லண்டன் கோபுர பாலத்தில் தேம்ஸ் நதிக்கு மேலாக 140 அடி உயரத்தில் கண்ணாடியாலான நடைபாதையொன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மேற்படி நடைபாதையில் நடப்பவர் வானில் அந்தரத்தில் நடப்பது போன்ற திகில் அனுபவத்தை பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகவும் பிரபலமான பாலங்களில் ஒன்றாக விளங்கும் இந்த பாலத்தில் கண்ணாடி நடை பாதையில் நடக்கும் அனுபவத்தை பெறுவதற்கு ஒருவர் 9 ஸ்ரேலிங் பவுண் கட்டணத்தைச் செலுத்தினால் போதுமாகும்.
ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடி நடை பாதையானது 1982ம் ஆண்டு லண்டன் கோபுர பால கண்காட்சி நிலையம் திறந்து வைக்கப்பட்ட பின்னரான மிக முக்கிய மாற்றமொன்றாக கருதப்படுகிறது.
இந்த கண்ணாடி பாலத்தின் மேற்கு நடைபாதை திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ள அதே சமயம் அதன் கிழக்கு நடைபாதை எதிர்வரும் டிசம்பர் முதலாம் தேதி திறந்து வைக்கப்படவுள்ளது.