வீட்டில் அடிக்கடி செய்யும் இனிப்பு பண்டம் என்றால் அது கேசரியாகவோ, பாயசமாகவோ தான் இருக்கும். கேசரியில் சேர்க்கப்படும், முந்திரிப் பருப்பு, திராட்சை போன்ற பொருட்களில் சுவையும், சத்தும் அதிகம். ஆனால் கேசரி என்றால் அது உடனே நினைவுக்கு வரும் நிறம் மஞ்சள் கலந்த ஆரஞ்சு தான்.
ஏன் கேசரியைக் கலராகத்தான் சாப்பிட வேண்டுமா? கேசரியில் வண்ணப் பொடி சேர்க்காமல் செய்யக் கூடாதா என்று வண்ணப் பொடிகள் பற்றி அறிந்த பலரும் தற்போது எழுப்புகின்றனர்.
ஏன் என்றால், கேசரியில் சேர்க்கப்படும் கேசரி பவுடரில் கார்ஸினோஜன் என்ற பொருள் இருக்கிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியது என்பதுதான் அதிர்ச்சி கலந்த உண்மை.
கேசரியை மட்டும் முதலில் நாம் கூறக் காரணமே, அந்த பவுடருக்குப் பெயரே கேசரிப் பவுடர் என்று வந்ததால்தான்.
அது மட்டும் இல்லாமல், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் பஞ்சு மிட்டாயில் சேர்க்கப்படும் கலரிலும் கார்ஸினோஜன் தான் இருக்கிறது. ஆனால் பொதுமக்களுக்கு இன்னமும் இந்த கலர் பொடிகளைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாமல் உள்ளனர்.
கலர் கலராக உள்ள பொருட்களைச் சாப்பிடுவதிலும், அவற்றைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுப்பதிலும் மகிழ்ச்சி அடையும் மக்கள், அதனால் தமக்கும், தமது பிள்ளைகளுக்கு ஏற்படும் ஆபத்தை உணராமல் இருக்கிறார்கள்.
கேசரி, பஞ்சு மிட்டாய் மட்டும் அல்லாமல், பல வண்ணங்களில் வரும் அப்பளம், சிப்ஸ்கள், சில கடைகளில் விற்பனையாகும் பஜ்ஜி, போண்டாவிலும் கூட இந்த வண்ணப் பொடிகள் பயன்படுத்தப்படுகிறது.
பாதாம் அல்வா, பாதாம் கட்லி, லட்டு, ஜாங்கிரி, பலவிதமான கேக்குகள் எல்லாமே விஷ வண்ணங்கள். கடைகளில் ரசாயனம் சேர்க்கப்படுவது தவறு என்றாலும் விற்பனைக்காகத் தின்பண்டங்களில் வண்ணம் சேர்க்கப்படுகிறது.
வியாபாரத்துக்காக அவர்கள் செய்யலாம். நாம் வீடுகளிலும் இதே தவறை செய்யக் கூடாது.
அசைவ உணவாகிய சிக்கன் 65யில் பலரும் இந்த கேசரிப் பவுடரை சேர்க்கிறார்கள். எனவே, வெளியில் விற்கும் இதுபோன்ற அசைவப் பண்டங்களை தவிர்க்கலாம். இதனைக் கூட தவிர்த்து விட முடியும். ஆனால், அசைவ உணவுப் பிரியர்களின் முக்கிய உணவான பிரியாணியிலும் இந்த கேசரிப் பவுடர் முக்கிய இடம் வகிக்கிறதே.. இதுபோன்ற உணவகங்களுக்கு கேசரிப் படவுரின் விபரீதம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
ஒரு சிட்டிகைத்தானே பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்காமல், ஒரு சிட்டிகை என்று வாழ்நாள் முழுவதும் எத்தனை கிராம் வண்ணப் பொடிகளை உணவில் எடுத்துக் கொள்கிறோம் என்பதை நினைத்துப் பாருங்கள்.
சுத்தமான குங்குமப்பூத் தூள் தான் அசலான கேசரிப் பவுடர். குங்குமப்பூ மருந்து. புற்றுநோய்க்கு எதிரி. அதை விடுத்து சிந்தட்டிக் கேசரிப் பவுடர் எனும் விஷம் புற்றுநோயின் நண்பன். “குக்கீஸ்’ “குக்கீஸ்’ என்று விளம்பரமாகும் அனைத்து உணவுகளிலும் இதுபோன்ற பல ரசாயன விஷங்கள் உண்டு.