தன்னால் முன்வைக்கப்பட்ட பிரேரணை தொடர்பில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. என கூறி வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், இன்று நடைபெற்ற 20வது சபை அமர்வின் போது செங்கோலை தூக்கி வீசிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் சிவாஜிலிங்கம் ஒரு பிரேரணையினை முன்மொழிந்திருந்தார். அதில் குறிப்பாக தமிழர் தாயகத்தில் நடைபெற்றது இன அழிப்பு என இச்சபை நம்புகின்றது. என கூறப்பட்டிருந்தது.
குறித்த பிரேரணையினை நிறைவேற்ற வேண்டாம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமை மாகாணசபையிடம் கேட்டிருந்தது. இந்நிலையில் குறித்த பிரேரணை 6மாதங்களின் பின்னர் இன்று சபைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது குறித்த பிரேரணையினை சபைக்கு எடுப்பதா இல்லையா என சபையிடம் கேட்கப்பட்டது.
அதற்கு சபை அமைதியாக சம்மதம் தெரிவித்த நிலையில், குறித்த பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு முன்மொழியப்பட்டு வழிமொழியவும் பட்டது. இந்நிலையில் அதனை முழுமையான பிரேரணையாக்கி எதிர்வரும் தைமாதம் முன்மொழியுமாறு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் சபையில் கேட்டுக் கொண்டார்.
ஆனால் பிரேரணையினை வாக்கெடுப்பிற்கு விடுமாறு சிவாஜிலிங்கம் கேட்டார். ஆனால் வாக்கெடுப்பிற்கு விடுவதற்கு மறுப்பு தெரிவித்த அவைத்தலைவர் எதிர்வரும் தைமாதம் அதனை எடுத்துக் கொள்வதாக கூறினார்.
இதனையடுத்து ஆத்திரமடைந்த சிவாஜிலிங்கம் அவை தலைவர் ஆசனத்தின் முன்னால் இருந்த செங்கோலை தூக்கி வீசினார். இதனால் சபையில் பெரும் பரபரப்பு உண்டானது. எனினும் உடனடியாக சபை ஒத்திவைக்கப்பட்டது.