இலங்கை செல்லும் பிரித்தானியர்களுக்கு, பிரித்தானியா அரசு எச்சரிக்கை!

இலங்கை செல்லும் பிரித்தானியர்களுக்கு, பிரித்தானியா அரசு எச்சரிக்கை!

இலங்கை செல்லும் பிரித்தானியர்கள் அங்கு ஜனவரி 8ம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரகால வன்முறைகள் குறித்து அவதானமாக இருக்கும்படி பிரித்தானிய அரசு எச்சரித்திருக்கிறது.

வெளிநாடு மற்றும் பொதுநலவாய நாடுகளுக்கான அமைச்சு இன்று வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தலில், “இலங்கையில் தேர்தல் கூட்டங்களும், பிரச்சார நடவடிக்கைகளும் அடிக்கடி வன்முறை நிகழ்வுகளாக மாறியிருக்கின்றன” என்றும், ஆகவே தேர்தல் கூட்டங்களையும், பிரச்சாரங்களையும் தவிர்க்கும்படியும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

தேர்தல் இடம்பெறுவதற்கும் சுமார் 35 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரங்களும், தேர்தல் வன்முறைகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் இலங்கைக்குச் சுற்றுலா சென்றுள்ள இங்கிலாந்து அணி டிசம்பர் 16 வரையும் சுமார் ஏழு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடி வருகின்றது.

இதன்பின்னணியில், இலங்கை செல்லும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இருகின்றன.

பாதுகாப்பு அமைச்சின் முன்அனுமதியின்றி வெளிநாட்டவர்கள் வடக்கிற்குச் செல்வது தடைசெய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டியுள்ள பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சு, பிரித்தானியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டுப் பயணிகள் வடமாகணம் செல்லுவதற்குப் பாதுகாப்புப் படையினர் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக தெரிவித்திருக்கிறது.

“வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை வைத்திருக்கும் வடக்கிற்குச் செல்லும் முன்னர் அனைவரும் பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதியினைப் பெறவேண்டும். அங்கே இராணுவ நடவடிக்கைகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. பாதுகாப்புப் படையினரின் கட்டளைகளை மதிக்கவேண்டிய அதேவேளை நிலக் கண்ணிவெடிகள் குறித்த சமிக்ஞைகளையும் கவனிக்கவேண்டும்,” என்று அந்த பயண எச்சரிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இவ்வருட முற்பகுதியில் பேருவளை மற்றும் அளுத்கம போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைகள் குறித்தும், அவற்றின்போது நான்கு பேர் கொல்லப்பட்டதோடு, மேலும் பலர் காயமடைந்ததுள்ளமையும், வியாபார ஸ்தாபனங்களுக்கும், பொதுமக்களின் சொத்துகளுக்கும் ஏற்பட்ட அழிவுகளையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த அறிக்கை, இந்த இரண்டு இடங்களும் உல்லாசப் பயணிகள் தங்கும் ஹோட்டல்களுக்கு அண்மையில் அமைந்திருப்பதையும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது.

“அதனைவிட, எவாஞ்சலிக்கல் கிறீஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் எதிராக ஆங்காங்கே வன்முறைகள் இடம்பெற்றிருக்கின்றன. இவை குறித்து அவதானமாக இருப்பதோடு, ஆர்பாட்ட நிகழ்வுகளையும் தவிர்த்துக் கொள்ளுங்கள்,” என்று அந்த அறிவுறுத்தலில் கேட்கப்பட்டிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.