பொது எதிரணியுடன் இணைந்து நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு ஒன்றுபடுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுப்பதாக மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் ஏற்பாட்டில் காத்தான்குடி பிரதான வீதியில் இன்று நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன, மத பேதங்களை கடந்து சிங்கள, பௌத்த, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர், பறங்கியர் என அனைவரும் இந்தப் போராட்டத்தில் இணைந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
நாட்டை மீட்கும் இந்த பயணத்தில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உட்பட முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து என்னோடு கைகோர்த்து நிற்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகின்றது.
அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமான தமிழ் மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பு இருக்கின்றது. இந்த நல்ல பயணத்தில் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்காக எங்களோடு இணைந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நான் அழைப்பு விடுக்கின்றேன்.
இந்த நாட்டில் எல்லா இனமும் சமமானவர்கள் எல்லோருக்கும் அனைத்து சுதந்திரமும் உண்டு. எல்லோரும் இணைந்து நல்லாட்சியை ஏற்படுத்துவதே நமது சேவையாக இருக்கின்றது. அவரவர் மதங்களை பின்பற்ற கலாசாரங்களை பின்பற்ற சுதந்திரம் இருக்க வேண்டும்.
இந்த நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக ஒன்று சேர்ந்துள்ளார்கள். 2010 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சவை ஒரு நல்ல மனிதராக கண்டோம். போர் முடிந்த பிறகு அவருடைய அத்தனை விடயங்களிலும் மாற்றத்தைக் கண்டோம்.
இன்று தன்னை ஜனாதிபதியாக்கிய அத்தனை பேரையும் மறந்துவிட்டார் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் கொள்கையோ, பண்டார நாயக்காவின் கொள்கையோ இன்று அவரிடத்தில் இல்லை. அவரும் அவருடைய குடும்பமும் கொள்ளையடிப்பதற்கே இந்த நாட்டை பயன் படுத்திகின்றனர். என மேலும் தெரிவித்தார்.