Search

தனி ஈழத்தை உருவாக்க இந்தியா அமெ. கூட்டுச் சதி தேசப்பற்றுள்ள இயக்கம் குற்றச்சாட்டு !

.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ராஜ மரியாதையுடன் அழைத்துப் பேசும் இந்தியாவுக்கு, தமிழகத்தை சீனா கைப்பற்றும்போது தான் எல்லாமே தெரிய வரும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. இலங்கையில் ஈழ மொன்றை அமைப்பதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டுச்சதியில் இறங்கியுள்ளன. இலங்கை விடயத்தில் தேர்ச்சிபெற்ற நிருபமாராவ் அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டதன் நோக்கமும் இதுதான் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்திய அரசின் அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு, நேற்றுமுன் தினம் அந்நாட்டின் பிரதமர் கலாநிதி மன்மோகன்சிங், வெளிவிவகார அமைச்சர் கிருஷ்ணா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியது.
இதன் போது இந்திய முக்கியஸ்தர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் இலங்கையிலுள்ள சிங்கள அமைப்புகளினிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்நிலையில், கருத்து வெளியிட்ட தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச சமரசேகர கூறியவை வருமாறு:
இலங்கையைக் கூறுபோடுவதற்கு அமெரிக்காவும், இந்தியாவும் செயற்படுகின்றன. கூட்டமைப்பை இந்தியா அழைத்துப் பேசுவதன் பின்னணியிலும் அமெரிக்காதான் மறைமுகமாக செயற்பட்டுள்ளது.
சீனாவை அடக்கியாள்வதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்படும் அமெரிக்காவின் சுயநலத்தை காலப்போக்கில் இந்தியா உணரும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைக்கமைய அரசியல் தீர்வொன்றை வழங்குமாறு அந்நாடுகள் எமக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க முயற்சிக்கின்றன.
அவ்வாறு அதிகாரங்கள் பகிரப்பட்டால் அது தனி ஈழத்துக்கு வழிகோலும். இதுதான் மேற்கூறப்பட்ட நாடுகளின் எதிர்பார்ப்பாகும். கூட்டமைப்புக்கு ராஜமரியாதை கொடுத்து அழைத்துப்பேசும் இந்தியாவுக்குத் தமிழகத்தை சீனா கைப்பற்றும்போதுதான் இலங்கையின் அருமை தெரியவரும். அப்போதுதான் அவர்கள் அனைத்தையும் உணர்வர்.
தமிழர் பிரச்சினையை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கையிலெடுத்துள்ளதால் உலக நாடுகளுக்கிடையில் அது மோதலை உருவாக்கும் அவலநிலை தற்போது தோன்றியுள்ளது என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *