கடற்படையினரின் உச்ச கண்காணிப்பின் மத்தியில், மக்களின் உணர்வுக்கொந்தளிப்புடன் எழுவைதீவு மீனவரின் உடல் நல்லடக்கம்.

கடற்படையினரின் உச்ச கண்காணிப்பின் மத்தியில், மக்களின் உணர்வுக்கொந்தளிப்புடன் எழுவைதீவு மீனவரின் உடல் நல்லடக்கம்.

நடுக்கடலில், கடற்படையினரின் படகினால் மோதிப்படுகொலை செய்யப்பட்ட மீனவரான, எழுவைதீவு புனித தோமையார் கடற்றொழிலாளர் சங்கத்தின் உபதலைவருமான அலெக்ஸாண்டர் அன்ரனி ஜேசுதாசனின் உடல் கடற்படையினரதும், கடற்படைப்புலனாய்வாளர்களின் உச்ச கண்காணிப்பின்மத்தியில், மக்களின் உணர்வுக்கொந்தளிப்புடனும், கண்ணீருடனும் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபனும் கலந்துகொணடார்.

மரணமான மீனவரின் இறுதிக்கிரியைகள் இன்று 22.12.2014 திங்கட்கிழமை ஊர்காவற்றுறை, எழுவைதீவில் இடம்பெற்றன. இதில் கலந்துகொண்டு மாகாணசபை உறுப்பினரான பா.கஜதீபன் இரங்கலுரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் தெரிவிக்கையில்
பெரிய குடும்பமொன்றின் தலைவரான அன்ரனி ஜேசுதாசன் அவர்கள் கடற்றொழிலை மேற்கொண்டே தனது குடும்பத்தைக்காப்பாற்றி வந்திருக்கிறார். வழமை போல தொழிலுக்குச்சென்ற அவரின் படகை கடற்படையினரின் அதிவேகப்படகினால் மோதி விட்டு, அவர் கடலில் வீழ்ந்து தத்தளிக்கும் போது காப்பாற்றாமல் சென்றுள்ளனர். சுமார் முக்கால்மணிநேரத்தின் பின்னரே ஜேசுதாசன் அவர்கள் தனது நிலையை உறவினர்களுக்கு அறிவித்த போது அவர்களால் காப்பாற்றப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணமாகியுள்ளார். கடற்படையினர் தம்மால் மோதப்பட்டவரை, மனிதாபிமானத்துடன் உடனே காப்பாற்றியிருந்தால் அவர் உயிர் பிழைத்திருக்கமுடிந்திருக்கும். ஆனால் அவரைக்காப்பாற்றாமல் ஓர் கொலைக்கு சமமான மரணத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

தம்மில் ஒருவரான தமது உறவு அநியாயமாக கொலை செய்யப்பட்டதற்கு நீதி வழங்கப்பட வேண்டும் என மக்கள் கொந்தளிக்கின்ற சூழ்நிலையில், மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இன்று இங்கு வந்துள்ள கடற்படை உயரதிகாரிகள், இவ்விடயத்தைப்பெரிதுபடுத்தவேண்டாமெனவும், இழப்பீடுகளும், வேலைவாய்ப்பும் தருவதாகவும், இவ்விடயத்தை அப்படியே விட்டுவிடுமாறும் கூறியுள்ளனர். ஆனால் இதை ஏற்காத மக்கள் அதை எழுத்தில் தருமாறு கேட்டவுடன் அதிகாரிகள் மக்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்காமல் நடந்துகொண்டுள்ளனர். எமது உறவுகளை எதுவும் செய்யலாம், யாரும் எதுவும் கேட்க முடியாது எனும் எதேச்சதிகார சிந்தனை இங்கும் நிலவியுள்ளது. இதைக்கண்டித்து மக்கள் போராட்டமொன்றைமுன்னெடுக்கும் மனநிலையில் காணப்பட்ட போதும், காலச்சூழ்நிலைகருதியும், இறுதி அடக்க நிகழ்வு கருதியும் பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது.. பெரிய குடும்பமொன்றின் குடும்பஸ்தரான ஜேசுதாசன் அவர்களின் கொலைக்கு சட்டரீதியாக அரசினால் வழங்கப்படவேண்டிய இழப்பீடுகள் உரியவிதத்தில் உடனே வழங்கப்படுவதுடன், கொலைக்கான நீதியும் வழங்கப்பட வேண்டும் என இவ்விடத்தில் நான் கோரிக்கையொன்றை விடுக்க விரும்புவதுடன், வழமைபோல இவ்விடயம் அரசினாலும்,படையினராலும் ஏமாற்றப்படுமானால், நீதியைப்பெற்றுக்கொள்வதற்காக எமது மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும் போது, அதில் நானும் கலந்துகொண்டு போராடுவேன். எனவும் அவர் மேலும் தெரிவித்தார். பின்னர் மக்களின் கடற்படைனருக்கு எதிரான மனக்கொந்தளிப்பின் மத்தியிலும் , கடற்படையினர் மற்றும் புலனாய்வுப்பிரிவினரின் கடும் கண்காணிப்பிலும் அன்ரனி ஜேசுதாசனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மாகாணசபை உறுப்பினருடன் வல்வெட்டித்துறை நகரசபை உப தலைவர் க.சதீஷும் உடன் சென்றிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.