Search

நாளை தலைமுறை ஒளியினில் வாழ..இன்று இருளுக்குள் அலைபவர்கள்…!-

அண்மையில் ஜவஹர்லால் நேருவின் வரலாற்றை வாசித்துக் கொண்டு இருக்கும் போது ஒரு வசனத்தை கடந்து போக இயலாமலேயே இருந்தது. அந்த இடம் ஒரு உணர்ச்சிகரமான காட்சி.
நேரு நீண்டகால சிறையில் இருந்த காலத்திலேயே அவரது மகளான இந்திரா காந்திக்கு முதல் குழந்தை பிறக்கிறது. முதல் பேரக்குழந்தையை காட்ட முடியவில்லை. ஒருமுறை நேருவை சிறையில் இருந்து நீதிமன்றுக்கு கொண்டு வந்து திரும்ப சிறைச்சாலை வாகனத்தில் கொண்டு செல்லும் போது இருட்டிவிட்டது. அந்த சிறைச்சாலை வாகனம் வீதியால் வரும் போது ஒரு விளக்கு கம்பத்துக்கு கீழே நின்று வெளிச்சத்தில் தனது குழந்தையை உயரே தூக்கி இந்திரா காண்பித்தார்.
அதன் பின்னர் சிறையில் இருந்து நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் பேரனை விளக்கு கம்ப ஒளியில் பார்த்தது பற்றி எழுதும் போது ‘இவர்கள் ஒளியில் வாழவேண்டுமென்பதற்காகவே நாங்கள் இருளில் உழல்கிறோம்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் இதே சொல்லையே எங்கள் தாயகத்துக்கான விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஆகுதி ஆக்கிய செல்வங்கள் அனைவருமே சொல்லியும் செய்தும் காட்டி சென்றிருப்பதுதான் அதிசயத்திலும் அதிசயம்.
80களின் நடுப்பகுதி, இயக்கம் எமது மக்களுக்குள் பெரிதாக அறியப்படாத காலம். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் 30க்கும் குறைவானவர்களே உறுப்பினர்களாக இருந்த பொழுதது.
ஒரு இரவுப்பொழுதில் படுக்க இடம் தேடிய அலைச்சலில் நடுநிசியில் ஊர்கள் கடந்து ஆறு ஏழு போராளிகளாக செல்லும் போது ஊர் முழுதும் ஆழ்ந்த நித்திரைக்குள் இருப்பதை பார்த்து ஒரு போராளி ” நாங்கள் விடுதலைக்காக இரவு பகலாக நித்திரை இன்றி அலைகின்றோம்..ஆனால் எமது மக்கள் நல்லா நித்திரை செய்கிறார்கள்” என்று ஆதங்கத்துடன் சொன்னான்.
உடனே கிட்டு இடைமறித்து ” இவர்கள் நிம்மதியாக எந்தவொரு பயமும் இல்லாமல் சுதந்திரமாக நித்திரை கொள்ள வேணும் என்பதற்காகத்தானே நாங்கள் திரிகின்றோம்.” என்றான்.. இதனை ஒத்த வசனங்களை ஏறத்தாழ எல்லா போராளிகளும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியே இருக்கிறார்கள்.
தமிழீழத்தின் மிக அற்புதமான தளபதி சாள்ஸ் அன்ரனி என்ற சீலனுடன் ஒரு மறைவிடம் ஒன்றில் இருந்த காலத்தில் அந்த வீட்டுக்கு அண்மையில் உள்ள பகுதி சிறுசுகளில் பாடசாலை வசதி இல்லாதவர்களுக்கு சீலன் தனது பணத்தில் புத்தகம், படிப்பு உபகரணங்கள் என்று வாங்கி கொடுப்பான். அவர்கள் மாலையில் விளையாடும் இடத்துக்கு போய் அங்கும் ஏதாவது தின்பண்டங்கள் வாங்கி கொடுப்பான். அவர்களின் அன்புக்குரிய ஒரு மாமா அவன். இத்தனையும் அவன் தனக்கு இயக்கம் தினசரி சாப்பாட்டு செலவுக்காக தரும் 10ரூபாவில் மிச்சம் பிடித்து சிலசமயம் சாப்பாட்டை தவிர்த்தே செய்தான். அதனை பற்றி இன்னொரு போராளி சீலனிடம் கேட்டபோது ” இதுகள் சுதந்திரமாக நிம்மதியாக வெளிச்சத்தில் வாழ வேணும் என்பதற்காகதானே நாங்கள் போராடுகின்றோம்.” என்று மிக இயல்பாக பதிலளித்தான்.
