வன்னிப் பாடசாலைகளில் காணப்படும் கற்றல், கற்பித்தல் சார் குறைபாடுகள் இந்தப் பகுதி மாணவர்களின் கல்வி நிலையில் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி போன்ற மாவட்டங்களில் தொடர்ந்தும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை, வகுப்பறை வசதியின்மை, ஆசிரியர் தங்குமிடமின்மை, தளபாட பிரச்சினைகளால் குறித்த பகுதிப் பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி நிலையில் வீழ்ச்சி ஏற்பட்டு வருவதாக அண்மைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்படியே இந்த நிலை தொடர்ந்தால் எதிர்காலத்தில் கல்வியறிவால் குறைவிருத்தியான சமூகமே வன்னியில் இருக்குமென எதிர்வு கூறப்படுகின்றது.
வன்னிப் பகுதியில் பின்தங்கிய கிராமங்களில் உள்ள பாடசாலைகளுக்கு அதிக மாணவர்கள் செல்கின்ற போதும் அங்கு கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லாமையால், பாடசாலை சென்று என்ன, செல்லாமல் விட்டு என்ன என்ற மனநிலையில் கல்வி பாதிக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது.
இங்கே பெரும்பாலான பாடசாலைகளில் கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் போன்ற பிரதான பாடங் களைக்கற்பிக்கும் ஆசிரியர் களுக்கும், முன்பள்ளிக் கல்வியை போதிக்கும் ஆசிரி யர்களுக்கும் பற்றாக்குறை காணப்படுகின்றது. சில பாடசாலைகளில் வருடக்கணக்காக இந்த நிலைமை நீடிக்கின்றது.
போருக்கு முன்னரும் வன்னியில் இதே ஆசிரியர் பற்றாக்குறை நிலவத்தான் செய்தது. அப்போது விடுதலைப் புலிகள் தமது கல்விக்கழகத்தின் மூலம் கணிதம், விஞ்ஞானம், தமிழ், ஆங்கிலம் போன்ற பாடங்களுக்குப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்ததுடன் அவர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவுகளையும் வழங்கி வந்தனர். அதுபோல் சில மனிதாபிமானத் தொண்டு நிறுவனங்களும் ஆசிரியப் பற்றாக்குறையைத் தவிர்க்கும் பணிகளில் ஈடுபட்டன.
இறுதிப் போரின் அனைத்து வடுக்களையும் தாங்கிக்கொண்டு தகரக் கொட்டகைகளிலும், தறப்பாள் கூடாரங்களிலும் வாழ்ந்துவரும் வன்னி மாணவர்கள் தொடர்ந்தும் கற்பதற்கு ஏற்ற சூழலை இழந்து வருகின்றனர்.
இந்தப் பகுதிப் பாடசாலைகளில் கற்பித்து வரும் வெளிமாவட்ட ஆசிரியர்களில் பலர் எப்போது தமக்கு இடமாற்றம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் தான் சேவையாற்றி வருகின்றார்கள். இதற்கும் காரணங்கள் உண்டு. வன்னியில் உள்ள பாடசாலைகளில் சீரான ஆசிரியர் விடுதிகளோ, பாதுகாப்புக்களோ, போக்குவரத்து வசதிகளோ இல்லை. பல ஆசிரியர்கள் கால்நடையாகச் சென்று கற்பிக்கும் நிலையில்தான் மனம் நொந்து கொள்கிறார்கள்.
ஆசிரியர் பற்றாக்குறையைப் போக்க பெற்றோர்களும், மாணவர்களும், நலன்விரும்பிகளும் உரிய தரப்பினரிடம் கோரிக்கைகளை முன்வைத்தும் அது செல்லுபடியானதாகத் தெரியவில்லை. கடந்த 21 ஆம் திகதி கூட கிளிநொச்சி வலயக் கல்வி அலுவலகத்துக்கு முன்பாக ஐயனார்புரம் அ.த.க.பாடசாலை, வேரவில் இந்து மகா வித்தியாலயம், கிராஞ்சி அ.த.க.பாடசாலை ஆகியவற்றில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் திரண்டிருந்ததுடன், அதிகாரிகளுடனும் தமது பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படுவது தொடர்பாகக் கலந்துரையாடினார்கள். ஆனால் இதனால் எந்த விளைவுகளும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.
வெளிமாவட்ட ஆசிரியர்கள் இங்கு வந்து கற்பிக்கத் தயக்கம் காட்டி வரும் நிலையில், வன்னியை நிரந்தர இடமாகக் கொண்ட தொண்டராசிரியர்கள் குறைந்தளவான ஊதியத்துடன் பத்து வருடங்களுக்கும் மேலாகக் கற்பித்து வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. நியமனம் வழங்குவதற்கான இழுத்தடிப்புக்கள் மட்டும் நீடித்து வருகின்றது.
முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா வடக்கு, மன்னார் போன்ற பகுதிப் பாடசாலைகளில் 700 வரையிலான தொண்டர் ஆசிரியர்கள் பல வருடங்கள் நியமனத்தை எதிர்பார்த்துக் கற்பித்து வருகின்றார்கள். தற்போது வருமானம் ஏதுமற்ற நிலையில் இவர்களது நிலை பெரும் துன்பம் நிறைந்ததாகவும் அடுத்து என்ன செய்வதுதென்று தெரி யாத நிலையிலும் அவல வாழ்க்கை வாழ்கின்றார்கள்.
2009 ஆம் ஆண்டு வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கப்பட்ட போது கூட வன்னிப்பகுதித் தொண்டர் ஆசிரியர்கள் எவருக்குமே நியமனம் வழங்கப்படாது புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். நீண்ட காலமாகக் கற்பிக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதனூடாகவே ஆசிரிய வளப் பற்றாக்குறையைத் தவிர்க்க முடியும் எனப் பல கல்வியியலாளர்களும் கருதுகின்றனர்.
இப்படியே வன்னியில் ஆசிரியப் பற்றாக்குறை தொடர்ந்தும் நீடிக்குமானால் இனி வரும் காலங்களில் குறைவிருத்தியான சமூகமொன்றே அங்கு உருவாகும் என்பதை மறுக்கவியலாது.