புதைந்த பொழுதில்தான் பலருக்கு தெரிகிறது இன்னமும் அவர்கள் அந்த லயன் என்ற கூண்டுகளுக்குள் வாழ்ந்திருக்கிறார்கள் என்று.
அந்த கூண்டுகளே அவர்களின் கல்லறைகளாகவும் ஆகிவிட்ட பெருங்கொடுமை இப்போது.
பெருமழையும் அதனை தொடர்ந்து மண்சரிவும் வெறுமனே இயற்கை அனர்த்தம் என்ற சொற்பதத்துடன் முடித்துவிட கூடியது அல்லவே. எந்த நேரத்திலும் மண்மூடிவிடும் என்ற அச்சத்துடனேயே வாழ்வதுபோன்ற ஒரு வாழ்வு அவர்களது.
இப்போது மண்மூடியே விட்டது. அரசாங்கம் எப்போதும்போலவே அதே சிங்கள பேரினவாத மனப்பான்மையுடனேயே அசமந்தமாக தனது நிவாரணத்தை தொடங்கியுள்ளது.
எஞ்சியுள்ளவர்களின் கட்டை பெருவிரல்களை வெட்டி எடுத்தேனும் வாக்குகளாக மாற்றும் அவசரத்தில் மந்திரிகள் மண்சரிவை பார்க்க படையெடுக்கிறார்கள்.
மண் மூடியவர்களின் எண்ணிக்கையில்கூட அரசியலை புகுத்தி அசிங்க அரசியல் நடாத்துகிறது அரசியல். அதற்கு உடந்தையாக மலையக அரசியல்வாதிகளில் ஒருசிலரும்..
மகிந்த அரசாங்கம் எல்லாம் வடிவாக செய்துள்ளது என்று இங்கிருந்து விடுமுறைக்காக சென்று திரும்பும்போது சான்றிதழ் கொடுத்தவர்களுக்கு தெரிந்திருந்ததா மலையகத்தில் மனிதர்கள் இன்னமும் அதே லயன்களுக்குள்ளேயே வாழ்ந்து மடிகிறார்கள் என்று..
இப்போது இவற்றை எல்லாம் ஆராய்ந்து கொண்டிருக்க நேரமில்லை.
உதவிக்கரம் நீட்ட வேண்டிய அவசரநிலை இப்போது.அங்கே மண்ணுக்குள் புதையுண்டு போனவர்களும் அவர்களை இழந்து நிர்க்கதியாக நிற்பவர்களும் வேறு யாருமல்லர்.
எமது உறவுகள்.எமது சொந்தங்கள்.
எமது இனத்தின் மனிதர்கள்.. இது நடந்து இன்றுடன் மூன்று நாட்கள் முழுதாக முடிந்த பின்பும் இன்னும் நாம் இதனை முதன்மை செய்தியாக எமது மக்களுக்குள் சென்றடைய வைத்து அதற்கு ஊடாக உதவி செய்ய வேண்டும் என்ற உணர்வை தூண்டவில்லை- அல்லது தூண்டியது போதவில்லை என்றே தெரிகிறது..
இங்கிருக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அங்கு உடனடியாக சென்று உதவ வேண்டும் என்ற அவசர கோரிக்கைகள் இங்கிருக்கும் நம் எல்லோராலும் விடப்பட வேண்டும்.
தமிழ் அமைப்புகள் தமது நிகழ்ச்சி நிரல்களுக்கிடையில் இந்த மக்களுக்கான உதவி வழங்கலையும் இப்போதே சேர்த்து செயற்பட வேண்டும்.
நாம் அவர்களுடன் நிற்கின்றோம் என்ற சேதிகூட அவர்களுக்கு பெரும்பலமாகவும் நம்பிக்கையாகவும் அமையும். பேரனர்த்தம் ஒன்றினுள் அமிழ்ந்து அல்லலுறும் எமது சகோதரர்களுடன் நாம் தோளோடு தோள் நின்று அணைக்க வேண்டிய பெரும் நேரம் இது. முக்கியமான பொழுது.
தாயகத்தில் பல்கலைகழக மாணவர்களில் இருந்து ஆரம்பித்து இப்போது தமிழ் கட்சிகளும் இதில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளது நல்ல ஒரு குறியீடுதான்.
நாமும் புலம்பெயர் தேசங்களில் இருந்து எமது கரத்தை நீட்டியே ஆகவேண்டும். இங்கிருக்கும் கிராமிய- ஊர் அமைப்புகள், பாடசாலை சங்கங்கள், மத நிறுவனங்கள், விடுதலைக்கான அமைப்புகள் அனைத்துமே இதில் தமது கவனத்தை குவிக்க வேண்டிய நேரத்தில் நிற்கின்றோம் நாமனைவரும்.
இந்த மக்களின் விடுதலைக்காகவும் சேர்த்தே நாற்பதினாயிரத்துக்கும் அதிகமான மாவீரர்கள் தம் இன்னுயிர்களை வழங்கினார்கள். இன்று மண்மூடிக்கிடக்கும் இந்த மண்ணில் இருந்து வந்த எத்தனையோ மகத்தான போராளிகள்- தளபதிகள் தமிழீழ விடுதலைக்காக ஆகுதி ஆகி இருக்கிறார்கள்.
இவர்கள் என்பதும் நாம் என்பதும் வேறுவேறு அல்ல. உதிரத்தால்- நெஞ்சிருந்து எழும் உயிர் மொழியால்- உணர்வுகளால் ஒரே இனமாகிய எமது மக்களுக்கு இப்போது உதவாதுவிட்டால் இனி எப்போது.?
நமது மக்கள் எல்லோரும் இணையும் ஒரு உதவும் நிகழ்வு நிரலை நடைமுறைப்படுத்துவது என்பது எல்லா விதமான அரசியல் வேலையையும்விட அதி சிறப்பானது-வீரியமானதும்கூட.
அதனை நாம் இன்றே செய்திட திடசங்கல்பம் கொள்வோம்.
உறைந்து போயிருக்கும் மௌனத்தை விடவும் ஒரு ஆறுதல் வார்த்தை அதிக கனமானது.
அதனைவிட இந்த நேரத்தில் அளிக்கும் உதவி என்பது ஆயிரம் மடங்கு கனமானது- நிறைவானது.
ச.ச.முத்து

Leave a Reply

Your email address will not be published.