எல்லோருமே தங்களை அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். சிலருக்கு அதற்கான நல்ல ரசனை இருக்கும். நேரம் இருக்கும். ஆனால், சிலருக்கு நேரம் இருக்காது அல்லது எப்படி அழகு படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ரசனை இருக்காது. அவ்வளவுதான்.
என்னதான் இருந்தாலும் தெரிந்தும், தெரியாமலும் அழகு விஷயத்தில் நாம் செய்யும் சில சின்ன சின்னத் தவறுகள் என்னவென்று தெரியுமா.
வாருங்கள் பார்க்கலாம்..
மேக்கப்பில் அலட்சியம்
மேக்கப் போட்டுக் கொண்டு வெளியே செல்லும் போது அழகாக பளிச்சென்றுதான் இருப்போம். ஆனால் வீட்டுக்கு வந்ததும் அப்படியே பளிச்சென்று இருக்க வேண்டும் என நினைக்காமல் போட்ட மேக்கப்புகளை உடனடியாக கலைத்துவிட வேண்டும்.
கண்டீஷனர் பயன்படுத்தும் போது,
கண்டீஷனர் என்பது தலை முடியை சில்கியாக வைத்துக் கொள்ள உபயோகிக்கும் வழியாகும். ஷாம்பு போட்டி தலையை கழுவிய பிறகு கண்டீஷனர் போட வேண்டும். கண்டீஷனரை எக்காரணத்தைக் கொண்டும் தலையில் அதாவது தலையின் சருமப் பகுதியில் போடக் கூடாது. மேலும், கண்டீஷனர் போட்டு விட்டு பிறகு ஷாம்பு போட்டு குளிக்கவும் கூடவேக் கூடாது.
பர்ஃப்யூம் போடுபவரா நீங்கள்…
உடலில் வியர்வை நாற்றத்தை போக்கி எப்போதும் ஒரு வித வாசனையுடன் நம்மை வைத்துக் கொள்ள பர்ஃப்யூம் பயன்படுத்துகிறோம். ஆனால், பலரும் பர்ப்யூமை தோள்பட்டை இடுக்குகளில் போடுவார்கள். ஆனால் சிலருக்கு அது தெரியாமல் ஆடைகளில் பர்ஃப்யூம்களை தேய்த்துக் கொள்வார்கள். இதில் தோள்பட்டைக்கு இடுக்கில் பர்ஃப்யூம் போடுவதுதான் சிறந்தது. துணியில் போட்டால் அங்கு நிறம் மங்கும். பர்ஃப்யூம் வாசனையும் துணியின் வாசனையும் சேர்ந்து மோசமான வாசனைதான் வரும்.
கழுத்து மீது ஏன் அலட்சியம்
முகத்தை ஆயிரம் முறை கண்ணாடியில் பார்த்தாலும் அதில் ஒரு முறை கூட கழுத்தைப் பார்ப்பதில்லை. கழுத்து என்பதும் நமது முகத்தின் ஒரு பாகம் என்பதை அழகுக் கலைஞர்கள் அறிந்துள்ளனர். ஆனால் நாம் அறிய வேண்டியது மிகவும் முக்கியம். எந்த க்ரீமாக இருந்தாலும், சோப்பாக இருந்தாலும், பவுடர் முதல் ரோஸ் பவுடர் வரை முகத்துக்குப் போடும் எதையும் கழுத்துக்கும் போட்டு, முகத்தின் கலரும், கழுத்தின் கலரும் ஒரே மாதிரியாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ளுங்கள். முகத்துக்கு அதிகமாக மேக்கப் போட்டுவிட்டு கழுத்தை கருப்பாக விட்டுவிட்டால் அழகு எடுபடாமல் போய்விடும்.
கண்களுக்கு தேவையில்லாதது
மாஸ்சுரைசர் என்பது நமது சருமத்துக்கு மிகவும் அவசியமானது. வறட்சியான நிலையை போக்கி, சருமத்தை பொலிவுடனும், ஈரப் பதமாகவும் வைத்துக் கொள்ள மாய்ஸ்சுரைசர் பயன்படுகிறது. அதே சமயம், நமது கண்களைச் சுற்றி மாய்ஸ்சுரைசர் போடும் போது கண்கள் பொலிவிழந்துவிடும். எனவே, கண்களைச் சுற்றி மாய்ஸ்சுரைசர் போடுவதை தவிர்க்கலாம்.
தேய்த்து தேய்த்துக் குளியல்
பலரும் உடலை சுத்தப்படுத்துகிறேன் என்று சொல்லி உடலுக்கு அளவுக்கு அதிகமாக சோப்பைப் போட்டு தேய்த்து தேய்த்துக் குளிப்பார்கள். சிலர் குளியலறைக்குப் போனாலே அடுத்த பொழுது விடிந்து விடும் என்று கிண்டல் செய்வார்கள். அந்த அளவுக்கு குளிப்பதால் சருமத்துக்குத் தேவையான எண்ணெய், ஈரப் பதம் போன்றவையும் சோப்போடு சேர்ந்து போய்விடும் என்பதை நினைவில் கொண்டு அழுக்கு போகும் வகையில் மட்டும் குளித்துவிட்டு வாருங்கள்.
சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலும் இவை நமது அழகு விஷயத்தில் பெரிய பெரிய தவறுகளாக தெரிந்து விடும். எனவே கவனம் தேவை.