இன்னுமொரு சம்பவம் ஒரு முக்கியமான செயற்பாடு ஒன்று எமது அமைப்பால் நடாத்தப்பட இருந்ததால் தலைவரும் முக்கியமானவர்களும் யாழ்.நகர எல்லைக்கு வெளியே ஒரு ஊரில் சென்று இரண்டு மூன்று நாட்கள் நிற்கவேண்டிய சந்தர்ப்பம் வந்துவிட்டது.
அப்போது அந்த ஊரில் பிள்ளையார் கோவில் ஒன்றில் திருவிழா வெகு விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.அந்த பிள்ளையார் கோவிலுக்கு மிக அண்மித்தான ஒரு வீட்டிலேயே தங்கவும் நேர்ந்தது. சாப்பாட்டுக்கான பணமோ போதாத நிலை அப்போது. எல்லோர் கைகளில் இருந்த காசை சேர்த்தால்கூட ஒரு 70ரூபாவுக்கு மேல் இல்லை.
அந்த வீட்டில் தங்கிநின்ற வேளை ஊர் மக்கள் எல்லாம் திரள்திரளாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார்கள். ஒலிபெருக்கியில் பக்திப்பாடல்கள்,அறிவிப்புகள் என்று களைகட்டி இருந்தது.
அப்போது ஒரு போராளி ” நாங்கள் விடுதலை ,விடுதலை என்று சாப்பாடும் தங்குமிடமும் இல்லாமல் அலைகின்றோம். மக்களோ கோவில் குளம் என்று திரிகிறார்கள் ஒருவித உணர்வும் இல்லாமல் ” என்று சொன்னான்.
கொஞ்சம் தூரத்தில் நின்றிருந்த தலைவரின் காதிலும் இது விழுந்து விடுகிறது. உடனே தலைவர் அவனை அழைத்து ” இந்த மக்கள் எந்தவொரு அன்னியருக்கும் காலடிகளில் வாழாமல் நிம்மதியாக சுதந்திரமாக தமக்கே உரிய மண்ணில் வாழவேணும் என்பதற்காகதானே நாங்கள் போராடுகின்றோம். நீ இன்னும் உறுதியாக இன்னும் ஆழமாக வேகமாக செயற்பட்டால் இந்த மக்கள் எம்முடன் இணைவார்கள்..ஒருபோதும் மக்களை குறை சொல்லாதே” என்று கடிந்து கொண்டார்..
மூதூர் தளபதியாக இருந்த கணேசை சுற்றி எந்தநேரமும் சின்னஞ்சிறுசுகள் கும்மாளமிடும். கண்களில் ஒளி பொங்க அவன் சின்னக்குழந்தை ஒன்றை தூக்கி வைத்தபடியே ” நாளைக்கு நீங்கள் எந்தவொரு பயமும் இல்லாமல், யாருக்கும் அடிமை இல்லாமல் சிரித்து வாழ வேணும் என்பதற்காகத்தானே நாங்கள் இன்றைக்கு நெருப்பு ஆற்றுக்குள்ளே நீச்சலடிக்கிறோம் “என்று சொல்வது இன்னும் என் தேசத்தின் காற்றினில் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
உலகமுழுதும் மானுட விடுதலைக்காக போரடிய அனைவரும் தாங்கள் உயிருடன் இருந்து விடுதலையின் இனிமையை அனுபவிப்பதற்காக போராடவே இல்லை. இன்று நாம் புலம்பெயர் வாழ்வினுள் அனுபவிக்கும் மானுட உரிமைகள், சீரான வாழ்க்கை முறை எல்லாமே யாரோ ஒருவரோ பலரோ தம்மையே அர்ப்பணித்து எடுத்து தந்து சென்றுள்ளவை ஆகும்.
அடிமைத்தனத்துள் வாழும் தம் மக்கள் விடுதலைப் பேரொளிக்குள் மகிழ்வுடன் வாழும் அந்த நாட்களை கற்பனைக்குள் கண்டபடியே விடுதலைக்கான மறவர்கள் இருளுக்குள் நடந்து இருக்கிறார்கள்.
