நியூயார்க்கில் நிலவும் கடும் பனிப்பொழிவையடுத்து பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நியூயார்க்கின் மேற்கு பகுதியில் உள்ள BUFFALO நகரில் நேற்று ஏற்பட்ட கடும் பனிப் பொழிவு காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் சுமார் 5 அடி உயரத்திற்குப் பனி படர்ந்தது. கடும் பனிப் பொழிவு காரணமாக கார்களில் சென்ற பொதுமக்கள் தங்கள் கார்களை அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்குச் சென்று விட்டனர். இதனால் கார்களும் பனியால் மூடப்பட்டன. இதையடுத்து பொது மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ க்வாமா, பொதுமக்களிடம் இருந்து ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்றும் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என்றும் அறிவித்துள்ளார்.
மேலும், கடும் பனிப்பொழிவையடுத்து நியூயார்க்கின் பல பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. BUFFALO நகரின் தெற்கு பகுதிகளில் வாகனம் ஓட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பனியில் சிக்கிக் கொண்டவர்களைக் காப்பாற்றுதல் மற்றும் மருத்துவ உதவிக்காக பனியில் ஓடக்கூடிய 18 வாகனங்கள் மட்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
இந்த பனிப்புயல் தாக்கத்தினால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். பனிப்பொழிவு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுவதால் பொது மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.