அவுஸ்திரேலிய சிட்னி நகரத்தில் மார்டின் வீதியில் உள்ள லிண்டன்ட் கபே என்னும் கட்டிடத்துக்கு மேல் உள்ள விடுதியில் 20 பொது மக்கள் ஆயுதம் தாங்கிய பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் நிலவுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் சிட்னியில் ஆயுதம் தாங்கியவர்களால் 20 பொதுமக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர்.
மேல் மாடியில் ஒரு கருப்பு நிறத்திலான கொடியொன்று வெளியில் பறக்க விடப்பட்டுள்ளது. அந்தக் கொடியில் இஸ்லாமிய எழுத்துக்கள் காணப்படுகின்ற’து.
தன் காரணமாக விமானங்கள் அனைத்தும் வேறு இடங்களுக்கு திசை மாற்றப்பட்டு வருகின்றது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தகவல்களின் பிரகாரம் 50 பொது மக்கள் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் சிட்னி போலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், சிட்னி கபே கட்டடத்தில் சிறை பிடிக்கப்பட்டிருந்தவர்களி்ல் 3 பேர் அங்கிருந்து தப்பித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அவர்கள் தப்பி வந்தனரா அல்லது விடுதலை செய்யப்பட்டனரா என்பது வெளிவரவில்லை. இருப்பினும் அவர்கள் தப்பி வந்திருக்கலாம் என்று அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்த செயலில் ஈடுபடும் நபர்களது நோக்கம் இன்னும் தெளிவில்லை என்றும், ஆனால் இது அரசியல் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அபோட் தெரிவித்துள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய தனி அரசு போராட்டத்திற்கு எதிராக அமெரிக்கா முன்னெடுத்துவரும் திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா பூரண ஆதரவளித்து வருகிறது.
பொது மக்கள் பணயக் கைதிகளாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கட்டிடத்தில் அமெரிக்க தொடர்பு அலுவலகமும் முன்னாள் பிரதமர் ஜோன் ஹொவார்டின் அலுவலகமும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.