முல்லைத்தீவு மாவட்டம்,புதுக்குடியிருப்பில் மக்கள் அச்சத்தில்!

புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்ந்த குடும்பங்களிடம் குடும்ப விவரங்களை படையினர் திரட்டி வருகின்றனர். எந்தவித முன்னறிவித்தல்களும் இன்றி படைத்தரப்பு இத்தகைய நடவடிக்கையில் இறங்கியுள்ளதால் பொதுமக்களிடையே அச்சநிலை தோன்றியுள்ளது.

இறுதிக் கட்டப் போர் காரணமாக இடம்பெயர்ந்து பின் தமது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள மந்துவில், கோம்பாவில், புதுக்குடியிருப்பு மேற்கு இரணைப்பாலை, புதுக்குடியிருப்பு கிழக்கு சிவநகர் உட்பட பல பகுதிகளிலும் இவ்வாறு குடும்ப விவரங்களைச் சேகரிக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இராணுவ சிவில் அலுவலகத்தில் இருந்து வீடு வீடாகச் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடுகளில் தங்கியிருப்போரின் பெயர் விவரங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அத்துடன் இறுதிக் கட்டப் போரின்போது காணாமற் போனவர்கள், அங்கவீனர்களாக்கப்பட்டோர், தடுப்பு நிலையங்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்தோர் ஆகியோரின் விவரங்களையும் திரட்டி வருகின்றனர்.

விவரங்களைப் பதிவு செய்யும் காரணம் தொடர்பாக வீடுகளுக்கு செல்லும் படையினரிடம் பொது மக்கள் கேட்ட போது, ஜனாதிபதி செயலகத்துக்குத் தகவல்கள் உடனடியாக அனுப்ப வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே இந்தப் பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று படையினரால் கூறப்பட்டதாகப் பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஆயினும் எதற்காக ஜனாதிபதி செயலகத்துக்கு இந்த விவரங்கள் அனுப்பப்பட உள்ளன என்பது குறித்து படையினர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் இந்தப் பதிவில் ஏதேனும் மர்மங்கள் இருக்குமோ என்ற சந்தேகமும் அச்சமும் புதுக்குடியிருப்பு மக்களிடையே எழுந்துள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published.