பிளஸ் 2 பரீட்சையில் 1170 மதிப்பெண் பெற்ற ஈழத்து மாணவி! மருத்துவம் படிக்க மறுத்த தமிழகம்
ஈரோடு மாவட்டம் அரச்சலூர் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா (வயது 45). பெயிண்டர். 1990–ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து தமிழகத்துக்கு அகதியாக வந்தார். இவருக்கு மனைவி மற்றும் நந்தினி (18), அனுசியா (17), நவீன் (15) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.
இதில் மூத்த மகள் நந்தினி அரச்சலூர் நவரசம் மெட்ரிக் பள்ளியில் கடந்த ஆண்டு பிளஸ்–2 பொதுத் தேர்வில் 1200–க்கு 1170 மதிப்பெண் பெற்றார். மருத்துவ கட்–ஆப் 197.5 ஆக இருந்தது. மெடிக்கலுக்கு படிக்க தகுதியானவராக இருந்தார்.
இதையடுத்து சென்னை மருத்துவ கவுன்சிலிங்கிற்கு சென்றார். ஆனால் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டத்திட்டபடி அகதியான நந்தினிக்கு எம்.பி.பி.எஸ். படிக்க அனுமதி மறுக்கப்பட்டது. என்ஜினீயரிங் வேண்டுமானால் படிக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் அதற்கு நந்தினி ஒப்புக்கொள்ளவில்லை.
சிறு வயதில் இருந்தே டாக்டருக்கு படிக்க வேண்டும் என்ற கனவில் இருந்த நந்தினிக்கு இது மிகவும் ஏமாற்றத்தை தந்தது. ஆனால் அதே நேரத்தில் எப்படியும் எம்.பி.பி.எஸ். படிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தார். அதன் பின்னர் இலங்கை அகதிகள் மறுவாழ்வு ஆணையரிடம் மனு கொடுத்தார்.
இந்த நிலையில் இலங்கையை சேர்ந்த தனியார் அறக்கட்டளை நந்தினியின் நிலைமையை இணைய தளம் மூலம் அறிந்து கொண்டது. உடனே அவர்கள் நந்தினியின் பெற்றோரை தொடர்பு கொண்டு இலங்கைக்கு அழைத்தனர். நந்தினியும் இலங்கை புறப்பட்டு சென்றார்.
அதன்பின்னர் சீனா நாட்டில் சென்னியாங் நகரில் உள்ள தனியார் மெடிக்கல் கல்லூரி எம்.பி.பி.எஸ். சீட்டு தர முன்வந்தது. இதையடுத்து புதிய பாஸ்போர்ட்டு எடுக்கப்பட்டு இலங்கையில் இருந்து சீனா புறப்பட்டு சென்றார். அங்கு தற்போது எம்.பி.பி.எஸ். படித்து வருவதாக நந்தினியின் தந்தை ராஜா தொவித்தார்.
மேலும் அவர் கூறும்போது, தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிக்க முடியாது என கூறியபோது, எனது மகள் கவலை அடைந்தார். இங்கு அரசு கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு இருந்தது. ஆனால் இப்போது தனியார் கல்லூரி என்பதால் வருடத்திற்கு ரூ.7 லட்சம் செலவாகும். இதில் பாதி தொகை மட்டுமே அறக்கட்டளை ஏற்கும். மீதியை நான் கஷ்டப்பட்டு கொடுக்க வேண்டும். இருப்பினும் மகளின் ஆசை நிறைவேறியதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது மகளும் மகிழ்ச்சியாக இருக்கிறாள்’’ என்றார்.