திருப்பதி வெங்கடாசலபதி ஆலயம் உலக வாழ் இந்துக்களின் புனித ஸ்தலம். கிறிஸ்தவர்களுக்கு வத்திகானும், இஸ்லாமியர்களுக்கு மக்காவும் எப்படியோ, அப்படியே இந்துக்களுக்கு திருப்பதி ஆகும். இந்நிலையில் இங்கே வாழும் இந்துக்களை பந்தாடிவிட்டு, உலக இந்துக்களின் கடவுள் திருப்பதி வெங்கடாசலபதியின் திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்றாடுவது நியாயமா?
நம் நாட்டில் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மதங்களை பின்பற்றும் மக்களுக்கு எதிராக தீவிரவாதத்தை வளர்த்து விட்டு, பெளத்த சகோதரர்களுடன் நமக்கு இருக்கின்ற நல்லுறவை கெடுக்கும் தீவிரவாதிகளுக்கு ஆசீர்வாதம் வழங்கி விட்டு, இப்போது வெங்கடாசலபதியின் அருளை கோருவது நியாயமாகுமா? என கொழும்பு கிருலப்பனையில் நேற்று நடைபெற்ற பொது எதிரணியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கேள்வி எழுப்பினார்.
தகர்த்தெறியப்பட்ட எத்தனையோ அம்மன், சிவன், முருகன், விஷ்ணு, விநாயகன் ஆலயங்களின் பட்டியல் எங்களிடம் உண்டு. சமகாலத்தில் தம்புள்ளையிலும், கொழும்பு கொள்ளுப்பிட்டியிலும், வடக்கில் மயிலிட்டியிலும் தகர்த்தெறியப்பட்டு காணாமல் போன ஆலய விபரங்களும் எம்மிடம் உண்டு. இவற்றை சிங்கள மக்கள் செய்வதில்லை. ஏனெனில் இந்த ஆலயங்களில் அவர்களும் வந்து வணங்குகிறார்கள். இவற்றை யார் செய்வது என்பது ஒரு பகிரங்க இரகசியம்.