பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்த்து மாதா தேவாலயத்தில் 68 வது அதிசம் நிகழ்ந்ததாக நேற்று அந்தத் தேவாலய குருமார் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்காக சிறப்பு பூசையும் அந்தத் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்டது.
1965ம் ஆண்டில் இருந்து முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில் இருந்த இத்தாலியைச் சொந்த லுவிகினா திறாவர்கோ என்ற கன்னியாஸ்த்திரி லூர்த்து மாதா தேவாலயத்திற்கு வந்து தொடாச்சியான பிராhத்தனையில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் அவர் தனது கால்களை அசைத்து தானே எழுந்து நின்றதாகவும் இது லூர்த்து மாதா தேவாலயத்தில் நடந்த 68 வது அதிசயம் என்றும் தேவாலய குருமார்கள் நேற்று அறிவித்தனர்.
1965 ம் ஆண்டு யூலை மாதம் 26 ம்திகதி முடக்குவாத நோய் தாக்கியதிலிருந்து பல்வேறு சிகிச்சைகளும் குறிப்பாக அறுவைச் சிகிச்சைகளும் கூட செய்யப்பட்ட போதும் அவர் எழுந்து நடக்க முடியாமல் சக்கர சாற்காலியிலேயே காலந்தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமாகியுள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மருத்துவத்துறையில் இது ஒரு அதிசயம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
1858 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி பெர்னடெட் என்ற மாடுமேய்க்கும் சிறுமிக்கு கன்னி மரியாள் காட்சியளித்த இடமே லூர்த்து மாதா தேவாலயமாக வழிபடப்பட்டு வருகிறது.
இந்த ஆலயத்தில் அருகிலுள்ள மலைக்குகையிலிருந்து ஊற்றெடுத்துப்பாயும் புனித நீரை பருகுவதன் மூலமும் அதில் நீராடுவதன் மூலமும் தங்களது தீராத நோய்கள் குணமடைவதாக நம்பும் மில்லியன் கணக்கான மக்கள் ஆண்டு தோறும் பிரான்சின் கீழ் பகுதியில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வருகின்றனர்.
இதுவரை லூர்த்து மாதாவின் அருளால் தங்களது நோய்கள் குணமடைந்ததாகவும் துன்பங்கள் நீங்கியதாகவும் ஏழாயிரம் பேர் சான்றுகளை சமர்ப்பித்த போதிலும் அவற்றில் 68 சம்பவங்களே அதிசயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த தேவாலயத்திற்கு ஐரோப்பாவில் உள்ள தமிழ் மக்கள் பெருந்தொகையாக தினசரி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.