இதனையே மாகவி பாரதியும், ‘பரிதியின் பேரொளி வானிடை கண்டோம், பார்மிசை நின்னொளி காணுதற்கு அலைந்தோம்’ என்று பாடியிருக்கிறான்.
என் தேசத்தின் புதல்வர்களும் இதனையே நிதமும் எண்ணிபடியே நடந்திருக்கிறார்கள்.
விடுதலை கிடைக்கும், அரியணை ஏறலாம், அரசாட்சி செய்யலாம் என்ற எந்தவொரு அற்ப கனவுகளும் இன்றி வெகு இயல்பாக, எனது தேசத்து குழந்தை விடுதலையின் முழு வீரியத்தையும் பெறல் வேணும், அச்சமின்றி அது சிரிக்கும் சிரிப்பு ஒன்று போதும் என்றே போராடினார்கள்.
தேசியத்தலைவர் மிகவும் கோபப்பட்ட தருணங்களில் ஒன்றை காண நேர்ந்தும் இத்தகைய குழந்தை சம்பந்தமான சம்பவம் ஒன்றிலேயே..
83ல், ஒருமுறை, யாழ்.நகரை அண்டிய நகரம் ஒன்றில் ஒரு வீட்டின் அறையில் மூன்று தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் வாடகைக்கு இருந்தார்கள். அந்த வீடு இராணுவ புலனாய்வின் மோப்பத்துள் விழுந்துள்ளதை உணர்ந்து கொண்ட போராளிகள் அந்த அறையை காலி செய்து வேறு இடம் சென்றார்கள்.
இடம் மாறும்போது பழைய இடத்தில் இருந்த பொருட்களை கணக்கு எடுத்து மீள் சரிபார்த்தல் என்பது ஒரு இயக்க வழமை..அப்போது ஒரு சயனைட் குப்பி குறைவாக இருந்தது. தலைவர் மிகவும் கோபத்துடன் ‘ அந்த வீட்டில் சின்ன பிள்ளைகள் இருக்கு..எங்கே சயனைட் குப்பியை வைத்து மறந்து வந்திருக்கிறீர்கள். யாராவது குழந்தை அந்த குப்பியை எடுத்து தவறுதலாக கடித்து ஏதேனும் நடந்தால் நடக்கிறது வேறை. இந்த குழந்தைகள் விடுதலை தேசத்தில் வாழவேணும் என்பதற்காகதானே இத்தனை பாடுபடுகின்றோம். உடனே போய் வடிவாக தேடி குப்பியுடன் வாருங்கள். இல்லையென்றால் வரவேண்டாம்’ என்று அனுப்பினார்.
இவை இப்போது வெறும் சம்பவங்களாக தெரியலாம். ஆனால், இந்த இனத்தின் விடுதலைக்காக புறப்பட்டவர்கள் தமது பாதை பற்றியும் அதன் மீதான பயணத்தின் நோவுகள், வலிகள், மரணங்கள் என்பன பற்றிய முழுமையான தெளிவுடனேயே பாதம் பதித்தவர்கள் என்பதை புரிந்துகொள்ள இவை உதவும் என்பது திண்ணம்.
இருளுக்குள்ளாக நடந்த பொழுதுகளில், பக்கத்தில் மரணத்தை மிகமிக அருகாக சந்தித்த நேரங்களில்,
உடல்தளரும் பசியும் தாகமும் ஏற்பட்ட பொழுதுகளில், கொடும் சிறைகளுக்குள் வாடிய சமயங்களில்,
எங்கள் தோழர்கள், தோழியர்க்கு நாளைய தலைமுறை வெளிச்சத்தில் வாழவே இன்று நாம் தாங்கும் துன்பங்கள் என்ற நினைப்பே ஆயிரம் லட்சம் மடங்கு உறுதியையும் மனநிறைவையும் தந்திருக்கும்.
உலகம் இத்தகைய மனிதர்களின் செயற்பாடுகளாலேயே அசைகின்றது. உலக அசைவியக்கமே இவர்கள்தான்.
இன்றைக்கும் யாரோ ஒருவரோ பலரோ இருளுக்குள் நடந்து கொண்டிருப்பார்கள். நாளைய விடுதலை வெளிச்சத்துக்காக.
அவர்களே மாவீரர்களாகவும் தேசியத்தின் புதல்வர்களாகவும் வணங்கத்தக்கவர்கள்.
-ச.ச.முத்து
Leave a Reply

Your email address will not be published.