கனமழை வெள்ளத்தால் பொலிகண்டி மக்கள் இடப்பெயர்வு! வழமையான பணிகளும் ஸ்தம்பிதம்;

கனமழை வெள்ளத்தால் பொலிகண்டி மக்கள் இடப்பெயர்வு! வழமையான பணிகளும் ஸ்தம்பிதம்;

நாடெங்கிலும் தற்பொழுது பெய்து வரும் கன மழையையடுத்து பொலிகண்டி கரையோரப்பகுதிகளில் வாழும் சுமார் 130 குடும்பங்களைச்சேர்ந்த 463 பேர் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டு பொதுநோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டும் எனையவர்கள் முகாங்களிலும் உறவினர் வீடுகளிலும் தங்கிவருகின்றனர் இவர்களுக்கான உதவிகளை கந்தவனக்கடவை ஆலய சூழலிலுள்ள அன்னதான சபைகள் மற்றும் பொலிஸார்,பிரதேச செயலகம்,அரசியல்க்கட்சிகள்,கிராம மட்ட இளைஞர் குழுக்கள் என்பன வழங்க முன்வந்துள்ளன.

இதன்படி பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்குட்பட்ட பொலிகண்டி கிழக்கு ஜெ/394 கிராமசேவகர் பிரிவிலுள்ள பொலிகண்டி குழந்தையேசு ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் வாழும் சுமார் 70 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 247 பேர்களும் வலிவடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நிலவன் குடியிருப்பில் வாழும் சுமார் 44 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 155 பேர்களில் சிலர் தற்போது பொலிகண்டி பொது நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை பொலிகண்டி மேற்கு ஜெ/393 கிராம சேவகர் பிரிவில் வலி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து பொலிகண்டி மேற்கு சின்னவளை முகாமில் வாழும் சுமார் 09 குடும்பங்களைச்சேர்ந்த சுமார் 43 பேர் இதேமுகாமில் மேட்டு நிலப்பரப்பில் தற்காலிக குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர். என்பதுடன் பொலிகண்டி ஊறணிபகுதியில் தாழ்நிலப்பரப்பில் வாழ்ந்து வந்த சுமார் 7 குடும்பங்களைசேர்ந்த சுமார் 28 நிரந்தர குடியிருப்பாளர்கள் தத்தம் உறவினர் வீடுகளில் தங்கிவருகின்றனர்

இம்மக்களின் அத்தியவசிய தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டு கந்தவனம் கல்யாண வேலவர் அன்னதானசபை மற்றும் ஒன்பதாம் திருவிழா அன்னதானசபை என்பன மதியம் சமைத்த உணவுவகைகளை வழங்கி வருகின்றதுடன் காலை மாலை வேளைகளில் பாண்,பிஸ்கட்,சுடான பானங்கள்,உலர்உணவுகள்,போன்றவற்றை பொலீஸார்,அரசியல்கட்சிகள்,கிராமமட்ட இளைஞர் குழுக்கள்,வர்த்தகநிலையங்கள்,மற்றும் பிரதேச செயலகம் ஆகியன ஒருங்கமைத்து வழங்கிவருகின்றது

எனினும் தொடர்ந்தும் மழை பெய்யவுள்ளதாக வானிலை அவதானநிலையங்கள் எதிர்வு கூறியுள்ள இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தற்போதைக்கு தத்தம் வாழ்விடங்களில் வாழமுடியாத நிர்க்கதியான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் உடமை இழப்புக்கள் தொடர்ந்த வண்ணமிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனைவிட தற்பொது பெய்துவரும் கனமழையால் பொலிகண்டியிலுள்ள உள்ளகக்குடியிருப்புக்களில் பலவீதிகள் குளங்கள்,கிணறுகள், வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதோடு பாடசாலை மாணவர்கள்,அரச ஊழியர்கள்,கடற்தொழிலாளர்கள் எனையவர்களது செயற்பாடுகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதைக்காணக்கூடியதாகவுள்ளது.

செய்தித் தொகுப்பு : கா.கணேசா விஜியந்தன்

Leave a Reply

Your email address will not be published.